Politics

“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!

ஒன்றிய பா.ஜ.க அரசிற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்க மறுத்துள்ளது டெல்லி நீதிமன்றம்.

இந்த நடவடிக்கையை இந்திய அளவில் பலரும் பாராட்டி வருகின்றனர். பா.ஜ.க.வின் அதிகார அரசியலுக்கு இது பெரும் அடியாக அமைந்துள்ளது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு தீர்ப்பு குறித்து வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு:

நேஷனல் ஹெரால்டு வழக்குத் தீர்ப்பின் மூலம், எதிர்க்கட்சித் தலைவர்களைப் பழிவாங்குவதற்காக ஒன்றிய பா.ஜ.க. அரசினால் மத்தியப் புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை மீண்டுமொருமுறை நீதித்துறை அம்பலப்படுத்தியுள்ளது.

சட்டரீதியான எந்தவொரு முகாந்திரமும் இன்றி, இத்தகைய வழக்குகள் அரசியல் எதிரிகளைத் துன்புறுத்தவும் களங்கப்படுத்தவுமே தொடரப்படுகின்றன.

உண்மையையும் அச்சமின்மையையும் தங்கள் பக்கம் கொண்டுள்ள மதிப்புக்குரிய நாடாளுமன்றக் காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தி அம்மையார் அவர்களும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் எனது சகோதரர் ராகுல் காந்தி அவர்களும் தவறிழைக்காதது நிரூபணமாகியுள்ளது.

ஆனாலும், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பின் மாண்புநெறிகளில் அவர்கள் உறுதியாக நிற்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத பா.ஜ.க.வானது காந்தி குடும்பத்தினரைத் தொடர்ந்து வேட்டையாடுவதில் குறியாக உள்ளது.

பா.ஜ.க.வின் இந்தப் பழிவாங்கும் நோக்கம் நாட்டின் உயர் புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மையை மீண்டும் மீண்டும் சிதைத்து, அவற்றை வெறுமனே அரசியல் எதிரிகளை அச்சுறுத்துவதற்கான கருவிகளாகச் சுருக்குகின்றது.

Also Read: தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?