Sports

"களத்தில் நிற்கவே முடியாத இவரை அணியில் எடுத்தால் அவ்ளளவுதான்" - WINDIES அணியை விமர்சித்த முன்னாள் வீரர் !

2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் முதல் முறையாக மேற்கிந்திய தீவுகள் அணிகள் அணி உலககோப்பைக்கு நேரிடையாக தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது.

இதனால் அந்த அணி ஜிம்பாப்பேயில் நடைபெற்று வரும் தகுதிச்சுற்றுப்போட்டியில் விளையாடி வருகிறது. ஆனால், இந்தத் தொடரில் ஏ பிரிவில் இருந்த மேற்கிந்திய தீவுகள் அணி ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

அதனைத் தொடர்ந்து ஸ்காட்லந்து அணிக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்ததால் வரலாற்றில் முதல் முறையாக உலகக்கோப்பைக்கே தகுதி பெற முடியாமல் போனது. அதனைத் தொடர்ந்து அந்த அணியை பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்தனர். அதன்பின்னர் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், அந்த அணியை முன்னாள் வேகபந்து வீச்சாளர் இயன் பிஷப் விமர்சித்துள்ளார்.

இது குறித்துப்பேசிய அவர், உலககோப்பைக்கு தகுதி பெறமுடியாததைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளோம். களத்தில் முழுமையாக நிற்க முடியாத ரஹீம் கார்ன்வால் போன்ற வீரர் அணியில் இருப்பதெல்லாம் உடல் தகுதி குறித்து மேற்கிந்திய தீவுகள் அணி எவ்வாறு கையாளுகிறது என்பதை காட்டுகிறது. இனியாவது வீரர்களின் உடல் தகுதி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணி கவனம் செலுத்த வேண்டும். இந்தியா போன்ற தலைசிறந்த அணிகளுக்கு எதிராக விளையாடும் போது நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்.

முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற டோமினிகா மைதானம் மோசமாக அமைக்கப்பட்டிருந்தது. சதமடித்த ஜெய்ஸ்வால் ரோஹித் சர்மா கூட அங்கு தடுமாறினர். சொந்த மண்ணில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது கொஞ்சமாவது நமது அணிக்கு சாதகமாக ஆடுகளத்தை தயார் செய்ய வேண்டாமா?. அப்படி செய்தால் நாம் வெல்வோம் என்ற சொல்லமுடியாவிட்டாலும், தடுமாறும் அணிக்கு அது உதவியாக இருக்கும். அடுத்த டெஸ்ட் போட்டி நடைபெறும் மைதானம் ரன் குவிக்கவும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான முறையிலும் அமைக்கப்படவேண்டும்" என்று கூறியுள்ளார்.

Also Read: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் - பதக்க எண்ணிக்கையில் சீனாவை விஞ்சிய இந்தியா.. கொண்டாடும் ரசிகர்கள் !