Sports

கிரிக்கெட்டை விளம்பரப்படுத்த மட்டும் நான் வேண்டுமா ? - விராட் கோலி குறித்த பதில் என்ன தெரியுமா ?

இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து டி20 அணியில் இதனால் இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மாவின் டி20 பயணம் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.

ஆனால், அவர்களின் டி20 பயணம் குறித்து அவர்களே முடிவே செய்துகொள்ளலாம் என பிசிசிஐ சார்பில் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இந்த இருவரும் அணியில் இடம்பிடித்தனர். இதனால் அடுத்த உலகக்கோப்பை தொடரிலும் அவர்கள் இடம்பெறுவர் என்பது ஏறக்குறைய உறுதியானதாக கூறப்பட்டது.

ஆனால், 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலியை நீக்க தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த உரையாடல் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டியிலும் வர்ணனையாளர்கள் மத்தியில் ஏற்பட்டது.

உலகக்கோப்பையில் கோலியின் இடம் குறித்து பேசிய இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன், " உலகக்கோப்பை அணியில் விராட் கோலிக்கு இடமில்லை என்ற பேச்சுகள் எழுந்து வருகிறது. அடுத்த உலகக்கோப்பை அமெரிக்காவில் நடைபெறவிருக்கிறது. கிரிக்கெட்டை வளர்க்க நினைத்தால் விராட் கோலி போன்ற ஒரு வீரர் இந்திய அணியில் கட்டாயம் இருக்க வேண்டும்"என்று கூறினார்.

அதற்கு பதிலளித்த வர்ணனையில் இருந்த மற்றொரு வர்ணனையாளர் ரவி சாஸ்திரி , "உலகளவில் கிரிக்கெட்டை வளர்க்க வேண்டும் என்பது முக்கியம்தான். ஆனால், அதைவிட உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் இந்திய அணிக்கு முதன்மையாக இருக்க வேண்டும். அதை மனதில் வைத்துதான் தேர்வாளர்களும் அணியை தேர்வு செய்ய வேண்டும்"என்று கூறினார்.

அந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற பின்னர் பேசிய விராட் கோலி, "உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட்டை விளம்பரப்படுத்த பெயர் பயன்படுத்தப்படுகிறது என்பது எனக்குத் தெரியும்.ஆனால், டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடும் திறன் என்னுள் இன்னும் இருப்பதாக நினைக்கிறேன். டி 20 கிரிக்கெட்டில் நான் தொடக்க வீரராக களமிறங்கி அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுக்க முயற்சிக்கிறேன்"என்று கூறியுள்ளார்.