Tamilnadu

தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்களுக்கு கருணை காட்டக்கூடாது - உயர் நீதிமன்றம் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் இந்திரா காந்தி உள்ளிட்ட நான்கு ஆசிரியர்கள், 2019ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை தங்களை பணிநீக்கம் செய்ய தடை விதிக்க கோரியும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாத காரணத்தைக் கூறி, தங்களை பணிநீக்கம் செய்ய தடை விதிக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசின் சர்வ சிக் ஷா அபியான் திட்டத்தின்படியும், கல்வி உரிமைச் சட்டத்தின்படியும், 2011 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனவும், அதன்படி, 2012, 2013, 2014, 2017ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டதாகவும், நடப்பாண்டு இந்த தேர்வு நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்க மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கிய மத்திய அரசு அவகாசம் வழங்கியது எனவும், அதன் பின் காலக்கெடுவை நீட்டிக்க மறுத்து விட்டதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாதவர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க முடியாது எனக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ஆசிரியர் தகுதத் தேர்வு முடிக்காத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு 2 வாரங்களில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும், நோட்டீசுக்கு பதிலளிக்க 10 நாட்கள் அவகாசம் வழங்கி, அவர்களின் பதிலைப் பெற்று, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

ஏற்கனவே எட்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கியும், தகுதித் தேர்வு முடிக்காதவர்களுக்கு எந்த கருணையும் காட்ட முடியாது எனத் தெளிவுபடுத்திய நீதிபதி, பத்தாம் வகுப்பு தேர்ச்சியடையாத மாணவரை 11ம் வகுப்பில் சேர்க்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்து 60 ஆயிரம் பேர் வேலைக்காக காத்திருப்பதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதைச் சுட்டிக் காட்டிய நீதிபதி, தகுதித் தேர்வு எழுதி 60 ஆயிரம் பேர் வேலைக்காக காத்திருக்கும் நிலையில், தகுதி தேர்வு எழுதாதவர்கள் பணியில் நீடிக்க அனுமதிப்பதில் எந்த காரணமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

அதேபோல, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு மார்ச் 31ம் தேதிக்கு பின் ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டிய நீதிபதி, அந்த காலகட்டத்திற்கான ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.