Sports

Corona Lockdown -“ரூ.3,800 கோடி நஷ்டம் ஏற்படும்.. வேறு வழியில்லை” ஜூலையில் ஐபிஎல் நடத்த பிசிசிஐ திட்டம்?

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் நடைபெறவிருந்த முக்கிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், படங்கள் திரையிடல் எனத் தொடங்கி அன்றாட பிழைப்பு முதற்கொண்டு அனைத்துமே முடக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார ரீதியில் வரலாறு காணாத இழப்பை உலகம் சந்திக்கவுள்ளது என ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

உலக நாடுகளை போன்று இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கெனவே பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்து வந்த இந்தியா தற்போது, கொரோனா காரணமாக இந்திய பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு செல்லவிருக்கிறது.

தேசிய ஊரடங்கு முடிய இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில், கொரோனாவின் பாதிப்பும் அதிகரித்து வருவதால் மேலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த 13வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கொரோனா வைரஸால் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இது தொடர்பாக பேசியுள்ள முன்னாள் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, நடப்பாண்டு ஐபிஎல் போட்டி நடத்தப்படுவதற்கான எந்த ஏற்பாடுகளையும் இதுவரையில் பார்க்கவில்லை. அனைவரது கவனமும் கொரோனாவை எதிர்த்து போராடும் நிலையிலேயே உள்ளது.

அரசின் முடிவைப் பொறுத்து கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவது தொடர்பான திட்டங்கள் மாறுபடலாம். ஆகையால் ஏப்ரல் 15க்கு பிறகு ஐபிஎல் நடப்பது சாத்தியமில்லாத காரியம். வான்வழி போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டுள்ள நேரத்தில் வெளிநாட்டு வீரர்கள் இந்தியா வருவது சவாலான விஷயம் எனக் கூறினார்.

இந்நிலையில், ஏப்ரல் 15க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படும் பட்சத்தில், ஜூலை மாதத்தில் ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனெனில், ஐபிஎல் போட்டி தடைபட்டால் உரிமையாளர்கள், ஒப்பந்த தாரர்கள், விளம்பரதாரர்கள் என அனைவருக்கும் சுமார் 3 ஆயிரத்து 800 கோடி ரூபாய் நஷ்டமடைய வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக ஜூலை மாதம் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும், சிக்கல் நீடித்தால், ரசிகர்கள் பார்வையாளர்களே இல்லாமல் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Also Read: “கொரோனா தொற்று அபாயமில்லாத பேருந்து” : சேவையைத் துவங்கிய கேரள அரசு! #Covid19