Sports

3 ICC தொடர்களில் தோல்வி : இந்திய அணி பயிற்சியாளர் பதவியில் தொடர்வாரா டிராவிட் ? அவரின் பதில் என்ன ?

இந்திய அணியின் சுவர் என செல்லமாக அழைக்கப்படுபவர் ராகுல் டிராவிட். ஓய்விற்கு பின் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார். இவர் பயிற்சியாளராக இருந்த இந்த காலகட்டத்தில் இந்திய அணி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையை வென்றது. மேலும், இந்திய ஏ அணியின் பயிற்சியாளராகவும் பதவி வகித்தார்.

அதனைத் தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் செயல்பட்டார். பயிற்சியாளராக தனது தொடர் சாதனைகள் காரணமாக, ரவி சாஸ்திரிக்கு பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இவரின் தலைமையின் கீழ் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வரை இந்திய அணி முன்னேறியது. அதே போல நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை இந்திய அணி முன்னேறியது. மேலும், டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் நம்பர் 1 இடத்தையும் எட்டியது.

இந்த நிலையில், உலகக்கோப்பை தொடருடன் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில், அவரின் பதவியை பிசிசிஐ நீட்டிப்பு செய்யுமா அல்லது வேறொருவரை பயிற்சியாளராக நியமிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து அவரே தற்போது விளக்கமளித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், "இந்திய அணி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஐசிசி நாக் அவுட் சுற்றுக்கு வந்து தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த மூன்று தோல்விக்கும் நானும் காரணமாக இருந்துள்ளேன். இதனால் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் தொடர்வேனா என்பது தெரியவில்லை. இதுவரை பயிற்சியாளர் பதவியை தொடர்வது பற்றி சிந்திக்கவில்லை. எங்களின் கவனம் முழுவதும் உலகக்கோப்பை தொடரில் மட்டுமே இருந்தது. தற்போது வரை உலகக்கோப்பை தொடருக்கு பின் என்ன திட்டம் என்பது தெரியவில்லை. நிச்சயமாக நேரம் கிடைக்கும் போது அதுகுறித்து சிந்திப்பேன்" என்று கூறியுள்ளார். .

Also Read: பல ஆண்டுகள் திட்டம் : பாஜக, BCCI-யின் அரசியல் அழுத்தத்துக்கு பலியானதா இந்திய அணி ? ஒரு பார்வை !