Politics
அரசியலமைப்புச் சட்டமே ‘ஒன்றிய அரசு’ என்று குறிப்பிடும்போது, ‘மத்திய அரசு’ எதற்கு? : உதயநிதி கேள்வி!
சென்னை தனியார் விடுதியில் ஏ.பி.பி. நெட்வொர்க் சார்பில், தென்னக எழுச்சி மாநாடு 2025 என்னும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
ஏ.பி.பி நெட்வொர்க் நடத்தும் இந்த மதிப்புமிக்க ‘தென்னக எழுச்சி மாநாடு-2025’ இல் பேசுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
எனக்கு இந்த மேடை புதிதல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னக எழுச்சி மாநாட்டிலும் பங்கேற்று எனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். மீண்டும் அழைத்தமைக்கு ஏ.பி.பி. நெட்வொர்க் நிறுவனத்திற்கு எனது நன்றிகள்.
தமிழ்நாடு மாடல்
நாட்டில் அதிகார மையப்படுத்தல் தீவிரமாக அதிகரித்து வரும் மிக முக்கியமான தருணத்தில், இந்த மாநாடு நடைபெறுகிறது. கடந்த முறை ‘தமிழ்நாடு மாடல், இந்தியா கற்றுக்கொள்ள வேண்டியது’ என்ற தலைப்பில் பேசினேன். இம்முறை ‘திராவிட அல்காரிதம்: கூட்டாட்சியை வலுப்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பு’ என்ற தலைப்பில் பேச விரும்புகிறேன்.
அல்காரிதம் என்பது ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்கோ அல்லது இலக்கை அடைவதற்கோ தெளிவான படிநிலை வழிமுறைகளின் தொகுப்பாகும். அல்காரிதம் என்பது கணினியைப் பொறுத்தவரை, சரியான முடிவினை எட்ட படிப்படியாக என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லும் முறை.
அதேபோல, தமிழ்நாட்டு அரசியலும், திராவிட அல்காரிதம் எனும் ஒரு தெளிவான, தொடர்ச்சியான முறையைப் பின்பற்றுகிறது. கடந்த நூற்றாண்டில் நடந்தேறிய முக்கியமான சமூக, பண்பாட்டு, அரசியல் உள்ளீடுகளால் இந்த அல்காரிதம் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் அரசியல் நிலைப்பாடுகளை எடுக்கவும், இதுவே வழிகாட்டுகிறது.
அப்படிப்பட்ட அரசியல் முடிவுகளில் ஒன்று, தமிழ் மக்கள் ஒருபோதும் ஒன்றிய அரசின் ஆதிக்கத்துக்கு அடிபணிய மாட்டார்கள் என்பதுதான்.
ஒன்றிய அரசு
அரசியலமைப்புச் சட்டம் ஒன்றிய அரசின் அமைப்பையும் அதிகாரங்களையும் தெளிவாக வரையறுக்கிறது. அதிகாரங்கள் ஒன்றிய பட்டியல், மாநிலப் பட்டியல், ஒத்திசைவுப் பட்டியல் எனப் பிரிக்கப்பட்டுள்ளன.
அரசியலமைப்புச் சட்டமே `ஒன்றிய அரசு’ (Union Government) என்று குறிப்பிடும்போது, ஏன் பெரும்பாலான ஊடகங்களும் பல வட இந்தியத் தலைவர்களும் அதை ‘மத்திய அரசு’ (Central Government) என்று அழைக்கிறார்கள்?
டெல்லியில் உள்ள அரசை ‘மத்திய அரசு’ என்று அழைப்பது, அவர்கள் மையத்தில் இருப்பவர்கள் என்கிற எண்ணத்தையும், எல்லா அதிகாரங்களையும் தாங்களே சுருட்டிக் கொள்ளலாம் என்ற மனநிலையையும் அவர்களுக்கு உருவாக்குகிறது.
அதனால்தான் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘மத்திய அரசு’ என்ற சொல்லைத் தவிர்த்து,‘ஒன்றிய அரசு’ என்று பயன்படுத்தத் தொடங்கினார்கள். இதனால், பா.ஜ.க. தலைவர்களும் ஆதரவாளர்களும் எங்களைக் கடுமையாக விமர்சித்தார்கள். “மத்திய அரசை ஒன்றிய அரசு என்று எப்படிச் சொல்லலாம்?” என்று இன்னமும் கோபத்தில் உள்ளனர்.
இதில் தி.மு.க.வின் நிலைப்பாடு மிகத் தெளிவானது: நாடு முழுவதும் தொடர்புடைய மிகக் குறைந்த அதிகாரங்கள் மட்டுமே ஒன்றிய அரசுக்கு இருக்க வேண்டும். பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை, மாநிலங்களுக்கு இடையிலான தொடர்பு, பணம் இந்த நான்கு மட்டும் அதனிடம் இருந்தால் போதும். மீதமுள்ள அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுகளிடமே இருக்க வேண்டும்.
மாநில சுயாட்சிக்காக நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம்; ஒன்றிய அரசு அதிகாரங்களை தன்னகத்தே குவிப்பதன் மூலம் அதைத் தடுத்து வருகிறது. எங்களுடைய தலைவர்களான பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் எப்போதும் சொல்வது, “வலுவான கூட்டாட்சி முறைதான் நாட்டை வலுப்படுத்தும்” இந்தியாவின் வளர்ச்சி என்பது பெரும்பாலும் மாநில அரசுகளின் முயற்சிகளாலும் திட்டங்களாலும் வந்தது. ஆனால், சிறப்பாக செயல்படும் மாநிலங்களை ஆதரிப்பதற்குப் பதிலாக ஒன்றிய அரசு அவற்றைத் தண்டிக்கிறது.
வரிப் பகிர்வில் அநீதி
வரிப் பகிர்வில் அநீதி, நிதியை விடுவிப்பதில் தாமதம் அல்லது மறுப்பு, ஒன்றிய அரசின் திட்டங்களைத் திணிப்பது, புதிய கல்விக் கொள்கை, சமீபமாக தொகுதி மறுவரையறை (Delimitation) போன்றவற்றால் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்படுகின்றன. ஆளுநர் மூலமும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைப் பலவீனப்படுத்துகிறார்கள்.
டெல்லியில் அதிகாரகுவிப்பு அதிகரிப்பதால், நம்மைப் போன்ற மாநிலங்கள் பண்பாட்டு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றன. 1967-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றுகிறது. இந்தித் திணிப்புக்கு எதிராக நூற்றாண்டு காலப் போராட்ட வரலாறு நமக்கு உள்ளது.
இதை மீறி புதிய கல்விக் கொள்கை மூலம் மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயல்கிறது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டுக்கு உரிய ரூ.2,100 கோடி கல்வி நிதியை, ‘மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே விடுவிப்போம்’ என்று கூறினார்கள்.
நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதியாகக் கூறினார்கள் : “ரூ.2,000 கோடி மட்டுமல்ல, ரூ.10,000 கோடி கொடுத்தாலும், தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஒருநாளும் ஏற்காது.” இன்னும் அந்த நிதி ஒதுக்கப்படவில்லை.
கல்வி நிதியை விடுவிக்ககோரி, உச்சநீதிமன்றத்தில் சட்ட போராட்டத்தைத் தொடர்ந்துள்ளோம். எங்களுடைய இந்த போராட்டம் தொடரும்.
மொழிப் போர் - தயங்காது
இந்த மாநாட்டில் தெளிவாகக் கூறுகிறேன், ஒன்றிய அரசு இந்தியையோ வேறு எந்த மொழியையோ நம்மீது திணித்தால், தமிழ்நாடு மற்றுமோர் மொழிப் போராட்டத்தை நடத்தவும் தயங்காது.
அதேபோல கீழடி அகழாய்வையும் ஒன்றிய அரசு எல்லா வழிகளிலும் தடுத்தது. ஆனால், நமது திராவிட மாடல் அரசு உறுதியாக நின்று பணியைத் தொடர்ந்தது. அறிவியல் ஆதாரங்களுடன் கீழடி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும் ஒன்றிய அரசு அதை அங்கீகரிக்கவில்லை. ஏனெனில், ஒன்றியத்தில் ஆளும் கட்சி உண்மைகளை புறந்தள்ளி, சான்றுகளை மறுத்து தனக்கேற்ற வரலாற்றை உருவாக்க விரும்புகிறது.
முதலில் அவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், இந்தியா பல்வேறு மொழிகள் மற்றும் பல்வேறு பண்பாடுகளை கொண்ட ஒரு நாடு. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்துவமான மொழி, வரலாறு, கலாசாரம், அரசியல் உள்ளது.
ஆனால், பா.ஜ.க. “ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே பண்பாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே வரலாறு” என்ற தங்கள் கருத்தால் எல்லாவற்றையும் ஒற்றை அடையாளத்திற்குக் கொண்டுவர விரும்புகிறது.
மாநிலங்களை அதிகாரமற்றவையாக மாற்றி, இந்தியாவை ஒற்றையாட்சியை நோக்கி தள்ள அவர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், மாநிலம் என்ற ஒன்றையே இல்லாமல் ஆக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் அவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.
மாநிலங்களை அதிகாரமற்றதாக்கி, மாநகராட்சிகளைப் போல டெல்லியின் கட்டளைக்கு இயங்க வைக்க விரும்புகிறார்கள். தி.மு.கழகம் இந்தத் திட்டத்திற்குப் பெரிய தடையாக இருப்பதால், தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களைத் தடுக்க, அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்கிறார்கள். ஒன்றிய அரசின் அதிகாரங்களையும், சுயேச்சையான அமைப்புகளையும் நிறுவனங்களையும்கூட அவர்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.
நியாயமான நிதிப் பகிர்வு
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் நிதி பற்றாக்குறை தொடர்பான கோரிக்கைகளை எழுப்பி, நமக்குரிய நியாயமான பங்கைக் கோரும்போதெல்லாம், ஆளும் ஒன்றிய அரசு இவற்றை முற்றிலும் புறக்கணித்துவிடுகிறது. வரி வருவாய் மற்றும் நிதிப் பகிர்வில் நடக்கும் அநீதி ஆகியவை ஏற்கெனவே தென் மாநிலங்களைப் பெரிதும் பாதித்துள்ளது.
நாட்டுப் பொருளாதாரத்திற்கு நாம் அதிகம் பங்களிப்பு செய்தும்கூட நாம் பாதிப்பைச் சந்திக்கிறோம். நியாயமான நிதிப் பகிர்வு கேட்கும் பொருளாதார வலுவுள்ள மாநிலங்களின் குரலை அடக்குவதற்காக, பா.ஜ.க. இப்போது புதிய ஆயுதமாக ‘தொகுதி மறுவரையறை’ (Delimitation) என்ற புதிய தந்திரத்தைக் கொண்டுவருகிறது.
இந்த சதியை முன்கூட்டியே புரிந்துகொண்டு அதற்கு எதிர்ப்புக் குரல் எழுப்பிய நமது முதலமைச்சரின் செயலை இங்கு பெருமையுடன் சுட்டிக்காட்டுகிறேன்.
ஏனெனில் தொகுதி மறுவரையரை நடந்தால், ஒன்றிய அரசின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்துவிடும். மக்கள் தொகை கட்டுப்பாட்டை சரியாக செயல்படுத்தாத மாநிலங்களுக்கு நாடாளுமன்றத்தில் அதிக இடங்கள் கிடைக்கும்.
ஒரே வாக்கியத்தில் பா.ஜ.க.வின் திட்டத்தைச் சுருக்கமாகச் சொல்வதானால், ‘பொருளாதார ரீதியாக வலுவான மாநிலங்களை அரசியல் ரீதியாக பலவீனமாக்க வேண்டும்; பொருளாதார ரீதியாக பலவீனமான மாநிலங்களுக்கு அதிக அரசியல் அதிகாரம் தர வேண்டும்.’
இந்தத் தொகுதி மறுவரையறை ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்பை மேலும் அதிகப்படுத்தி, நாட்டில் மீதமிருக்கும் சொற்பமான கூட்டாட்சித் தன்மையையும் அழித்துவிடும். அண்மையில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மக்கள் தொகை குறைவு என்று ஒன்றிய அரசு நிராகரித்தது என்பது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும்.
ஆனால், கோவை, மதுரையைவிட மக்கள் தொகை குறைந்த பல நகரங்கள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மெட்ரோ திட்ட அனுமதி பெற்றுவிட்டன என்பதும் உங்களுக்குத் தெரியும்.
மாநில அரசுகள்மீது ஆதிக்கம் செலுத்த பா.ஜ.க. முயலும்போதெல்லாம் தி.மு.க. அரசு தொடர்ந்து எதிர்த்து நிற்பதால், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் எங்களுக்கு எதிராக ஏவி மிரட்டுகிறார்கள். சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமான வரித் துறை முதலான அமைப்புகளை எங்களை அச்சுறுத்துவதற்காகவே தி.மு.க.வினர் மீது ஏவி, செயல்படுகிறார்கள்.
எதிர்ப்புக் குரல்
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டிய அ.தி.மு..க.வை ஏற்கெனவே இதே அச்சுறுத்தல் மூலம் பா.ஜ.க.வின் கிளையாக மாற்றிவிட்டார்கள். ஜனநாயக சக்திகள் எல்லாம் எஸ்.ஐ.ஆர். S.I.R. (Special Intensive Revision) என்பதற்கு எதிராகக் குரல் கொடுக்க, அ.தி.மு.க. மட்டும் உச்ச நீதிமன்றத்தில் S.I.R.-ஐ ஆதரித்து வழக்கு தொடர்ந்தது.
பெயரில் மட்டும் ‘திராவிடம்’ என்று வைத்துக்கொண்டு, திராவிட கொள்கைகளுக்கு நேர் எதிராக நடக்கும் அந்த அடிபணிந்த அ.தி.மு.க.வைப் போல, தி.மு.க.வும் அடங்கிப்போக வேண்டும் என்று பா.ஜ.க. எதிர்பார்க்கிறது.
எல்லா புலனாய்வு அமைப்புகளையும் எங்கள்மீது ஏற்கெனவே பயன்படுத்திவிட்டார்கள். இப்போது இந்திய தேர்தல் ஆணையத்தையும் தங்கள் அரசியல் ஆட்டத்தில் இழுத்துவிட்டுள்ளார்கள்.
தமிழ் மொழி, சமூக நீதி, மாநில உரிமைகள், ஜனநாயகம் ஆகியவற்றைக் காப்பதற்காக தி.மு.க. எப்போதும் போராடியிருக்கிறது. இன்று தமிழ் மக்களின் வாக்குரிமையையும் காப்பது அதன் பொறுப்பாக உள்ளது.
மேலும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களைத் தடுத்து மாநில அரசின் செயல்பாடுகளை முடக்குவதற்காக பாஜக ஆளுநரை பணியில் இறக்கியிருக்கிறது. தமிழ்நாடு என்ற நம் மாநிலப் பெயரையே மாற்ற நினைத்த ஆளுநர், மக்களின் பெரும் எதிர்ப்பால் மட்டுமே பின்வாங்கினார்.
பல பத்தாண்டுகளுக்கு முன் முன்பு நமது தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அமைத்த நீதிபதி ராஜமன்னார் குழுவைப் போலவே, தற்போது நமது முதலமைச்சரும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஒன்றிய-மாநில உறவுகள் தொடர்பாக ஆராய உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்துள்ளார். கூட்டாட்சிக்கான நமது போராட்டம் நீண்டதும் தொடர்ச்சியானதும் என்பதை இது காட்டுகிறது.
எல்லா மாநில மக்களும் தலைவர்களும் கூட்டாட்சியின், மாநில உரிமைகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள இந்த முயற்சிகள் உதவும் என்று நம்புகிறேன். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தரும் வகையில் அரசியலமைப்புத் திருத்தங்கள் வேண்டும்; அப்போதுதான் இந்தியா உண்மையான வலுவான மாநிலங்களின் ஒன்றியமாக இயங்க முடியும்.
வாழ்வதற்கான சிறந்த வழி
கடந்த ஒரு நூற்றாண்டில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், நமது மாண்புமிகு முதலமைச்சர் ஆகியோரின் வழிகாட்டுதல்கள், அரசியல் போராட்டங்கள், சமூக இயக்கங்கள், பண்பாட்டு விழிப்புணர்வு போன்றவைகளால் தமிழ்நாட்டு மக்கள் தன்மானம், சுயமரியாதை, சமத்துவம், மதச்சார்பின்மை, நல்லிணக்கம் ஆகியவற்றுடன் வாழ்வதற்கான சிறந்த வழியைக் கண்டறிந்துள்ளனர்.
அதனால் தான் பிளவுவாத சக்திகளை எதிர்த்து போராடும் இந்த நூற்றாண்டுகால செயல்முறையையே நான் ‘திராவிட அல்காரிதம்’ என்று அழைக்கிறேன். இந்த அல்காரிதம்தான் மதவாத, பிளவுவாத சக்திகளை எதிர்த்து நிற்கவும், நாட்டின் கூட்டாட்சி அமைப்பைப் பாதுகாக்கவும் வலுப்படுத்தவும் நமக்கு வழிகாட்டும், வலிமை தரும். நாங்கள் ஒன்றிய அரசுக்கு எதிரானவர்கள் அல்ல;
அரசியலமைப்புச் சட்டத்தைப் பலவீனப்படுத்துவதற்கு எதிரானவர்கள். சிறப்பு உரிமை கேட்பவர்கள் அல்ல; நியாயமான உரிமை கேட்பவர்கள். வலுவான மாநிலங்களே வலுவான நாட்டை உருவாக்கும்.கூட்டாட்சி என்பது பேரம் பேசும் பொருள் அல்ல; இந்திய ஒற்றுமையின் அடித்தளம்.
அதிகாரக் குவிப்புகள் தொடரும் வரை, உரிமைகள் மறுக்கப்படும் வரை, மாநிலங்களைக் கீழாகக் கருதும் போக்கு உள்ளவரை, இவற்றுக்கு எதிராக – தி.மு.க.வும் எங்கள் தலைவரும் முன்னின்று பேசுவோம், போராடுவோம். நமது குரல் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; அரசியலமைப்புச் சட்டம் காண விரும்பிய இந்தியாவுக்கானது.
Also Read
-
ஈரோடு மாவட்டத்திற்கான 6 புதிய அறிவிப்புகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது என்ன?
-
“திமிரெடுத்து பேசும் ஆளுநர் ஆர்.என்.ரவி.யின் திமிரை நாம் அடக்க வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ஈரோடு - 1,84,491 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் : 23 புதிய திட்டப் பணிகள்!
-
”சொன்னதை செய்பவன்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் - இதுதான் சாட்சி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு : சேலம் அ.தி.மு.க நிர்வாகி கைது!