Sports

சி.எஸ்.கே அணியின் டாப்-ஆர்டர் எப்படி இருக்கும்? : என்ன செய்யப்போகிறார் கேப்டன் தோனி?

IPL தொடரிலிருந்து சுரேஷ் ரெய்னா வெளியேறியதால், CSK அணிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2008-ம் ஆண்டில் இருந்து இதுநாள் வரை அந்த அணியின் நம்பர் 3 ஸ்லாட்டை நிரப்பியிருந்தவர் இப்போது இல்லை. அதனால், அந்த இடத்துக்கு யாரை தோனி களமிறக்குவார் என்று பல பேச்சுகள் அடிபட்டுவருகிறது.

சையது முஷ்தாக் அலி டிராபி உள்ளிட்ட உள்ளூர் தொடர்களில் சிறப்பாகச் செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கும் Ruturaj Gayakwad ஓப்பனராக விளையாடி, டுப்ளெஸ்ஸிஸ் மூன்றாவது வீரராக வரவேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் கருத்து. சிலர், தமிழக வீரர்கள் முரளி விஜய் அல்லது ஜெகதீசன் இருவரில் ஒருவர் ஆடவேண்டும் என்று விரும்புகிறார்கள். இன்னும் சிலர், அம்பத்தி ராயுடுவை மூன்றாவதாக ப்ரமோட் செய்துவிட்டு, ஃபாப் – வாட்சன் தொடக்க ஜோடியோடு CSK தொடரவேண்டும் என்கிறார்கள். இதில் தோனி என்ன செய்யப்போகிறார்?

கடந்த 10 ஆண்டுகளில் தோனியின் வியூகங்களைப் பார்க்கும்போது, அவர் டாப் ஆர்டரில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. 2011 IPL தொடருக்குப் பிறகு அவர் அனுபவம் வாய்ந்த டாப் ஆர்டரையே தொடர்ந்து பயன்படுத்தியிருக்கிறார். அப்போது நல்ல ஃபார்மில் இருந்த முரளி விஜய், மைக் ஹஸ்ஸி, பிரெண்டன் மெக்கல்லம், டுவைன் ஸ்மித், அம்பாதி ராயுடு, ஷேன் வாட்சன், டுப்ளெஸ்ஸிஸ்… என இந்த லிஸ்ட் அனுபவம் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. ரெய்னா மூன்றாம் இடத்தை நிரப்பிவிடுவதால், அவருக்கு எந்தப் பிரச்னையும் வரவில்லை.

இந்திய அணியிலுமே, ரோஹித் – தவான் தொடக்க ஜோடி இருக்கும்போது ரஹானே ஸ்குவாடிலேயே இருக்கமாட்டார். ஆனால், அவர்களுள் யாருக்கேனும் ஓய்வு என்றால், அவரைத்தான் தோனி ஓப்பனராக இறக்குவார். அவருக்கு டாப் ஆர்டரில் அனுபவம் முக்கியம். மிடில் ஆர்டரில், பந்துவீச்சில் ரிஸ்க் எடுப்பார். வித்தியாசமான, விபரீதமான முடிவுகள் எடுப்பார். ஆனால், டாப் 3-ல் சான்ஸே இல்லை. அதனால், ஜெகதீசன், கேயக்வாட் இருவரும் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு. கேயக்வாட் கொரோனா தொற்றால் வேறு பாதிக்கப்பட்டிருக்கிறார்.

முரளி விஜய் நல்ல ஃபார்மில் இருந்தால் அவரை பரிசீலிக்கக்கூடும். ஆனால், அவரது சையது முஷ்தாக் அலி செயல்பாடு குறிப்பிடும்படி இல்லை. வலைப்பயிற்சியில், வார்ம் அப் போட்டிகளில் தோனி, ஃபிளெமிங் ஆகியோரைக் கவர்ந்திருந்தால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம். மற்றபடி, வாட்சன், ஃபாஃப், ராயுடு மூவரும்தான் CSK அணியின் டாப்-3 பொசிஷன்களை ஆக்கிரமிப்பார்கள்.

Also Read: “கோலியால் IPL தொடரில் ஏன் சிறந்த கேப்டனாக சோபிக்க முடியவில்லை?” - RCB முன்னாள் பயிற்சியாளர் விளக்கம்!