Sports
ரசிகர்களால் மறக்க முடியாத தோனியின் சிக்ஸர் : நினைவகமாக மாற்றப்பட்டு வெளியான அசத்தல் புகைப்படம் !
இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், கங்குலி-க்கு பிறகு அடுத்து நட்சத்திர வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது தனது அமைதியாலும், அதிரடி ஆட்டத்தாலும் அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தவர்தான் எம்.எஸ்.தோனி. இந்திய அணியில் இப்படி ஒரு வீரரா என பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், சச்சின் அவுட் ஆனால், இந்திய அணி தோற்றுவிடும் என கருதப்பட்ட நிலையையம் மாற்றிக்காட்டினார்.
அதனால் எம்.எஸ்.தோனி களத்திலிருந்தால் அது எவ்வளவு பெரிய ரன்னாக இருந்தாலும் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையைப் இந்திய ரசிகர்களுக்கு விதைத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.
இவர் தலைமையில் கடந்த 2011 ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் குலசேகரா பந்துவீச்சில் தோனி சிக்ஸர் விலாசி இந்தியா உலகக்கோப்பையை வென்ற அந்த தருணமே இந்திய ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணமாக இருந்து வருகிறது.
அந்த வரலாற்று சிக்சரை கவுரவிக்கும் விதத்தில் தோனியின் சிக்சர் விழுந்த குறிப்பிட்ட இடத்தை ஒட்டியுள்ள, 4 அல்லது 5 இருக்கைகளை மும்பை கிரிக்கெட் வாரியம் நினைவிடமாக மாற்றியது. அந்த நினைவிடமாக மாற்றப்பட்ட அந்த இருக்கைகளை ஏலத்தில் விடமுடிவு செய்துள்ளதாக மும்பை கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், அந்த இருக்கைகள் தற்போது சிறப்பாக மாற்றியமைக்கப்பட்டு அதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 2011 உலகக்கோப்பை வென்ற நினைவு இருக்கைகள் என அதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த இருக்கையின் முன் பகுதியில், இரண்டு மாதிரி உலககோப்பைகளும் வைக்கப்பட்டுள்ளது. இந்த இருக்கைகள் போட்டி நடைபெறும்போது ஏலம் மூலம் விற்பனைக்கு வரும் என்றும் , இதிலிருந்து வரும் வருமானம் இளம் வீரர்களுக்கு செலவிடப்படும் என்றும் மும்பை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Also Read
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !