Tamilnadu

ஜாதி நோய் ஒழிய பாடுபடுவோம் - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை 

பொன்பரப்பி, பொன்னமராவதி போன்ற நிகழ்வுகள் தொடரக் கூடாது. ஜாதி நோய் ஒழிய பாடுபடுவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பொன்பரப்பியைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஜாதியின் அடிப்படையில் கலவரம் மூண்டது என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாகும்.

சமுகவலைதளத்தில் குறிப்பிட்ட சமுகத்தைச் சேர்ந்தவர்கள் பற்றி கீழ்த்தரமாக - இன்னொரு பிரிவைச் சேர்ந்த யாரோ ஒருவரோ இருவரோ பதிவிட்டதன் அடிப்படையில், அந்தப் பகுதியில் கலவரமாக வெடித்துள்ளது.

பாதிப்புக்கு ஆளானவர்கள் காவல்துறைக்குச் சென்று முறையிட்ட போது, உரிய முறையில் பேசி, பெயர் சொல்லப்பட்ட குற்றவாளிகளைக் கைதுசெய்ய உத்தரவாதம் கொடுத்திருந்தால் அல்லது உடனே கைது செய்திருந்தால் பெரிய அளவுக்கு அது வெடித்திருக்க வாய்ப்பில்லை.

மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் எல்லாம் சட்டத்தின் அடிப்படையில், அவர்களுக்குரிய அதிகாரத்தின் அடிப்படையில், அவர்களின் கைகள் கட்டப்படாத வகையில் அனுமதிக்கப்பட்டு இருந்தால் ஒரு நொடிக்குள் பிரச்சினையைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள்.

எல்லாம் ஆட்சி அதிகாரம் படைத்த அரசியல்வாதிகளின் இறுகிய பிடிகளுக்குள் அதிகார வட்டம் சிக்கிக் கொண்டு விழிப்பிதுங்குவதால், உரிய நேரத்தில் “செய்யாமையானும் கெடும்” என்ற அடிப்படையில் பொன்னமராவதியில் எல்லாம் நடந்து கொண்டுள்ளன.

இந்தத் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட, பிரச்சினைக்குக் காரணமானவர்களை உடனே கைது செய்து சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், வருணாசிரம அடிப்படையில் சூத்திரர்களாக, பஞ்சமர்களாக ஆக்கப்பட்டுள்ள நிலையில், மட்டத்தில் உசத்தி என்ற மூர்க்கத்தனத்தில் விழுந்து விடாமல், ஜாதி என்பது நம்மை இழிவுபடுத்தும் பிளவுபடுத்தும் ஒரு நோய் என்பதை உணர்ந்து தெளிவு பெற வேண்டும் என்பதே நமது அன்பு வேண்டுகோள்!.

தேர்தல் நேரத்தில் இந்த ஜாதி மோதல் - அதன் காரணமாக கலவரம் ஏற்படும் நிலைமைக்கு வித்திட மதவாத பிற்போக்கு சக்திகள் (சில இடங்களில் பெரியார் சிலைமீது காவி பெயிண்ட் வீச்சு போன்ற வரிசையில்) இவையும் திட்டமிடப்பட்டு காலக் குறி தவறி நடந்தவை. உண்மைக் குற்றவாளிகள் இருசாராருமின்றி, வேறு சக்திகளாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது.

வாழ்நாள் எல்லாம் ஜாதி ஒழிப்புக்காக ஓயாது பாடுபட்டவர் தந்தை பெரியார், ஜாதி ஒழிப்புக்காக சட்டத்தையே எரித்து பத்தாயிரம் பேர் சிறை சென்ற ஜாதி ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம், ஜாதியைத் தூக்கி எறிந்து மனிதராவோம் - வாருங்கள்!

இதுவே ஜாதி ஒழிப்பு, மனித உரிமை இயக்கமான திராவிடர் கழகத்தின் கனிவான வேண்டுகோள்! படித்த இளைஞர்கள், மாணவர்கள் அந்தந்த பகுதிகளில் ஜாதி ஒழிப்பை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்ற வேண்டுகோளையும் முன் வைக்கிறோம்.இவ்வாறு கூறியுள்ளார்.