Politics

பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சி அதிகாரம் பெற்றிருக்கிற த.வெ.க அரசு, மக்களின் தேவையை உணராமல் செயல்பட்டு வருவது, கர்நாடக அமைச்சரின் பேச்சின் வழி வெளிப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் உரிமைகளில் ஒன்றான, காவிரி நீர் உரிமையை அலட்சியத்தால் பறிகொடுக்கும் வகையில், த.வெ.க செயல்படுவது, மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

“கர்நாடகத்தில் இருந்து காவிரி நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் யாரும் கேட்கவில்லை” என கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி பேசியது, நீர் ஆதாரம் இல்லாமல் துவண்டு கிடக்கும் தமிழ்நாடு விவசாயிகளின் மனநிலையை மேலும் நோகடிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இது குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டது பின்வருமாறு,

“‘கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது’ என்றும், ‘நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்றும் அம்மாநில நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய முதலமைச்சர், கர்நாடக அமைச்சரின் இந்தப்பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?

கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக்காலத்தில், கடந்த 5 ஆண்டுகள் முழுவதும், சரியாக ஜுன் 12 அன்று மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு இன்று வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

மேகதாது அணைக் கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அந்த தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகளும் ஒன்றாகச் சென்று ஒன்றிய அரசிடம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.

காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பின்படி, ஜுன் மாதம் வழங்க வேண்டிய 9.91 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் திறக்காதது குறித்தும் பேசி இருந்தேன்.

இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் ஏதும் சொல்லாத நிலையில், தற்போது ஜூலை மாதம் தர வேண்டிய 32 டி.எம்.சி தண்ணீரையும் கர்நாடகம் தர மறுக்கிறது.

ஆளுங்கட்சியுடன் திடீர் கூட்டணி அமைத்திருக்கும் கட்சியின் ஆட்சி நடைபெறும் கர்நாடகத்திடம் இருந்து, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய தண்ணீரை முதலமைச்சர் கேட்டுப்பெற வேண்டும்.

எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.”

Also Read: உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!