Politics
தேர்தலுக்கு பிறகு விஜயுடன் கூட்டணி.. திட்டத்தை ஓப்பனாக உடைத்த பாஜக கூட்டணி இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே!
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், தேர்தலுக்கு பின் விஜயுடன் பேசி என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று பாஜக கூட்டணி ஒன்றிய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, த.வெ.க. என 4 முனைப்போட்டி நிலவுகிறது. இந்த சூழலில் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்தே பலரும், விஜய் பாஜகவின் பி டீம் எனவும், த.வெ.க-வை பாஜக ஆட்டி வைப்பதாகவும் விமர்சனம் எழுந்து வந்தது.
அதற்கு ஏற்றவாறு திமுக மீது மட்டுமே விமர்சனத்தை முன்வைத்த விஜய், பாஜகவுக்கு எதிராக இதுவரை எந்த ஒரு குரலும் எழுப்பவில்லை. தமிழ்நாட்டுக்கு பாஜக இழைத்து வரும் துரோகத்தை கண்டித்தோ, அல்லது ஜனநாயகன் பட விவகாரத்தை குறித்தோ இதுவரை விஜய், பாஜகவுக்கு எதிராக வாரத்தை கூட பேசாமல் இருந்து வருகிறார்.
இவ்வளவு ஏன் அண்மையில் சிலிண்டர் தட்டுப்பாடு, விவாசயிகளுக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசின் அமெரிக்கா ஒப்பந்தம் என எதற்கும் இதுவரை பாஜகவை கண்டித்து ஒரு பதிவும் வெளியிடவில்லை, ஒரு வார்த்தையும் பேசவில்லை. இதன் காரணமாகவே அரசியல் விமர்சகர்கள் உள்பட பலரும் விஜய் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
மேலும் விஜய்க்கு வாக்களிப்பதும், பாஜகவுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான் எனவும் பலரும் விமர்சித்து வருகின்றனர். அதுமட்மில்லாது, கரூர் விவகாரம் குறித்து சிபிஐ விசரணைக்கு டெல்லி சென்ற விஜய்யிடம், கூட்டணி பேரம் பேசப்பட்டதாகவும் தகவல் வெளியான நிலையில், விஜய் கட்சியின் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் "பாஜக எந்த கூட்டணி பேரமும் பேசவில்லை. இணையத்தில் தவறான செய்தி வெளியாவதாக' தெரிவித்தார்.
அவர் கூறிய அடுத்தநாளே த.வெ.க-வின் தேர்தல் மேலாண்மை குழு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா டெல்லி தங்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், முதல் 2 அரை ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமியும், அடுத்த 2 அரை ஆண்டுகள் விஜய்யும் முதலமைச்சராக இருக்கலாம் என பேரம் பேசியதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், அவை அனைத்தும் உண்மை என நிரூபிக்கும் வகையில், பாஜக கூட்டணியில் உள்ள ஒன்றிய இணையமைச்சர், தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பிறகு விஜயுடன் சேர்ந்து NDA ஆட்சியமைக்கும் என்று பேசியுள்ளார்.
அதாவது புதுச்சேரிக்கு வரும் ஏப்.9-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், ஒன்றிய இணையமைமைச்சரும், இந்திய குடியரசு கட்சியின் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராம்தாஸ் அத்வாலே பேசுகையில்,
நாகலாந்து மாநிலத்தில் கூட எங்கள் கட்சிக்கு 2 எம்எல்ஏ-க்கள் இருக்கின்றனர். அதனால் இந்த இரு மாநிலங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. தேசிய அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இந்திய குடியரசு கட்சியை வலுப்படுத்துவோம். அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
தற்போது 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. அசாம் மற்றும் புதுச்சேரியில் ஏற்கனவே என்டிஏ ஆட்சி இருக்கிறது. இந்த இரு மாநிலங்களில் மீண்டும் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைய கட்சியினர் உழைக்க வேண்டும். அதேபோல் கேரளத்தை பொறுத்தவரை சிபிஎம் ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அதனால் பாஜக கட்டாயம் வெல்லும்.
மேற்கு வங்கத்திலும் மம்தா பானர்ஜியின் ஆட்சியை பாஜக முடிவுக்கு கொண்டு வரும். தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யும் தேர்தலில் போட்டியிடுகிறார். ஒருவேளை தேர்தலுக்கு பின் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், தவெக தலைவர் விஜய்யிடம் பேசி ஆதரவு கோருவோம். தமிழ்நாட்டில் விஜய்யுடன் பேசி என்டிஏ கூட்டணி ஆட்சி அமைப்போம்." என்றார்.
ஏற்கனவே பாஜகவின் பி டீமாக விஜய் செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது பாஜக ஒன்றிய இணையமைச்சர் இவ்வாறு பேசியுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு, த.வெ.க-வினர் மத்தியிலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மக்களை கசக்கி பிழியும் ஒன்றிய பா.ஜ.க அரசு” : சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
175 இல்லை - 176 தொகுதிகளில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் களம் காணும் வேட்பாளர்கள்! : முழு விவரம் உள்ளே!
-
திருநெல்வேலி TO திருமங்கலம்... 33 தொகுதிகளில் முதலமைச்சரின் அடுத்த 3 நாள் பிரச்சாரம்... விவரம் உள்ளே!
-
“பாஜக கூட்டணியில், முழு சங்கியாகவே மாறியிருக்கிறார் பழனிசாமி!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
“கல்வித் துறையில் மாபெரும் பாய்ச்சலை உருவாக்கப் போகிற திராவிட மாடல் 2.O!” : முரசொலி தலையங்கம்!