Sports

FIFA சிறந்த வீரர் விருதை வென்ற மெஸ்ஸி: உலகக்கோப்பை நாயகனுக்கு மேலும் ஒரு மகுடம்.. 2ம் இடத்தில் இளம்வீரர்!

நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் தனது முதல் உலகக்கோப்பையை வென்று மெஸ்ஸி அசத்தினார்.

உலகசாம்பியனான மெஸ்ஸி, பிரான்சின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் என்ற அழைக்கப்படும் PSG கால்பந்து அணிக்காக விளையாடி வந்தார். அவரின் ஒப்பந்தம் இந்த ஆண்டோடு முடிவடைந்த நிலையில், அவர் அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியில் இணைந்தார்.

அணியில் இணைந்ததோடு அந்த அணிக்காக முதல் கோப்பையையும் வென்றுகொடுத்து மெஸ்ஸி அசத்தினார். அதோடு இந்த ஆண்டுக்கான 'பாலன் டி ஓர்' விருதுக்கும் அவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த விருதை மெஸ்ஸி ஏற்கனவே 7 முறை வென்றநிலையில், நார்வேயின் இளம் வீரர் எர்லிங் ஹாலந்தை வீழ்த்தி 8-வது முறையாக ஆண்டுக்கான 'பாலன் டி ஓர்' விருதை கைப்பற்றினார்.

இந்த நிலையில், பிபா-வின் சிறந்த வீரர் விருதையும் மெஸ்ஸி தட்டி சென்றுள்ளார். லண்டனில் 2023 ஆம் ஆண்டுக்கான பிபா-வின் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் சிறந்த வீரர் விருதை பெறுபவர் யார் என்பதில் மெஸ்ஸிக்கும், எர்லிங் ஹாலந்துக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இருவருமே 48 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் அதிக தேசிய அணியின் கேப்டன்கள் மெஸ்ஸிக்கு வாக்களித்ததால் இந்த விருது மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. இந்த சீசனில் மெஸ்ஸி உலகக்கோப்பையை வென்றதோடு, அதில் சிறந்த வீரருக்கான தங்க கால்பந்து விருதையும் தட்டிச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு மெஸ்ஸி கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இந்த விருதை வென்றுள்ளார்.

இந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த வீராங்கனைக்கான விருதை ஸ்பெயின் மற்றும் பார்சிலோன அணியின் வீராங்கனை ஐடான பொன்மாடி வென்றுள்ளார். சிறந்த கோல் கீப்பர் விருதை பிரேசில் மற்று மான்செஸ்டர் சிட்டி வீரர் எடர்சன் வென்ற நிலையில், சிறந்த மேலாளர் விருதை மான்செஸ்டர் சிட்டியின் பெப் கார்டியோலா பெற்றுள்ளார்.