Sports

"ICC இந்திய அணிக்கு தனி பந்துகளை கொடுக்கிறது" -பாக். முன்னாள் வீரரின் கருத்துக்கு சக வீரர் பதிலடி !

இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு வருகிறது. இது வரை ஆடிய 7 போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரில் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்து வருகிறது. இதனை காரணமாக இந்திய அணி முதல் அணியாக அரையிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளது.

ஆனால், இந்திய அணியின் இந்த சாதனையை ஏற்றுக்கொள்ள முடியாமல் பலரும் இந்திய அணியை விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஹசன் ராசா என்பவர், இந்த தொடரில் ஐசிசி இந்தியாவுக்கு வித்தியாசமான பந்துகளைக் கொடுத்து உதவி செய்கிறது என்ற கருத்து ஒன்றை கூறி அதிரவைத்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், "இந்தியாவின் பந்துவீச்சாளர்களுக்கு கொடுக்கப்பட்ட பந்துகளில் அதிக ஸ்விங் மற்றும் சீம் கிடைக்கிறது. ஐசிசி இந்தியாவுக்கு வித்தியாசமான பந்துகளைக் கொடுத்து உதவி செய்கிறது. அல்லது பிசிசிஐ தனது வீரர்களுக்கு உதவிவருகிறது என நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இவரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் பதிலடி கொடுத்து வரும் நிலையில், அவருக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " இப்படி பேசுபவர்களை நம்மால் தடுக்க முடியாது. இந்தியா ஒரே மைதானத்தில் விளையாடாமல் வெவ்வேறு மைதானங்களுக்கு சென்று விளையாடுகிறது.

இந்திய வீரர்கள் சிவப்பு மற்றும் கருப்பு மண் என இரண்டு ஆடுகளத்திலும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். எல்லாவிதமான கண்டிஷனிலும் சிறப்பாக இருந்தார்கள். அவர்களுக்கு ஒரே மைதானத்தில் இரண்டு போட்டிகள் இல்லை. ஆகவே அந்த அணி மீதான இத்தகையை விமர்சனம் தவறு. நன்றாக விளையாடுவதால் அவர்கள் வெல்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.