Sports

"பீலே, மரடோனா, மெஸ்ஸியை விட கால்பந்தில் நானே சிறந்தவன்" - சர்ச்சைக்குள்ளான ரொனால்டோவின் கருத்து !

உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரரான ரொனால்டோ இங்கிலாந்தில் கால்பந்து கிளப்பான மான்செஸ்டர், ஸ்பெயின் கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட், இத்தாலிய கிளப்பான ஜுவென்டஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடினார்.

இதனைத் தொடர்ந்து ரொனால்டோவை சவுதி அரேபியா கால்பந்து கிளப்பான அல் நாசர் அணி ஆண்டுக்கு சுமார் 1,700 கோடி ரூபாய் என்ற மிக பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்தது. அதன்படி தற்போது சவூதி அரேபியாவில் ரொனால்டோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், இதுவரை இருந்ததிலேயே நான்தான் சிறந்த கால்பந்து வீரர், என்னை விட சிறந்த யாரையும் நான் பார்த்ததில்லை என ரொனால்டோ கூறியுள்ளார். ஸ்பானிய ஊடகத்துக்கு பேட்டியளித்த ரொனால்டோ, "மக்கள் மெஸ்ஸி, மரடோனா அல்லது பீலேவை விரும்பலாம், நான் அதை மதிக்கிறேன். ஆனால் அவர்களை விட நான் சிறந்தவன்.

கால்பந்து வரலாற்றில் என்னை விட சிறந்த யாரையும் நான் பார்த்ததில்லை. ஏனெனில் நான்தான் அதிக கோல் அடித்துள்ளேன். நான் கால்பந்தில் எல்லாவற்றையும் செய்கிறேன். நான் என் தலையால் கோல் அடிக்கிறேன். ஃப்ரீ கிக்குகளை எடுக்கிறேன். இடது,வலது காலால் கோல் அடிக்க முடியும். அதுமட்டுமின்றி நான் வலிமையானவன்.

மெஸ்ஸியும், நானும் 15 வருடமாக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளோம். அவருடன் எனக்கு ஒருபோதும் மோசமான உறவு இல்லை. அவரை அவரின் கிளப், தேசிய அணிக்கு சிறப்பாக செயல்பட்டார். நானும் அதே போல செயல்பட்டேன். எங்களுக்குள் ஒரு ஆரோக்கியமான போட்டி இருந்தது" என்று கூறியுள்ளார்.

Also Read: ”ஒரு மொழியின் ஆதிக்கத்தின் கீழ்...” : நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசை எச்சரித்த சு.வெங்கடேசன் MP!