Sports

பிரீமியர் லீக் பட்டத்தை நோக்கி முன்னேறும் Manchester City: தடுமாறும் Liverpool -இந்த ஆண்டு என்ன நடக்கும்?

மான்செஸ்டர் சிட்டி வெற்றி, லிவர்பூலின் ஆன்ஃபீல்ட் தோல்வி, தாம்ஸ் டுகலின் undefeated பயணம், சௌதாம்ப்டனின் சறுக்கல் என பிரீமியர் லீகின் சமீபத்திய நிகழ்வுகள் இந்த வாரம் மீண்டும் அரங்கேறின. இந்த வழக்கமான நிகழ்வுகளுக்கு நடுவே, ஷெஃபீல்ட் யுனைடட் வெற்றி, லெஸ்டர் சிட்டி சறுக்கல், மான்செஸ்டர் யுனைடடின் கோல் வறட்சி போன்றவரையும் அரங்கேறியிருக்கிறது.

மான்செஸ்டர் சிட்டி - தடுப்பதற்கு எந்த சக்தியும் இல்லாமல் முன்னேறிக்கொண்டே இருக்கிறது. டிரா கூட இல்லை, வெற்றி மட்டும்தான் அவர்களின் இலக்காக இருக்கிறது. இந்த வாரம் வெஸ்ட் ஹாம் யுனைடட், வோல்வர் ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் இரு அணிகளையும் வீழ்த்தியிருக்கிறது சிட்டி. இதன் மூலம் தொடர்ந்து 21 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது.

மற்ற அணிகளைப் போல் கோல்களுக்காக ஓரிரு தனிப்பட்ட வீரர்களைச் சார்ந்திருக்காததே கார்டியோலாவின் அணியின் மிகப்பெரிய பலம். லிவர்பூல் (சலா & மனே), டாட்டன்ஹாம் (கேன் & சன்), மான்செஸ்டர் யுனைடட் (புரோனோ ஃபெர்னாண்டஸ் & ரேஷ்ஃபோர்ட்) என முன்னணி அணிகளே இப்படி ஓரிரு வீரர்களைத்தான் நம்பியிருக்கின்றன. ஆனால் சிட்டி... ஸ்டிரைக்கர்கள் அகுவேரோ, ஜீசுஸ் இல்லாமல்தான் பெரும்பாலான போட்டிகளை ஆடினார்கள். ஆனாலும், கோல்கள் வந்துகொண்டேதான் இருந்தன.

டி புருய்னே, ஸ்டெர்லிங் போன்றவர்கள் தொடர்ந்து கோலடித்துக்கொண்டிருந்தாலும், மாரஸ், குண்டோகன், ஃபெரன் டாரஸ் போன்றவர்களிடமிருந்தும் கோல்கள் வந்துகொண்டே இருந்தது. கடந்த வாரத்துக்கு முன்புவரை குண்டோகன் கோல் மெஷின் அவதாரம் எடுத்து பிரீமியர் லீகை மிரட்டிக்கொண்டிருந்தார். வெஸ்ட் ஹாம் போட்டியில் அட்டாக்கர்கள், மிட்ஃபீல்டர்கள் தாண்டி டிஃபண்டர்கள் இருவர் சேர்ந்து சிட்டிக்கு 3 புள்ளிகள் பெற்றுக்கொடுத்தனர்.

முதல் பாதியில் ரூபன் டியாஸ் கோலடித்து முன்னிலை கொடுத்தார். மிகேல் ஆன்டானியோ சமநிலை ஏற்படுத்த, இரண்டாவது பாதியில் இன்னொரு சென்டர்பேக் ஜான் ஸ்டோன்ஸ் கோலடித்து சிட்டியை வெற்றி பெறவைத்தார். 80 நிமிடங்கள் வரை ஆட்டம் சமநிலையில் இருக்க, கடைசி கட்டத்தில் வின்னிங் கோல் அடித்தது சிட்டி. வோல்வ்ஸுக்கு எதிரான ஆட்டத்திலும் அதுவே நடந்தது.

79 நிமிடங்கள் வரை ஸ்கோர் 1-1. ஆனால், கடைசி சில நிமிடங்களில் விஸ்வரூபம் எடுத்தது சிட்டி. கேப்ரியல் ஜீசஸ் இரண்டு கோல்களும் மாரஸ் ஒரு கோலும் அடிக்க 4-1 என வெற்றி பெற்றது அந்த அணி. இது அவர்களின் தொடர்ச்சியான 21-வது வெற்றியாக அமைந்தது.

சாம்பியன் பட்டத்தை நோக்கி சிட்டி வெறித்தனமாக முன்னேறிக் கொண்டிருக்க, நடப்பு சாம்பியன் அடி மேல் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. லிவர்பூல் அணியின் பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 68 ஹோம் கேம்களில் தோற்காமல் இருந்த அந்த அணி, இப்போது தொடர்ந்து 5 ஆட்டங்கள் ஆன்ஃபீல்டில் தோற்றிருகிறது.

செல்சீ அணியுடன் இன்று அதிகாலை நடந்த போட்டியில் 1-0 என தோற்றது கிளாப்பின் அணி. மேசன் மௌன்ட் அடித்த கோல் டுகலின் அணிக்குப் போதுமானதாக இருந்தது. ஆன்ஃபீல்டில் இந்த ஆண்டு லிவர்பூலால் கோலடிக்க முடியவில்லை. 2021-ல் இதுவரை ஒரேயொரு கோல் மட்டுமே அவர்களின் சொந்த மைதானத்தில் அடித்திருக்கிறார்கள். அதுவும் முகமது சலா பெனால்டி மூலம் அடித்த கோல். செல்சீக்கு எதிராக அவர்கள் எவ்வளவு முயன்றும் கோல்கீப்பர் மெண்டியை சோதிக்க முடியவில்லை. ஒட்டுமொத்த போட்டியிலும் மொத்தம் ஒரேயொரு ஷாட்டை மட்டுமே இலக்கை நோக்கி அடித்தது அந்த அணி.

சலா, மனே இருவரையும் செல்சீ டிஃபன்ஸ் பாக்சுக்குள் நுழைய முடியாத வகையில் அரண் அமைத்து கட்டுப்படுத்தியது. இரண்டாவது பாதியில் ஜோடா, ஆக்ஸ்லேட் சேம்பர்லைன் என வீரர்களை மாற்றிப் பார்த்தும் லிவர்பூலுக்கு சாதகமாக எதுவும் அமையவில்லை. ஏற்கெனவே காயத்தால் அவதிப்பட்டுவரும் அந்த அணி, புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து கீழே இறங்கிக்கொண்டிருக்கிறது. இப்போது ஏழாவது இடத்தில் இருக்கும் லிவர்பூல், ஆஸ்டன் விலா, டாட்டன்ஹாம் அணிகள் தங்கள் தங்கள் கைவசம் இருக்கும் போட்டிகளில் வெற்றிபெற்றால், நடப்பு சாம்பியன் ஒன்பதாவது இடம் வரை பின்தங்கும்.

செல்சீயைப் பொறுத்தவரை டுகல் மேனேஜராகப் பதவியேற்றபின் தோல்வியே இல்லாமல் சிறப்பாகப் பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்த வாரம் மான்செஸ்டர் யுனைடட், லிவர்பூல் என இரண்டு கடினமான போட்டிகள் இருந்தும், 4 புள்ளிகள் பெற்றிருக்கிறது. அணியின் முக்கிய டிஃபண்டர் தியாகோ சில்வா இல்லாமலும் இரண்டு போட்டிகளிலும் 'கிளீன் ஷீட்' வைத்திருப்பது மிகப்பெரிய விஷயம். லெஸ்டர், லிவர்பூல், யுனைடட் போன்ற அணிகள் புள்ளிகளை இழந்துகொண்டிருப்பதால், அவர்கள் டாப் 4 இடத்துக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

செல்சீ, கிறிஸ்டல் பேலஸ் என அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் கோலே அடிக்காமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது மான்செஸ்டர் யுனைடட். இந்த வாரம் நடந்த இரண்டு போட்டிகளில் 2 புள்ளிகள் மட்டும் எடுத்திருக்கும் அந்த அணி, இப்போது சிட்டியிடமிருந்து 14 புள்ளிகள் பின்தங்கியிருக்கிறது.

இந்த வாரம் எதிர்பாராத முடிவெனில், அது கடைசி இடத்திலிருக்கும் ஷெஃபீல்ட் யுனைடட் ஆஸ்டன் விலாவை (1-0) வீழ்த்தியதுதான். பிரீமியர் லீகில் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்விக்குப் பிறகு, இந்த சீசனின் நான்காவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது அந்த அணி.

Also Read: “பிட்ச் கோளாறா... இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் கோளாறா?” - இன்றைய ஆட்டத்தில் சொதப்பிய பேட்ஸ்மேன்கள்!