Sports

ரூ.65 கோடிக்கு ஏலம் சென்ற மெஸ்ஸியின் உலகக்கோப்பை ஜெர்சிகள் : முழு விவரம் என்ன ?

22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நடைபெற்றது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் பிரான்சும், அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டம் ஆடியது.அதன்பலமாக 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்த, அதனை அடுத்து 36-வது நிமிடத்தில் டி மரியா கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்த நிலையில், இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.

ஆட்டம் முழுவதும் அர்ஜென்டினா அணியின் கட்டுப்பாட்டில் இருக்க, இறுதி சில நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து பிரான்ஸ் அணி அதிர்ச்சியளித்தது. 90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 2-2 கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததை அடுத்து, போட்டி கூடுதல் நேர ஆட்டத்திற்கு சென்றது. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது.

இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் உலகமே எதிர்பார்த்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றது. கோப்பையை வென்றபின்னர் அர்ஜென்டினா வீரர்கள் தங்கள் தாயகம் திரும்பியதும் அவர்களுக்கு பல லட்சம் வீரர்கள் சாலையில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், உலகக்கோப்பை வென்ற புகைப்படத்தை மெஸ்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதும் அது உலகத்திலேயே அதிக லைக்குகள் பெற்ற புகைப்படமாக மாறியது.

இந்த நிலையில், இந்த உலகக்கோப்பையில் மெஸ்ஸி அணிந்து விளையாடிய ஆறு ஜெர்சிகள் ரூ.65 கோடி அளவுக்கு ஏலம் போகியுள்ளது. 2022 உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்காக மெஸ்ஸி அணிந்து விளையாடிய ஜெர்ஸிகள் Sotheby's என்ற ஏல நிறுவனம் மூலம் ஏலம் விடப்பட்டது.

மெஸ்ஸி ஆடிய 6 ஜெர்ஸிகள் ஏலம் விடப்பட்ட நிலையில், அந்த ஜெர்சிகள் 7.8 மில்லியன் டாலர்களுக்கு (ரூ.65 கோடி ) ஏலம் போனதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த ஜெர்சிகளின் விற்பனை விலையானது நடப்பு ஆண்டில் ஏலம் விடப்பட்ட மிகவும் மதிப்புமிக்க விளையாட்டு நினைவுச்சின்னமாக பெயரெடுத்துள்ளது.

Also Read: தோனிக்கு கிடைத்த ஆகப்பெரும் கௌரவம் - 7-ம் எண் ஜெர்சிக்கு நிரந்தர ஓய்வை அறிவித்த BCCI !