Tamilnadu

முகிலனை கண்டுபிடிக்க முயற்சி எடுக்காத தமிழக அரசைக் கண்டித்து நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் 

சமூக செயற்பாட்டாளரும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் முகிலன். இவர் ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் விவகாரம், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் என மண்ணை பாதிக்கும் பிரச்சனைக்கானப் போராட்டங்களில் மிகவும் முக்கியப் பங்காற்றியவர்.

கடந்த பிப்ரவரி 15ம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பான முக்கியத் தகவலை அளித்தார். பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிவுற்ற பிறகு எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்கு ரயிலில் சென்றுள்ளார். இரவு 10.30 மணிக்கு நண்பர்களுடன் போனில் பேசியுள்ளார்.

அதற்குப்பிறகு அவரிடம் இருந்து எந்தவிதமான தகவலும் வரவில்லை. முகிலனை விரைவில் கண்டுபிடித்துத் தரக்கோரி சமூக இயக்கங்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

முகிலன் காணாமல்போய் 100 நாட்களை கடந்தும், இன்னும் அவரை காவல்துறையினர் கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் முகிலனை கண்டுபிடித்து தருமாறு தமிழக அரசுக்கும், காவல்துறையினருக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் நாளை (ஜூன் 1) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம், முகிலன் மீட்பு கூட்டியக்கம் சார்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொள்ள உள்ளனர்.