Sports

"சென்னை ரசிகர்கள் பேரன்புமிக்கவர்கள், எங்கள் ஊருக்கு வாங்க" -பாகிஸ்தான் ஹாக்கி பயிற்சியாளர் நெகிழ்ச்சி !

தமிழ்நாடு அரசின் முயற்சியால் 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஹாக்கி போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டு, சர்வதேச ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 ஹாக்கி போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் நடைபெற்றுவருகிறது.

இதற்காக பல்வேறு நாடுகளின் வீரர்கள் சென்னை வந்த நிலையில், முதல் போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து லீக் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் , 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டிக்கு முன்னதாக பேசிய பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரான முகமது சக்லைன், "எங்கள் அணியின் வீரர்கள் எல்லாருமே பெரிதாக அனுபவமற்ற இளைஞர்கள். அவர்களில் பலரும் முதன் முறையாக இப்போதுதான் இங்கே வந்திருக்கிறார்கள். இங்கு அவர்களுக்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவைக் கண்டு ரொம்பவே உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

mohammad saqlain

இங்குள்ள ரசிகர்கள் பேரன்புமிக்கவர்களாக இருக்கிறார்கள். இங்குள்ள சூழலும் உணவுப்பழக்க வழக்கங்களும் பாகிஸ்தானில் இருப்பதைப் போன்றே உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுமே வலுவான கிரிக்கெட் அணியையும் ஹாக்கி அணியையும் கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட்டால் அது ரொம்பவே ஆரோக்கியமானதாக இருக்கும்.

எங்களுடைய அரசாங்கம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பைக்கு அனுப்ப சம்மதித்துவிட்டார்கள். எங்கள் அணி இங்கே வந்து ஆடப்போகிறது. நாங்களும் இப்போது இங்கே ஹாக்கி ஆடிக்கொண்டிருக்கிறோம். முன்னரும் பல முறை நாங்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறோம்.ஆனால், இந்திய அரசாங்கம்தான் தங்கள் அணிகளை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுக்கிறது. ஒருமுறை இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்தால் எங்கள் மக்கள் எவ்வளவு கனிவானவர்கள் என்பதை உங்களுக்குக் காட்டுவோம்" என்று கூறியுள்ளார்.

Also Read: ஒருவழியாக உலகக்கோப்பை குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ICC.. ரசிகர்களே முந்துங்கள் !