Sports

மீண்டு(ம்) வரும் ரிஷப் பண்ட் - தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி.. INSTA பதிவு வைரல் !

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம் வீரர் ரிஷப் பண்ட் இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் 30ம் தேதி கார் விபத்தில் சிக்கினார். தனது வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது, நிலைதடுமாறி சாலையிலிருந்த டிவைடரில் கார் மோதியது. இதனால் காரும் உடனே தீப்பற்றி எரிந்தது.

இதனை கண்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விபத்தில் படுகாயமடைந்த ரிஷப், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார். அங்கு முழங்காலில் பாதிக்கப்பட்டுள்ள தசைநார் கிழிப்பிற்கும் 'ஆப்பரேஷன்' செய்யப்பட்டது.இதன் காரணமாக இந்த காயத்தில் இருந்து மீண்டு இவர் பயிற்சியில் ஈடுபட சுமார் ஒரு ஆண்டு தேவைப்படும் என கூறப்படுகிறது.

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பண்ட் விளையாடாத சூழலில், டெல்லி அணிக்கு வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அண்மையில் கையில் ஸ்டிக் உடன் பண்ட் நடைபயிற்சி மேற்கொண்ட புகைப்படம் வெளியான நிலையில், தற்போது மீண்டும் ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ரிஷப் பண்ட் பயிற்சி பெற்று வருவது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

25 வயதான பண்ட், நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி - குஜராத் இடையிலான போட்டியை பார்வையிட மைதானத்திற்கு வந்து வீரர்கள் அறை அருகில் இருந்து போட்டியை ரசித்து உற்சாகப்படுத்தினார்.

இந்த நிலையில் பண்ட் எதிர்பார்த்ததை விட விரைவாக குணமடைந்து வருகிறார் என்றும், விரைவில் முழுவதுமாக குணமடைவார் என்றும் ஐபிஎல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Also Read: மீண்டும் மீண்டும் காயம்.. IPL தொடரில் இருந்து தமிழக வீரர் விலகல்.. ரசிகர்கள் அதிருப்தி !