Tamilnadu

நல்லகண்ணு அவர்களின் தியாகத்தை மதிக்காத எடப்பாடி அரசு : வைகோ கண்டன அறிக்கை!

“பொதுவுடைமை இயக்கத்தின் தியாகத் தலைவர் அண்ணன் திரு நல்லகண்ணு அவர்களை, அரசு குடியிருப்பிலிருந்து வெளியேற்றிய எடப்பாடி பழனிச்சாமி அரசின் நடவடிக்கை, மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் தருகிறது” என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : “தாமிரபரணி நதிக்கரையில் திருவைகுண்டத்தில் பிறந்து, இளம் வயதிலேயே விடுதலைப் போராட்டக் களத்தில் குதித்தவர். ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின்போது திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டு, பின்னர் பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அண்ணன் நல்லகண்ணு, மக்கள் போராளியாக உருவெடுத்தார்.

பொதுவுடைமை இயக்கத்தின் தீவிரமான தோழராக இருந்தபோது, நாடு விடுதலை அடைந்ததும் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட சூழலில், காவல்துறை அவரை கைது செய்து, அவரது மீசையையும் பொசுக்கிப் பிய்த்துச் சித்ரவதை செய்தது. புரட்சிகர சிந்தனைகளுடன் வலம்வந்த நல்லகண்ணு, பாலதண்டாயுதம் போன்ற தலைவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில், அவர்களுக்கு ஆயுள் தண்டனை அளித்தது நீதிமன்றம். ஏழு ஆண்டு காலம் வெங்கொடுமைச் சிறையில் தள்ளப்பட்டார் அண்ணன் நல்லகண்ணு.

வாழ்நாள் முழுவதும் போராட்டக் களங்களிலேயே நிற்பவர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் காவலராகப் போராடியவர். நான்குநேரி வானமாமலை கோயிலுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்துச் செல்லும் போராட்டம், வீடுகளுக்கு நிலை வைத்துக்கொள்ளும் உரிமையை நிலைநாட்டும் போராட்டம், செருப்பு அணிந்து பொது வீதிகளில் நடக்கும் போராட்டம் போன்றவை நல்லகண்ணு அவர்களின் போர்க்குணத்தை வெளிப்படுத்தியவை ஆகும்.

தென் மாவட்டங்களில் சாதிக் கலவர நெருப்பு பற்றிப் படர்ந்தபொழுது, நல்லகண்ணு அவர்களின் மாமனார் அன்னச்சாமி வெட்டிக் கொல்லப்பட்டார். அந்த நேரத்தில் அண்ணன் நல்லகண்ணு அமைதியை நிலைநாட்ட ஆற்றிய அருந்தொண்டுதான் சாதித் தீயை அணைத்தது. தனது மாமனார் மரணத்துக்கு அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையையும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட இரு சமூக குழந்தைகளின் கல்வி உதவிக்கே அளித்துவிட்டார். அண்ணன் நல்லகண்ணுவின் 80-ஆம் அகவையைக் கொண்டாடி, கம்யூனிஸ்ட் கட்சி திரட்டிக் கொடுத்த ஒரு கோடி ரூபாய் நிதியை கட்சிக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார். தமிழக அரசு ‘அம்பேத்கர் விருது’ வழங்கி, அதனுடன் கொடுத்த ஒரு இலட்சம் ரூபாய் நிதியையும் விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கு அளித்துவிட்டார்.

தமிழகத்தின் சுற்றுச் சூழலைக் காப்பதற்கு போராட்டக் களத்தில் முன்னோடியாக இருந்தவர். குற்றாலம் அருவிக்கு அருகில் ரேஸ்கோர்ஸ் அமைக்கும் முயற்சியைத் தடுத்தவர். தாமிரபரணி மணல் கொள்ளையைத் தடுக்க மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் போராடியவர். தாமிரபரணி ஆற்று நீரை வரைமுறையின்றி பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் சுரண்டுவதைத் தடுக்கப் போராடியவர். அவரது போராட்ட வரலாறு அத்தியாயங்கள் நீளமானவை.

மக்கள் தொண்டராக எளிய வாழ்வில் எல்லோருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து வரும் அண்ணன் நல்லகண்ணு அவர்கள் தனது வாழ்விணையரையும் இழந்த நிலையில், 94 வயதில் தியாகராயர் நகர் அரசுக் குடியிருப்பில் வசித்து வந்தார்.

2007-ஆம் ஆண்டு ஆருயிர் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள் நல்லகண்ணு அவர்களுக்கு அரசுக் குடியிருப்பை இலவசமாக ஒதுக்கீடு செய்தார். ஆனாலும் அதற்கு குடியிருப்பு வாடகைத் தொகையை அரசுக்குச் செலுத்தி வந்தவர்.

அண்ணன் நல்லகண்ணு அவர்களின் தியாகத்தைப் பற்றியும், மக்களுக்கு அவர் ஆற்றிய பொதுத் தொண்டையும் மதிக்கத் தெரியாத எடப்பாடி பழனிச்சாமி அரசு, அரசுக் குடியிருப்பிலிருந்து அவரை வெளியேற்றிய முறை வன்மையான கண்டனத்துக்கு உரியது. மன்னிக்க முடியாதது.

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தியாக சீலர் கக்கன் அவர்களுக்கு வழங்கப்பட்ட குடியிருப்பிலிருந்து அவரது குடும்பத்தினரை வெளியேற்றி இருப்பதும் கண்டிக்கத் தக்கது.

எடப்பாடி பழனிச்சாமி அரசு இத்தகைய செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், அண்ணன் நல்லகண்ணு அவர்களுக்கும், கக்கன் குடும்பத்திற்கும் அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கித் தரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ.