Tamilnadu

அந்நிய முதலீட்டில் சரிவை சந்தித்த தமிழகம் - உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெறும் நாடகமா?

ளதுவர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில் மற்றும் உள்நாட்டு வாணிப மேம்பாட்டுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2017-18ம் நிதியாண்டில் தமிழகத்தில் 3.47 பில்லியன் டாலராக இருந்த அந்நிய நேரடி முதலீடு நடப்பு நிதியாண்டில் 2.61 பில்லியன் டாலராக குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

கர்நாடாக, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் கடந்த ஆண்டை விட இந்த நித ஆண்டில் பெற்ற அந்நிய நேரடி முதலீடு குறைவாக இருந்த போதிலும், அவை தமிழகத்தை விட பல மடங்கு அதிகமாகவே முதலீட்டைப் பெற்றுள்ளன.

டெல்லி, 10.14 பில்லியன் டாலர் அந்நிய முதலீட்டை பெற்று உயர்ந்துள்ளது. தொழில்துறைக்கான சாதகமான சூழல்கள் தமிழகத்தில் இல்லாததால் வெளிநாட்டு நிறுவனங்கள் புதிதாக தொழில் தொடங்க தயக்கம் காட்டுகின்றன.

அதே சமயத்தில், ஏற்கெனவே உள்ள நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான உள்கட்டமைப்பிற்கும், தளவாடங்களை வாங்குவதற்கும் முதலீடு செய்யாததே இந்த கடும் வீழ்ச்சிக்கான காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுமட்டுமில்லாமல், உள்நாட்டு முதலீடும் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகம் வெகுவாகவே குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு 19,408 கோடி ரூபாய் உள்நாட்டு முதலீடு வரும் என எதிர்பார்த்த நிலையில், வெறும் 8384 கோடி ரூபாய் மட்டுமே வந்துள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015-ம் ஆண்டு முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாடும் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டது. 2015-ம் ஆண்டு 2.42 லட்சம் கோடி ரூபாயும், 2019-ம் ஆண்டு 3.431 கோடி ரூபாய்க்கு முதலீடு ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவித்தது தமிழக அரசு.

ஆனால், வர்த்தக அமைச்சகத்தின் தரவில், அந்நிய முதலீடு குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அப்படியானால் பல லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை பெற்றுள்ளோம் என்று தமிழக அரசு சொல்வதெல்லாம் வெற்று நாடகம் என்ற கேள்வி எழுந்துள்ளது.