Sports

சரவெடியாக வெடித்த ரஹானே.. KKR அணியோடு அபார வெற்றி.. மீண்டும் தன் அரியாசனத்தில் அமர்ந்த CSK !

இந்தாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியோடு தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பின்னர் லக்னோ, மும்பை அணிகளை வீழ்த்தியது.

அதன்பின்னர் ராஜஸ்தான் அணியோடு அதிர்ச்சி தோல்வி அடைந்த சென்னை அணி அதன்பின்னர் பெங்களூரு, ஐதராபாத் அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி அசத்தியது. அதனைத் தொடர்ந்து நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நையிட் ரைடர்ஸ் அணியை சந்தித்தது.

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் கான்வே, ருத்துராஜ் வழக்கம்போல சிறப்பான தொடக்கம் அமைந்தனர். 35 ரன்கள் குவித்து ருத்துராஜ் ஆட்டமிழந்த நிலையில் அடுத்து வந்த ரஹானே அதிரடியாக வெடித்தார்.

இந்த தொடரில் தொடர்ச்சியாக நான்காவது அரைசதம் விளாசிய கான்வே 56 ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் வந்த ஷிவம் துபே ரஹானேவுடன் இணைந்து அணியின் ரன்வேகத்தை ஜெட் வேகத்துக்கு உயர்த்தினார். 20 பந்துகளில் அதிரடி அரைசதம் விளாசியா துபே 50 ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் ஜடேஜா சிறுது அதிரடி காட்டி ஆட்டமிழந்தார். இறுதிவரை அதிரடி காட்டிய ரஹானே ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். இதனால் சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது. இது இந்த தொடரில் குவிக்கப்பட்ட அதிக ரன்னாக பதிவானது.

இமாலய இலக்கோடு களமிறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பத்திலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. நரைன் ரன் எடுக்காமலும் ஜெகதீசன் 1 ரன்னிலும், வெங்கடேஷ் ஐயர் 20 ரன்னிலும், கேப்டன் ரானா 27 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

எனினும் ஜேசன் ராய் 26 பந்துகளில் 61, ரிங்கு சிங் 53 ரன்கள் குவிக்க கொல்கத்தா அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே குவிக்கமுடிந்தது. இதனால் சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றதோடு 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.

Also Read: #HBDSachin : மும்பைக்கு அப்புறம் பிடித்த மைதானம் இதுதான்.. சேப்பாக்கமும் சச்சினும் !