Sports
IPL தொடரில் களம்காணும் ரிஷப் பண்ட் : விக்கெட் கீப்பராக ஆடும் உடற்தகுதியை பெற்று விட்டதாக அறிவித்த BCCI !
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம் வீரர் ரிஷப் பண்ட் இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி கார் விபத்தில் சிக்கினார். தனது வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது, நிலைதடுமாறி சாலையிலிருந்த டிவைடரில் கார் மோதியது. இதனால் காரும் உடனே தீப்பற்றி எரிந்தது. இதனை கண்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த ரிஷப், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார். அங்கு முழங்காலில் பாதிக்கப்பட்டுள்ள தசைநார் கிழிப்பிற்கும் 'ஆப்பரேஷன்' செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்த காயத்தில் இருந்து மீண்டு இவர் பயிற்சியில் ஈடுபட சுமார் ஒரு ஆண்டு தேவைப்படும் என கூறப்பட்டது.
இதனிடையே தற்போது காயத்தில் இருந்து ஓரளவு மீண்டு குறைந்த அளவு பயிற்சிகளில் ரிஷப் பண்ட் பங்கேற்று வருகிறார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெங்களூருவில் ரிஷப் பண்ட் இந்திய அணியினருடன் சேர்ந்து இருந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியானது.
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவார் என அவர் இடம்பெற்றுள்ள டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறினார். எனினும் அது குறித்த அதிகாரபூர்வ விவரம் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான உடற்தகுதியை பெற்று விட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இது குறித்து பிசிசிஐ மருத்துவக்குழு வெளியிட்டுள்ள சான்று அறிக்கையில், ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான உடற்தகுதியை பெற்று விட்டார் என்றும், அவரால் ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் செயல்படவும் முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, "ரிஷப் பண்ட் எங்களுக்கு பெரிய சொத்து. அவர் விக்கெட் கீப்பிங் செய்தால் நிச்சயம் டி20 உலகக் கோப்பையில் விளையாட முடியும். அதற்கு முன்னால் ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடுகிறார் என்று பார்க்கலாம். அவர் எங்களுக்காக டி20 உலக கோப்பையில் விளையாடினால் அது பெரிய விஷயம்"என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! : முழு விவரம் உள்ளே!
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
14 வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 நிறைவு! : பதக்கம் வென்றது ஜெர்மனி!
-
இம்பீச்மெண்ட் நோட்டீஸ்: “நீதிபதி GR சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்..” - தொல்.திருமாவளவன்!