Politics

“விளம்பர வெறியால் கடைமடையில் கருகும் பயிர்கள்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!

மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் நாள் திறக்கப்படும் காவிரி நீரை, காலம் கடந்து திறந்ததால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ரூ.5 கோடிக்கும் மேல் பயணச் செலவு செய்து மேட்டூர் அணையை திறக்க சென்ற முதலமைச்சர் விஜய்யால், விவசாயிகளுக்கு சொன்னதுபோல் கடன் தள்ளுபடி செய்ய மட்டும் நிதியில்லையா? என்பதான பல்வேறு கேள்விகள் ஏற்கனவே எழுந்து வரும் நிலையில், கடை மடை வரை காவிரி நீர் வந்தடையாமலேயே, மேட்டூர் அணையிலிருந்து நீர் வரத்து நிறுத்தப்பட இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பின்வருமாறு,

“மூடர் கூட்ட அரசின் விளம்பர வெறியால் கடைமடையில் பயிர்கள் கருகி வருகிறது.

மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் டெல்டாவின் கடைமடை பகுதிகளுக்கு வந்து சேராமல் சம்பா பயிர்கள் காய்கின்ற நிலையில், தற்போது அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்படவுள்ளதால் பயிர்களை எப்படி காப்பாற்றுவது என்று புரியாமல் டெல்டா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படாததால் ஏற்கனவே குறுவை சாகுபடி பொய்த்தது.

இப்போது சம்பாவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால், செப்டம்பர் 1-ஆம் தேதி தண்ணீர் திறப்பதற்கு பதிலாக கொஞ்சம் தாமதமாக தண்ணீர் திறக்க வேண்டும் - அப்போது தான் நெல்மணி முளைத்து வருகின்ற காலகட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்று டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் நடைமுறை சிக்கல் புரியாமல், Reels வெறி கொண்டு அவசரகதியில் இந்த Dummy CM தண்ணீர் திறந்துவிட்டார். இப்போது உரிய நேரத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுகின்றன.

எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் - விவசாயிகளின் பேச்சையும் கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு குறுவை - சம்பா இரண்டையும் இல்லாமல் செய்திருக்கிறது இந்த கோமாளி சர்க்கார்.

ஏற்கனவே அரிசி - பருப்பு விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

தினத்தந்தியின் இன்றைய முதல் பக்க தலைப்புச்செய்தியே விலைவாசி உயர்வு பற்றித்தான் என்பது முதல்வருக்கு தெரியாதா?

இப்படிப்பட்ட சூழலில் நிர்வாகத்திறனற்ற இந்த ஆட்சியாளர்களால், உணவு உற்பத்தி மேலும் பாதித்து, விலைவாசி இன்னும் உயருகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.

வேளாண்துறைக்கு செயலாளர் இல்லாததை நாம் சுட்டிக்காட்டிய பிறகு, வேளாண் செயலாளரை நியமித்த முதலமைச்சர், விவசாயிகள் பிரச்சினையை தீர்ப்பதற்கான Review Meeting-ஐயும் நாம் சொன்ன பிறகு தான் நடத்துவாரா?

இப்பிரச்சினை குறித்து உடனே ஆய்வுக்கூட்டங்களை நடத்தி, டெல்டாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு அனைத்து நிவாரண உதவிகளையும் இந்த ஆட்சியாளர்கள் உடனடியாக வழங்க வேண்டும்.”

Also Read: திட்­ட­மிட்டு உரு­வாக்கப்பட்ட மின்சார தட்­டுப்­பாடு... அடுக்கடுக்கான புகார்களோடு அம்பலப்பட்ட தவெக அரசு!