Tamilnadu

அந்நிய செலாவணி வழக்கு : காணொளிக்காட்சி மூலம் சசிகலா 28-ம் தேதி ஆஜராக உத்தரவு!

அந்நிய செலாவணி மோசடி வழக்கில், சசிகலா எழும்பூர் நீதிமன்றத்தில் காணொளிக் காட்சி மூலம் விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் வெளிநாடுகளில் இருந்து ஜெ.ஜெ தொலைக்காட்சிக்கு உபகரணங்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும், கொடநாடு டீ எஸ்டேட் வாங்கியதில் பல கோடி ரூபாய் வெளிநாடுகளில் இருந்து பரிமாற்றம் செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, அமலாக்கத்துறையினர் சசிகலா மற்றும் பாஸ்கரன் மீது 4 வழக்குகள் பதிவு செய்தனர். ஆனால், சசிகலா தரப்பினர் வழக்கு விசாரணைக்கு சரியாக ஆஜராகவில்லை. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் காணொளிக் காட்சி மூலம் சசிகலா மீது மறு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

அமலாக்கத்துறையினர் குறுக்கு விசாரணை நடத்திய நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சசிகலா காணொளிக் காட்சி மூலம் இன்று ஆஜராகி நீதிபதியின் கேள்விக்கு பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சசிகலா இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. உயர்நீதிமன்ற உத்தரவு தாமதமாக கிடைத்ததே அவர் ஆஜராகாததற்குக் காரணம் எனக் கூறப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.