Sports
எட்டாக்கனியாகவே முடிந்த நாயகனின் உலகக்கோப்பை கனவு.. கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறிய ரொனால்டோ !
கால்பந்து உலகில் ஒட்டுமொத்த சாதனைகளையும் உள்ளங்கைக்குள் அடக்கிய நாயகனின், உலக கோப்பை கனவு என்பது எட்டாக்கனியாகவே முடிந்துள்ளது. தனது கடைசி உலகக்கோப்பையில் தோல்வி அடைந்து கண்ணீருடன் மைதானத்தை விட்டு ரொனால்டோ வெளியேறிய தருணம், ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்திற்குள்ளாக்கியது.
சர்வதேச விளையாட்டு அரங்கில் பல சாம்பியன் கோப்பைகளை கையில் ஏந்தி இருந்தாலும் உலகக்கோப்பை என்பது ஒவ்வொரு வீரருக்கும் உச்சபட்ச கனவு. கால்பந்து ஜாம்பவான்களான ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர், லெவண்டோஸ்கி, உள்ளிட்ட பல்வேறு வீரர்களுக்கு இந்த உலகக் கோப்பையை கடைசி தொடர் என்ற நிலையில், தங்களது தேசத்திற்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கினர். ஆனால், நெய்மர் இடம் பெற்றுள்ள பிரேசில் அணியின் உலகக்கோப்பை கனவை குரேஷியா தகர்த்தெறிய, மறுபுறம் போர்ச்சுகலின் உலகக்கோப்பை கனவை மொராக்கோ தவிடு பொடியாக்கியது.
காலிறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தி மொராக்கோ முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதே சமயம் தனது தேசத்திற்காக உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற ஏக்கத்துடன் பல சாதனைகளை அரங்கேற்றிய ரொனால்டோவின் கோப்பை கனவும் எட்டாக்கனியாகவே முடிந்தது. 15 வயதில் ஜூனியர் அணிக்காக தாய்நாட்டின் ஜெர்சியை அணிந்து, தற்போது 37 வயதை எட்டியுள்ள ரொனால்டோவின் சாதனைகள் ஏராளம்.. தேசிய அணிக்காக 196 போட்டிகளில் விளையாடி 118 கோல்கள் அடித்து ஆல் டைம் ஃபேவரைட் பிளேயராக வலம் வருகிறார் ரொனால்டோ...
2006, 2010, 2014, 2018, 2022 என ஐந்து உலகக் கோப்பை தொடர்களில் 20 போட்டிகளில் விளையாடியுள்ள ரொனால்டோ, எட்டு கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். இதுதவிர, ஐந்து தொடர்களிலும் கோல் அடித்த ஒரே வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் கத்தார் உலகக்கோப்பையில் நிகழ்த்தி வரலாற்றை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
கால்பந்து உலகின் தலைசிறந்த வீரர் விருது, 5 முறை பாலன் டி ஆர் விருது, 4 முறை கோல்டன் பூட் விருது உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட விருதுகளை அலங்கரித்து சரித்திரத்தை படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கிளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக், தேசிய அணிக்காக யூரோ கோப்பை, நேஷன் லீக். இதுதவிர, சூப்பர் கோப்பை என பல கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார் ரொனால்டோ.
கால்பந்து உலகில் கணக்கில்லா சாதனைகளை படைத்துள்ள ரொனால்டோவின் கடைசி உலகக்கோப்பை போட்டி கசப்பான தருணமாகவே முடிந்திருக்கிறது. நாக் அவுட் சுற்றிலும், காலிறுதியிலும் முதல் பாதியில் ரொனால்டோ பென்ச்-ல் அமர வைக்கப்படாமல் இருந்திருந்தால், அணி அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் என ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
-மீனா
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !