Sports

ICC டெஸ்ட் தரவரிசை : ஜடேஜாவை பின்னுக்குத் தள்ளிய WI வீரர் - அஸ்வின் படைத்த சாதனை : முழு தகவல்கள் இங்கே!

பவுலர்களுக்கான ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் நான்காவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார் ஜஸ்ப்ரித் பும்ரா. தமிழகத்தைச் சேர்ந்த ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார்.

சமீபத்தில் வெளியான ஐ.சி.சி டெஸ்ட் ரேங்கிங்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பௌலர்களுக்கான தரவரிசையில் பத்தாவது இடத்தில் இருந்த பும்ரா, 6 இடங்கள் முன்னேறி நான்காம் இடம் பிடித்திருக்கிறார். இலங்கைக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருந்தார் பும்ரா. இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்ட அஷ்வின் 850 ரேங்கிங் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலிடத்தில் தொடர்கிறார்.

பேட்டிங்கைப் பொறுத்தவரை ரோஹித் ஷர்மா 754 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறார். அவரது பொசிஷனில் எந்த மாற்றமும் இல்லை. இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலியின் வீழ்ச்சியோ தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஐந்தாவது இடத்தில் இருந்தவர், நான்கு இடங்கள் பின்தங்கி இப்போது ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். இன்னொரு இந்திய வீரர் ரிஷப் பன்ட், 738 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தில் தொடர்கிறார்.

இந்தியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட்டின் நான்காவது இன்னிங்ஸில் சதமடித்த இலங்கை கேப்டன் டிமுத் கருணரத்னே, மூன்று இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடம் பிடித்திருக்கிறார். ஆஸ்திரேலிய இளம் வீரர் மார்னஸ் லாபுஷான் முதலிடத்தில் நீடிக்கிறார். ஜோ ரூட் இரண்டாவது இடத்திலும், ஸ்டீவ் ஸ்மித் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர்.

ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறினார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர். அஷ்வின் மூன்றாவது இடத்திலும், ஷகிப் அல் ஹசன் நான்காவது இடத்திலும் நீடிக்கின்றனர்.

அணிகளுக்கான டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தியா இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.

Also Read: “புதிய கேப்டன் சாஹல்.. பட்லருடன் ஓப்பனிங்”: பதறிப்போன ரசிகர்கள் - ஏம்ப்பா.. ப்ரொமோஷனுக்கு ஒரு அளவில்லையா?