Sports

372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வரலாற்று சாதனையோடு அபார வெற்றி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை !

இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. அதனைத் தொடர்ந்து சற்று இடைவெளிக்கு பிறகு முன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணியில் சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் அறிமுகம் ஆகினர். இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சில் இந்திய அணி 445 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா 131 ரன்கள், ஜடேஜா 112 ரன்கள், சர்ஃபராஸ் கான் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்கில் 319 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணியில் அபாரமாக ஆடிய பென் டக்கெட் 153 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இந்திய அணி தரப்பில் சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் இரண்டாவது இன்னிங்க்ஸை இந்தியா தொடங்கியது. ரோஹித் 19 ரன்கள், படிதார் ரன் ஏதும் குவிக்காமல் ஆட்டமிழந்தாலும், அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் 104 ரன்கள் குவித்து ரிடையர்ட் கர்ட் முறையில் வெளியேறினார். அதன் பின்னர் சிறப்பாக ஆடிய கில் 91 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் மீண்டும் ஜெய்ஸ்வால் களமிறங்கி விட்ட இடத்தில் இருந்து ஆட்டத்தை தொடர்ந்தார். இடையே குல்தீப் 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னர் வந்த சர்ஃபராஸ் கான்- ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசினார். அதனைத் தொடர்ந்து சர்ஃபராஸ் கான் அரை சதத்தை விளாசி, அறிமுக போட்டியிலேயே இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரை சதம் விளாசிய மூன்றாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்கில் 4 விக்கெட் இழப்புக்கு 445 குவித்து டிக்ளர் செய்தது. இதன்மூலம், இங்கிலாந்து அணிக்கு 556 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்திய தரப்பில் ஜெய்ஸ்வால் 214 ரன்களும், சர்ஃபராஸ் கான் 68 ரன்களும் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தனர்.

தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 122 ரன்களுக்கு ஆல்- அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் நியூஸிலாந்து அணிக்கு எதிராக கடந்த 2021-ம் ஆண்டு 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதே இந்திய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றியாக இருந்த நிலையில், தற்போது இங்கிலாந்து அணியை 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்திய அணி வரலாற்று சாதனையை பெற்றுள்ளது.

Also Read: ஒன்றிய அரசு நிறுத்திய கல்வி உதவி தொகையை இனி தமிழ்நாடு அரசே வழங்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !