Sports

"இந்திய அணியில் இவருக்கு போட்டியே கிடையாது" - இந்திய அணி முன்னாள் கேப்டன் ஆருடம் !

ரிஷப் பண்ட்டின் கிரிக்கெட் கரியர் கிட்டத்தட்ட இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் போன்றது தான். சொல்லப்போனால் பலரும் 'ரிஷப் பண்ட் ஒரு இடது கை சேவாக்' என்றூ பலரும் கூறுகிறார்கள். 2016 அண்டர் 19 உலகக் கோப்பையில் இந்திய அணியின் டாப் ஆர்டரில் அவர் பட்டையைக் கிளப்ப வெளிச்சத்துக்கு வந்தார் ரிஷப் பண்ட். அப்போதே அவர் மிகப்பெரிய வீரராக வருவார் என்று பலரும் கூறினார்கள். அவருடைய பேட்டிங் ஸ்டைல் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்குப் பொருத்தமானதாகக் கருதப்பட்டது. விரேந்திர சேவாக் கூட பண்ட்டின் ஆரம்ப காலத்தில் கொடுத்த பேட்டிகளில் அப்படித்தான் கூறியிருந்தார்.

டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேபிடல்ஸ்) அணிக்கு விளையாடிய தன்னுடைய முதல் இரு சீசன்களில் அதை சரியென நிரூபித்தார் பண்ட். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் விளையாடத் தொடங்கியதும் அவருடைய சிறந்த செயல்பாடுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் வந்தது.

சொல்லப்போனால் ஒருகட்டத்தில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரியான வீரராகப் பார்க்கப்பட்டாலும், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் தன் இடத்தை இழந்தார். அதனால் இந்திய அணியும் கேஎல் ராகுலை கீப்பராகப் பயன்படுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. சேவாக் போல் ஓப்பனிங்கில் ஆடுவதற்கு பண்ட்டுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்காததையுமே கூட இதற்குக் காரணமாகக் கூறலாம்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா என அனைத்து நாடுகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு டெஸ்ட் கிரிகெட்டில் அடுத்த கட்டத்தை எட்டியிருந்தாலும் ரிஷப் பண்ட்டால் ஷார்ட் ஃபார்மட்டில் தொடர்ச்சியாக ரன் குவிக்க முடியவில்லை. அதனால் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் அவருடைய இடம் நிரந்தரமானதாக இல்லை. சஞ்சு சாம்சன், இஷன் கிஷன், தினேஷ் கார்த்திக் போன்றவர்கள் இருப்பது அவருக்கு தொடர்ந்து சவாலாக இருந்து வருகிறது.

ஆனால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சந்து போர்டே ரிஷப் பண்ட்டுக்கு யாரிடமிருந்தும் எந்த போட்டியும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

"இந்திய அணியில் ஒரு நல்ல போட்டி நிலவுகிறது. நன்றாக விளையாடுபவர்களுக்கு அணியில் இடம் கிடைக்கும். உண்மையைச் சொல்லப்போனால் அணியில் ரிஷப் பண்ட்டுக்கு போட்டி ஏதும் இல்லை என்றே நான் நினைக்கிறேன். அவருக்கு அணியில் ஒரு நிரந்தர இடம் இருக்கிறது. அவர் அணியில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறார். அவரால் யாரும் எதிர்பாராத நேரத்தில் போட்டியை மாற்ற முடியும். அதுமட்டுமல்லாமல் அவர் ஃபினிஷர் மட்டுமல்ல. அவரால் எந்த பொசிஷனிலும் எந்த நேரத்திலும் விளையாட முடியும்" என்று ஒரு தொலைகாட்சிக்குக் கொடுத்த பேட்டியில் கூறியிருக்கிறார் சந்து போர்டே.

"ரிஷப் பண்ட்டின் கரியரைப் பார்த்தால் அவர் இப்போதுதான் ஆரம்பித்தது போல் இருக்கிறது. ஆனால் பல போட்டிகளை இந்தியாவுக்கு வென்று கொடுத்திருக்கிறார். காலம் போகப் போக அவர் கற்றுக்கொள்வார். அவருடைய செயல்பாடு வேறொரு உயரத்தைத் தொடும்" என்றும் கூறியிருக்கிறார் சந்து போர்டே.

Also Read: 8 மாதமாக செயல்பட்ட போலி காவல்நிலையம்.. உண்மையான போலிஸ் என நம்பிய ஊழியர்கள்.. விசாரணையில் அதிர்ச்சி !