Tamilnadu

கவனக்குறைவால் விபத்து ஏற்படுத்துவோரின் லைசென்ஸை ஏன் ரத்து செய்ய கூடாது? நீதிமன்றம் கேள்வி

சென்னை தாம்பரம் அடுத்த கேம்ப் ரோட்டில் வேகமாக வந்த கார் ஒன்று சாலையில் இருந்த தடுப்புகள் மீதும் மற்ற வாகன ஓட்டிகள் மீது தாருமாறாக மோதியதில் கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் ஊடகங்களில் வெளியானது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இன்று காலை வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் முன், இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகை செய்திகளை மேற்கோள் காட்டி, அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்படுத்தும் சம்பவங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.

இதுபோல் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டிச் செல்பவர்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். வேகமாக, கவனக்குறைவாக வாகனம் ஓட்டிச் சென்று மரணத்தை ஏற்படுத்தும் குற்றத்திற்கான தண்டனையை 2 ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ள நிலயில், இந்த சட்டப்பிரிவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்தும் விளக்கமளிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.