Sports

"பண்ட் குறித்த இறந்து போன கருத்தை மீண்டும் கூறிய சுரேஷ் ரெய்னா" - இதை எல்லாம் இன்னுமா நம்புறீங்க Mr.IPL ?

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அணியில் இடம்பெறாத காரணத்தால் வர்ணனையாளராக செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.

ஆனால் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக பினிஷராக செயல்பட்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

அதில் சிறப்பாக செயல்பட்ட அவர் அணியில் தனது இடத்தை உறுதி படுத்திக்கொண்டார். மேலும், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். ஆசிய கோப்பை தொடரில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காத நிலையிலும், டி 20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அணியின் பிளேயிங் லெவவில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளார். அதேநேரம் ரிஷப் பண்ட் இரண்டாம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்திய அணி கருதுகிறது என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ரிஷப் பண்ட் இடதுகை பேட்ஸ்மேன் என்பதால் அவர் அணியில் இடம்பெறவேண்டும் என இறந்துபோன கருத்து ஒன்றை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "இந்திய அணியின் முதல் ஐந்து இடங்கள் உறுதியாகிவிட்டது. ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களில் ரிஷப் பணட்டை விளையாட வைப்பது மிகச் சிறந்தது. ஏனெனில் முதல் ஐந்து வீரர்களில் இடதுகை பேட்ஸ்மென்கள் யாரும் இல்லை. இடது கை பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிக முக்கியமானது. கடந்த கால வரலாறுகளை எடுத்து பார்த்தால் இடது கை பேட்ஸ்மேன்களான யுவராஜ் சிங், கவுதம் கம்பீர் போன்றவர்களின் பங்களிப்புகளை யாரும் மறந்துவிட முடியாது. இதனால் மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட்டை போன்ற இடது கை பேட்ஸ்மேன் ஒருவர் இருப்பதே இந்திய அணிக்கு பயனுள்ளதாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

Also Read: இனி நள்ளிரவிலும் இட்லி கிடைக்கும்.. பெங்களுருவில் இட்லி ATM மெஷின் அறிமுகம் ! சிறப்பம்சங்கள் என்ன?