Sports

"நாம் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறோம், இந்தியாவும் மற்ற அணிகளை போலத்தான்"- கபில்தேவ் கூறியது என்ன?

இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது .

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் ட்ராவிஸ் ஹெட், லபுசேனேவின் ஆட்டம் காரணமாக இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் இந்தியா சிறப்பாக செயல்பட்ட நிலையில், இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவியது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இளம்வீரர்களோடு களமிறங்கிய இந்திய அணி முதல் இரண்டு டி 20 போட்டிகளில் வென்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இந்திய அணி உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக செயல்பட்டதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் என முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், " இந்திய அணி மீது அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. சில நேரம் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளை வைத்திருந்தால் அது ஏமாற்றத்தில் முடியும். எப்போதுமே நாம் சமநிலையில் இருக்க வேண்டும். மற்ற அணிகளும் கோப்பையை வெல்லும் கனவோடுதான் இந்தியாவுக்கு வருகை புரிந்தனர். அதனால், இந்திய அணியின் இந்த தோல்வியை மிகவும் பெரிதுபடுத்திக் கொண்டு இருக்கக் கூடாது. விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டும்.

இறுதிப்போட்டியன்று எந்த அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றாலும் அதன் வெற்றியை நாம் மதிக்க வேண்டும். அதே போல தோற்றாலும் அதனை நாம் மதிக்கவேண்டும். நாம் மிகவும் அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறோம். இந்திய அணி இழந்ததை நினைத்து கவலைப்படாமல் அவர்கள் நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக செயல்பட்டதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Also Read: 13-வது தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி: சாம்பியன் பட்டம் வென்றது பஞ்சாப் - மூன்றாம் இடம் பிடித்தது தமிழ்நாடு !