Tamilnadu

கூடுதல் மதிப்பெண் போட லஞ்சம் வாங்கிய 4 பேராசிரியர்கள் சஸ்பெண்ட் - அண்ணா பல்கலை அதிரடி!

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், தமிழகம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் பொறியியல் படிப்பை பயின்று வருகின்றனர்

இதில், வெளிநாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழக விடுதியிலேயே தங்கி கல்வி கற்று வருகின்றனர். ஆனால், பெரும்பாலும் வெளிநாடு வாழ் மாணவர்கள் வகுப்புகளுக்கு வருவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

மேலும், தேர்வு நேரங்களில் மட்டும் வெளிநாட்டில் இருந்து வருவதால் செமெஸ்டர் தேர்வுகளில் இது போன்ற மாணவர்கள் தோல்வியடைவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இது போன்று தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்களை மூளைச்சலவை செய்து, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கச் செய்து, விடைத்தாள் திருத்தும் போது கூடுதல் மதிப்பெண்களை வழங்க லட்ச கணக்கில் லஞ்சம் வாங்குவதாக பேராசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனை அடுத்து, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் குற்றச்சாட்டு உறுதியானதால், லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மற்றும் 4 பேராசிரியர்களை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.