Sports

50 ஓவர்களில் 506 ரன்கள்.. 277 ரன் குவித்த முன்னாள் CSK வீரர்.. விஜய் ஹசாரே தொடரில் தமிழ்நாடு உலக சாதனை !

உள்நாட்டில் நடக்கும் 50 ஓவர் தொடரான விஜய் ஹசாரே தொடர் நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. எப்போதுமே 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து அசத்தும் தமிழ்நாடு அணி இந்த தொடரிலும் வழக்கம் போல அசதிவருகிறது.

இந்த ஆண்டு தொடரின் பிகாருக்கு எதிரான தமிழக அணியின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் ஆந்திராவை 9 விக்கெட் வித்தியாசத்தில் தமிழக அணி வீழ்த்தியது. தொடர்ந்து 3-வது ஆட்டத்தில் சத்தீஸ்கர் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி போராடி வீழ்த்தியது.

தொடர்ந்து 4-வது ஆட்டத்தில் தமிழ்நாடு அணி கோவா அணியை சந்தித்தது. இதில்முதலில் ஆடிய தமிழ்நாடு அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய கோவா அணி 50 ஓவர்கள் முடிவில் 316 ரன்கள் மட்டுமே குவித்து தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில், இன்று தமிழ்நாடு அணி அருணாச்சலபிரதேச அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற அருணாச்சலபிரதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய தமிழ்நாடு அணி சார்பில் களமிறங்கிய தொடக்கவீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் அருணாச்சலபிரதேச அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.

ஆட்டம் முழுக்க சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக பறந்தது. தொடக்கவீரர்கள் இருவரும் அடுத்தடுத்து அதிரடி சதம் விளாசினர். முதல் விக்கெட்டுக்கு 416 ரன்கள் குவித்து இந்த ஜோடி பிரிந்தது. சாய் சுதர்சன் 102 பந்துகளில் 154 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரர் ஜெகதீசன் 141 பந்துகளில் 15 சிக்ஸர்கள் அடித்து 277 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்த அதிரடி காரணமாக தமிழ்நாடு அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் குவித்தது. இதன்மூலம் முதல் தர 50 ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற உலகசாதனையை தமிழ்நாடு அணி படைத்துள்ளது. இந்த தொடரில் சிறப்பாக ஆடிவரும் தொடக்க வீரர் ஜெகதீசன் தொடர்ச்சியாக 5-வது சதமடித்து முதல் தர போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக சதம் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும், முதல் தர 50 ஓவர் போட்டிகளில் ஒரு போட்டியில் அதிக ரன் குவித்த வீரர் என்ற உலகசாதனையையும் படைத்தார். அதனைத் தொடர்ந்து தற்போது அருணாச்சலபிரதேச அணி விளையாடி வருகிறது.

Also Read: #FIFA2022 :உலகக்கோப்பையை நேரலையில் பார்க்க தனி வீட்டையே வாங்கிய கேரள ரசிகர்கள் ! viral புகைப்படம் !