Politics

“கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?” - விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

குறுவையும் பாதித்து - சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகும் பேராபத்தில் உள்ளனர் காவிரி டெல்டா விவசாயிகள். உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரைத் திறந்து விட கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு தொடர்ந்து மறுத்து வருவது, காவிரி டெல்டா விவசாயிகளைப் பேரிடரில் தள்ளியிருக்கிறது. தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய 28.3 டி.எம்.சி காவிரி நீரில் இதுவரை 3.4 டி.எம்.சி மட்டுமே திறந்து விட்டுள்ளதால் மேட்டூர் அணையை ஜூன் 12-ஆம் தேதியும் திறக்க இலவில்லை.

ஜூன் 23 அன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், “அணைகளில் உள்ள நீரைக் குடிநீர்த் தேவைக்கு மட்டுமே பயன்படுத்துங்கள்” என்று ஆணையம் அறிவுறுத்தி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் திறப்பது குறித்த முடிவை ஜூலை 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இப்போது ஜூலை 22-ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும், “குடிநீர்த் தேவைக்கு மட்டுமே நீரைப் பயன்படுத்துங்கள்” என அறிவுறுத்தி, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறப்பது பற்றிய முடிவினை ஜூலை 28-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளது.

இரு கூட்டங்களிலும் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் மீண்டும் மீண்டும் நிராகரித்து - காலதாமதம் செய்து கொண்டிருக்கிறது. ஒரு கூட்டம், இரு கூட்டம் என்று இப்போது மீண்டும் 28.7.2026 அன்று மூன்றாவது கூட்டம் என்ற நிலையிலேயே காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் கோரிக்கையில் உள்ள அவசர நியாயத்தை ஆணையம் உணர மறுப்பது தெளிவாகிறது.

“இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறக்கும் பொறுப்பை” காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றிடம் உச்சநீதிமன்றம் ஒப்படைத்து இருந்தாலும், அந்தப் பொறுப்பினைத் தட்டிக் கழித்து, காலதாமதம் செய்து கொண்டிருக்கிறது காவிரி மேலாண்மை ஆணையம்.

“தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரைக் கர்நாடகம் தர மறுப்பது நீதிமன்ற அவமதிப்பு” என உச்சநீதிமன்றம் 23.11.2025 தீர்ப்பிலேயே தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் காலதாமதம் செய்து கொண்டிருப்பது காவிரி டெல்டா விவசாயிகளின் வேதனைக் கண்ணீருக்குத் தீர்வாகாது. நெருக்கடியான இச்சூழ்நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்நேரம் மாண்புமிகு பிரதமர் அவர்களைச் சந்தித்திருக்க வேண்டும். ஆனால் முதலமைச்சரும் பேசவில்லை. நீர்வளத்துறை அமைச்சரும் பேசவில்லை. தலைமைச் செயலாளரும் கர்நாடக மாநிலத் தலைமைச் செயலாளருக்கோ அல்லது ஒன்றிய அரசின் செயலாளருக்கோ கடிதம் எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. ஒட்டுமொத்த காவிரி டெல்டாவின் உயிர்நாடிப் பிரச்சினையில் இந்த அரசு காக்கும் அர்த்தமற்ற மவுனம் அதிர்ச்சியளிக்கிறது.

ஏற்கெனவே முழுக் கடன் தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றி விட்டது இந்த அரசு. மேகதாது அணை கட்டுவதை எதிர்க்கவும் நடுவர் மன்றமும் அமைக்க சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியும், அந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளையும் அழைத்துக் கொண்டு பிரதமரிடம் நேரில் கொடுக்கவும் நேரமில்லாமல் இருக்கிறார் முதலமைச்சர். இப்போது தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும் தட்டிக் கேட்க முடியாமல் தவிக்கிறார். விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையை விட வேறு என்ன பிரச்சினையில் இந்த அரசு கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது? மாநிலத்தின் காவிரி உரிமையை நிலைநாட்ட ஏன் இவ்வளவு பயம்?

முதலமைச்சர் உடனடியாகத் தனது மவுனத்தைக் கலைத்து, கர்நாடகாவிலிருந்து காவிரி நீரைப் பெறப் போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். எல்லா அதிகாரமும் பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தைத் தட்டி எழுப்ப உச்சநீதிமன்றத்தை உடனடியாக அணுகி, தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரைப் பெறுவதற்கு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

குறுவை சாகுபடி பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் காவிரி டெல்டா விவசாயிகள், சம்பா சாகுபடியும் கானல் நீராகுமோ எனக் கவலையில் உறைந்து போயிருக்கிறார்கள். காவிரி நீரைப் பெறத் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளும் அதேவேளையில், விவசாயிகளுக்கு உடனடியாக “புதிய நிவாரணத் தொகுப்பினை”யும் அறிவித்து, விவசாயப் பெருங்குடி மக்களை இப்பேரிடரிலிருந்து காப்பாற்றிட முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

Also Read: “முதலமைச்சர் விஜய்யின் மவுனத்தால், காவல்துறை மரணங்கள் தொடர்ந்து வருகிறது!” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!