Sports

உலகசாதனை படைத்த தமிழ்நாடு அணியை விமர்சித்த மும்பை விமர்சகர்.. பதிலடி கொடுத்த தமிழக வீரர் அஸ்வின் !

உள்நாட்டில் நடக்கும் 50 ஓவர் தொடரான விஜய் ஹசாரே தொடர் நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. எப்போதுமே 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து அசத்தும் தமிழ்நாடு அணி இந்த தொடரிலும் வழக்கம் போல அசத்திவருகிறது.

இந்த ஆண்டு தொடர்ந்து 4-வது வெற்றியை பெற்ற தமிழ்நாடு அணி கடந்த 21-ம் தேதி அருணாச்சலபிரதேச அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற அருணாச்சலபிரதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய தமிழ்நாடு அணி சார்பில் களமிறங்கிய தொடக்கவீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் அருணாச்சலபிரதேச அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.

ஆட்டம் முழுக்க சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக பறந்தது. தொடக்கவீரர்கள் இருவரும் அடுத்தடுத்து அதிரடி சதம் விளாசினர். முதல் விக்கெட்டுக்கு 416 ரன்கள் குவித்து இந்த ஜோடி பிரிந்தது. சாய் சுதர்சன் 102 பந்துகளில் 154 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரர் ஜெகதீசன் 141 பந்துகளில் 15 சிக்ஸர்கள் அடித்து 277 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்த அதிரடி காரணமாக தமிழ்நாடு அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் குவித்தது. இதன்மூலம் முதல் தர 50 ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற உலகசாதனையை தமிழ்நாடு அணி படைத்துள்ளது. இந்த தொடரில் சிறப்பாக ஆடிவரும் தொடக்க வீரர் ஜெகதீசன் தொடர்ச்சியாக 5-வது சதமடித்து முதல் தர போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக சதம் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அதன் பின்னர் ஆடிய அருணாச்சலபிரதேச அணி 7 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இதன் மூலம் தமிழ்நாடு அணி 435 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

உலகசாதனை படைத்த தமிழ்நாடு அணியை பல்வேறு தரப்பினர் பாராட்டிவந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் விமர்சகர் மக்ராண்ட் வைய்ங்கங்கர் என்பவர் சம்மந்தமே இல்லாமல் "88 வருட ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் தமிழ்நாடு 2 கோப்பைகளை மட்டுமே வென்றது” என்று விமர்சித்திருந்தார்.

கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கரைப் போல தீவிர மும்பை ஆதரவாளரான அவரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் பதிலடி கொடுத்தனர். மேலும் தமிழக முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் "20 வருட விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் தமிழ்நாடு 5 கோப்பைகளை வென்றுள்ளது” என்று அவருக்கு பதிலை கொடுத்தார்.

அதற்கு நான் இந்திய கிரிக்கெட்டின் சாம்பியன்ஷிப் பற்றி பேசுகிறேன்” என்று மீண்டும் சம்மந்தம் இல்லாமல் மக்ராண்ட் வைய்ங்கங்கர் கூற விஜய் ஹசாரே கோப்பையும் சாம்பியன்ஷிப் தொடர்தான், அதுமட்டும் என்ன செவ்வாய் கிரகத்தில் நடக்கிறதா? என தமிழக ரசிகர்கள் மீண்டும் பதிலடி கொடுத்தனர்.

இதனிடையே இந்த விவகாரத்தில் களமிறங்கிய தமிழக வீரர் அஸ்வின், “மும்பையைச் சேர்ந்த மக்ராண்ட் வைய்ங்கங்கர் மும்பை கிரிக்கெட் மீது மிகவும் பற்று கொண்டவர். ஆனால் இப்போது ஏன் சம்மந்தம் இன்றி இந்த ட்வீட் செய்துள்ளீர்கள்? ரஞ்சிக் கோப்பை நடக்கும் போது அப்படி போடுங்கள். எதற்காக ஜெகதீசன் மகிழ்ச்சியில் மண்ணை அள்ளி போட வேண்டும். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக சென்று விடுங்கள். அதற்கு அபினவ் முகுந்த் கொடுத்த பதிலடி எனக்கு மிகவும் பிடித்தது. இப்படி அடுத்தவர்கள் வளர்ச்சியை விமர்சிக்கும் விமர்சனங்களை நாம் வளர விடக்கூடாது" என காட்டமாக கூறியுள்ளார் .

Also Read: ஓய்வு பெறப்போகிறாரா இந்திய அணியின் மூத்த வீரர் ? நன்றி தெரிவித்து வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை !