Sports

“இந்த விஷயத்தில் கோலி இன்னும் கவனம் செலுத்த வேண்டும்...” - கங்குலி அறிவுரை!

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சமீப போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ள ரோஹித் சர்மா மற்றும் அஸ்வின் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. இவர்கள் ஏன் அணியில் இடம்பெறவில்லை என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வியெழுப்பினர்.

மேலும், அஸ்வின் அணியில் இடம்பெறாதது அதிர்ச்சியளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், அணித்தேர்வில் விராட் கோலி அதிக கவனம் செலுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சௌரவ் கங்குலி, ''இந்த ஒரு விஷயத்தில் கோலி இன்னும் சீரான முறையில் இயங்க வேண்டியுள்ளது. வீரர்களைத் தேர்வு செய்தால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஸ்ரேயாஸ் சிறந்த உதாரணம், மற்ற வீரர்களுக்கும் இதையே கோலி கடைபிடிக்க வேண்டும்.

குல்தீப் யாதவ் அணியில் இடம்பெறாதது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. கடைசியாக சிட்னியில் ஆடிய டெஸ்டின் போது பிளாட் பிட்ச்சில் அவர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜடேஜாவும் நல்ல பார்மில் இருக்கிறார். ஆனால் நடப்பு போட்டியில் சீரற்ற பிட்ச்சில் ஜடேஜா 2வது இன்னிங்சில் எப்படி வீசப்போகிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.

அஸ்வின் சாதனைகள் அபரிமிதமானது; அவரை உட்கார வைத்திருக்கக் கூடாது. ஆனால் இத்தகைய தேர்வுகள் சாதக பலன்களை அளிக்கிறதா என்பதை முதல் போட்டி முடிவில் பார்ப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.