Sports

கிராண்ட் ஸ்லாம் ஓபன் டென்னிஸ் இன்று தொடங்குகிறது.. கோடிகளில் பரிசுத் தொகை.. களமிறங்கும் முன்னணி வீரர்கள்!

டென்னிஸ் உலகின் 4 கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2026 இன்று (ஆக.30) நியூயார்க்கில் உள்ள யுஎஸ்டிஏ பில்லி ஜீன் கிங் தேசிய டென்னிஸ் மையத்தில் கோலாகலமாகத் தொடங்குகிறது.

ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 13-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் இந்த மாபெரும் யுத்தத்திற்காக களமிறங்க உள்ளனர். இதனாலேயே நடப்பாண்டு ஆடவர் ஒற்றையர் பிரிவு வழக்கத்தைவிட அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 முறை அமெரிக்க ஓபன் சாம்பியனான நோவக் ஜோகோவிச்சும் மீண்டும் பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் உள்ளார். முன்னாள் சாம்பியன்களான டானில் மெட்வெடேவ், ஸ்டான் வாவ்ரிங்கா, மரின் சிலிச் ஆகியோரும் களத்தில் இருப்பதால் ஆடவர் பிரிவில் அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் நேருக்கு நேர் மோத உள்ளனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும் உலகின் முதல்நிலை வீராங்கனையுமான அரினா சபலென்கா பட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ள களமிறங்குகிறார். ஆனால் அவரும் சமீபமாக ஃபார்மில் இல்லாததால் ஆட்டம் திரும்புமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

எலினா ரிபாகினா, ஜெசிகா பெகுலா, கோகோ காஃப், மிர்ரா ஆண்ட்ரீவா, இகா ஸ்வியாடெக் உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் பட்டத்துக்கான முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர். மகளிர் பிரிவின் முதல் 11 வீராங்கனைகளும் ஏற்கெனவே கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மிகப்பெரிய பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்த வீரர் பரிசுத்தொகை 10.8 கோடி அமெரிக்க டாலர். இது கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகமாகவும், டென்னிஸ் வரலாற்றிலேயே மிகப்பெரிய மொத்த வீரர் பரிசுத்தொகையாகவும் உள்ளது.

ஒற்றையர் பிரிவு பரிசுத்தொகையை பொறுத்தமட்டில், சாம்பியன் 5.5 மில்லியன் அமெரிக்க டாலர்களும், 2-ம் இடம் பிடிப்பவர்களுக்கு 2.8 மில்லியன் அமெரிக்க டாலர்களும், அரையிறுதிப் போட்டியில் வெல்பவர்களுக்கு 1.45 மில்லியன் அமெரிக்க டாலர்களும் வழங்கப்பட உள்ளது.

ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவுகளில் சாம்பியன் ஆகும் வீரர், வீராங்கனை தலா 55 லட்சம் அமெரிக்க டாலர் பெறுவார்கள். முதல் சுற்றிலேயே வெளியேறும் வீரர்களுக்குக் கூட 140,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட உள்ளது.

இரட்டையர் பிரிவில் சாம்பியன் அணிக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள், கலப்பு இரட்டையர் பிரிவிலும் சாம்பியன் அணிக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.

இந்தியாவில் அமெரிக்க ஓபன் போட்டிகளை JioHotstar நேரலை ஸ்ட்ரீமிங் வாயிலாகவும், Star Sports தொலைக்காட்சி ஒளிபரப்பு வாயிலாகவும் பார்க்க முடியும்.

Also Read: டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த வங்கதேசம்.. ஸ்டார்க்கின் அதிரடி.. Come Back கொடுத்த ஆஸ்திரேலியா!