Tamilnadu
உயிரைக் கொடுத்தாவது ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுப்போம் - போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்!
ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 55 புதிய இடங்களுக்கு மத்திய அரசு டெண்டர் விட்டது. அதில் தமிழகத்தில் உள்ள 3 இடங்களும் அடங்கும். இந்த மூன்று இடங்களில் நிலப்பரப்பு ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கும், கடற்பரப்பை வேதாந்தா நிறுவனத்துக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பான ஆய்வை மேற்கொள்ள தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. விழுப்புரம் முதல் நாகை மாவட்டம் வரை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் முயற்சி நடைபெற்றுவருகிறது. விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை 1,794 சதுர கிலோ மீட்டர் தூரம் கிணறுகள் தோண்டப்பட இருக்கின்றன. இதில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்த மூர்க்கதனமாக முயற்சி செய்து வருகிறது அந்த நிறுவனம். அரசியல் கட்சிகள், விவசாயிகள், சேவை சங்கங்கள் அனைவரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் திட்டத்தை கைவிட மத்திய அரசு மறுக்கிறது.
நேற்று நடவு செய்யப்பட்ட வயல்களில் பொக்லைன் இயந்திரங்களை இறக்கி பயிர்கள் நாசம் செய்யப்பட்டது. விவசாயிகளிடம் இதற்கு அனுமதியும் பெறவில்லை. இதனால் விவசாயிகள் கொந்தளித்தனர்.
இதையடுத்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக கைவிடக் கோரி திருவாரூர் மாவட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக விவசாயிகளின் தன்னெழுச்சியான போராட்டங்கள் வெடித்துள்ளது. இந்த போராட்டகத்தின் தொடர்ச்சியாக 3ம் நாளாக கோட்டூர் அருகே பனையூர் ஊராட்சி மருதூர் கிராமத்தில் உள்ள விவசாயிகள் பருத்தி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களின் உயிரை கொடுத்தேனும் மத்திய அரசின் நாசக்கார திட்டத்தை முறியடிப்போம் என அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் விவசாயி ஒருவர் பத்திரிக்கையாளர்களிடையே பேசுகையில், "விவசாயம் நடைபெற்றால் தான் எங்களின் வீடுகளில் அடுப்பு எரியும். விவசாய கூலி வேலைகளுக்கு சென்று தான் நாங்கள் உயிர்வாழ்ந்து வாழ்க்கையை நடத்தி வருகிறோம். ஹைட்ரோ கார்பன் எடுக்கிறோம் என்ற பெயரில் எங்களின் தலையில் மண்ணை அள்ளி போட அரசுகள் முயற்சிக்கின்றன.
விவசாய கூலி தொழிலாளர்களான நாங்கள் வீதிகளில் இறங்கினால் அந்த போராட்டம் வேறு வகையில் இருக்கும். எனவே மத்திய மாநில அரசுகள் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்” என்று அவர் கோரிக்கை வைத்துள்ளனர்.
என்ன நடந்தாலும் எங்கள் நிலங்களில் இயந்திரங்களை இறக்க விடமாட்டோம் என விவசாயிகள் உறுதியாக இருக்கின்றனர்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!