Tamilnadu

அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா? துன்புறுத்துவதா? - நீதிபதிகள் கேள்வி!

தூத்துக்குடியைச் சேர்ந்த மோகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், துணை ஆட்சியரும் 107 மற்றும் 111 ஆகிய பிரிவுகளின் கீழ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிலருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சம்மன் மீது தொடர் நடவடிக்கை எடுக்க தடை விதிப்பதோடு, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த தடைவிதிக்க வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தர், ஹேமலதா அமர்வு," சட்டவிரோத கைது நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிட்டனர். ஸ்டெர்லைட் போராட்டங்கள் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டக்காரர்கள் சிலர் குற்றவாளிகள் என முடிவுக்கு வந்தது எப்படி என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

போராட்டம் அடிப்படை உரிமை என குறிப்பிட்ட நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பதே தமிழக அரசின் கொள்கை முடிவாக இருக்கும் நிலையில், அதே கருத்து கொண்டோரை துன்புறுத்துவது ஏன் என்று கேள்வியெழுப்பினர். அரசின் நோக்கம் மக்களைப் பாதுகாப்பதா அல்லது துன்புறுத்துவதா என்றும் காட்டமாக நீதிபதிகள் கேட்டனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக 107, 111 பிரிவுகளின் கீழ் அனுப்பப்பட்ட சம்மன்களில் இறுதி முடிவெடுக்கக் கூடாது எனவும், இந்த பிரிவுகளின் கீழ் புதிதாக சம்மன்களை அனுப்பக்கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.