Politics
"100 வருட போராட்டத்திற்கு பிறகு இந்த நிலைமையை அடைந்திருக்கின்றோம்" - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைகளின் சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டம், சிறந்த பள்ளிகளுக்கான விருது வழங்கும் விழா மற்றும் குழந்தைகள் தின விழாவில் கலந்துகொண்டார்.
தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். அதன் விவரம் :
இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்குவது, குழந்தைகள் தின விழா, சிறந்த அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்குகின்ற 3 நிகழ்ச்சிகளை ஒரே இடத்தில் நடத்தி, உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.
இன்றைக்கு, சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் சுமார் 11 ஆயிரத்து 500 மாணவச் செல்வங்களுக்கு இந்த சைக்கிள்களை வழங்க இருக்கின்றோம். அதே போல் தமிழ்நாடு முழுவதும், 5 லட்சத்து 35 ஆயிரம் மாணவர்களுக்கு சைக்கிள்களை நாம் வழங்க இருக்கின்றோம்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பேசும்போது குறிப்பிட்டு பேசினார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்களின் துறை சைக்கிள்களை கொடுப்பதாகவும், வாங்குவது அவருடைய பள்ளிக்கல்வித் துறை என்றும் அவர் குறிப்பிட்டு, நன்றி தெரிவித்து பேசினார். அதில் ஒரு சின்ன திருத்தம், கொடுப்பது நம்முடைய முதலமைச்சர் அவர்கள், வாங்குவது இங்கே வந்திருக்கக்கூடிய பள்ளி மாணவர்கள்.
இதில் இன்னொரு பெருமைக்குரிய விசயம் என்னவென்றால், இன்றைக்கு மாநிலம் முழுவதும் கொடுக்கப்படுகின்ற அந்த சைக்கிள்களில், அதனை பெறுபவர்கள் மாணவர்களைவிட, மாணவிகள் எண்ணிக்கை மிக, மிக அதிகம். அதிகம் என்றால், ஆயிரம், இரண்டாயிரம், ஐயாயிரம் இல்லை. இன்றைக்கு 57 ஆயிரம் மாணவிகள் அதிகமான பேர் சைக்கிள்களை பெற இருக்கின்றீர்கள்.
ஆண்களை விட பெண் பிள்ளைகள் இன்றைக்கு அதிகம் படிக்க வருவதற்கான அடையாளம் தான் இந்த எண்ணிக்கை. இதுதான் நம்முடைய திராவிட மாடல் அரசினுடைய முதலமைச்சர் அவர்களுடைய வெற்றி.
இன்றைக்கு இவ்வளவு பெண்களுக்கு நாம் சைக்கிள் கொடுக்கின்றோம். இத்தனைபேர் படிக்க வருகின்றீர்கள். ஒரு காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதி கிடையாது. படிப்பதற்கு உரிமை கிடையாது. பெண்களை அடிமைப்படுத்தி படிக்கவிடாமல் வைத்திருந்தார்கள். அதையெல்லாம் தலைகீழாக மாற்றி, பெண்கள் எல்லோரும் படிக்க வேண்டும், அனைவரும் படிக்க வேண்டும் என்ற நிலைமையை ஏற்படுத்தியது நம்முடைய திராவிட இயக்கம் என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த நிலைமை சாதாரணமாக வரவில்லை. கிட்டத்தட்ட ஒரு 100 வருட போராட்டத்திற்கு பிறகு தான் இந்த நிலைமையை நாம் அடைந்திருக்கின்றோம். பல போராட்டங்கள், தியாகங்களுடைய பலனாகத்தான் இங்கே நீங்கள் இத்தனை ஆயிரம் பேர் படிக்க வந்திருக்கின்றீர்கள்.
இந்த வரலாற்றை எல்லாம் மாணவர்கள் நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக தான் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள். மாணவச் செல்வங்கள் நீங்கள் அத்தனை பேரும் நன்றாகப் படிக்க வேண்டும். வாழ்கையில் நீங்கள் அத்தனைபேரும் படித்து நல்ல நிலைமைக்கு முன்னேறி வரவேண்டும்.
அதற்காகதான் நம்முடைய அரசு, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். சமீபத்தில், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற ஒரு நிகழ்ச்சியை நம்முடைய அரசு நடத்தியது. பள்ளிக் கல்வித்துறை நடத்தியது. உங்களில் பலபேர் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள், Youtubeல் பாத்திருப்பீர்கள்.
கல்வி, ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலும் எந்த அளவிற்கு ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று அந்த நிகழ்ச்சியை பார்த்த அத்தனைபேருக்கும் புரிந்திருக்கும். ஏழ்மை நிலைமையில் இருக்கக்கூடிய ஒரு குடும்பத்தை, அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய ஒருத்தருடைய கல்வி எந்த அளவிற்கு உயர்த்திடும் என்பதை அந்த நிகழ்ச்சியை பார்த்த அத்தனைபேருக்கும் புரிந்திருக்கும்.
கல்வி என்பது அவ்வளவு பவுர்ஃபுல்லான விஷயம். கல்வி உங்களுக்கு வெறும் பொருளையும், பணத்தை மட்டும் கொடுப்பதில்லை. உங்களுக்கு அதனுடன் சேர்த்து Confidence-ஐயும் Power-ஐயும் கொடுப்பது தான் கல்வி. அதனால்தான் இன்றைக்கு இந்தியாவிலேயே கல்விக்காக அதிக திட்டங்களை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். படிப்பு மூலமாக பெறுகின்ற அந்த அறிவை, நீங்கள் சுயமாக சிந்திக்க பயன்படுத்த வேண்டும்.
ஒரு யானை பாகன், அவனுடைய யானையை ஒரு சின்ன கயிறு மூலமாக கட்டி வைத்திருந்தானாம். அதை பார்த்து அந்த பக்கம் வந்த ஒரு சுற்றுலா பயணி அந்த யானைப்பாகனிடம் சென்று கேட்டிருக்கின்றார். இவ்வளவு பெரிய யானையை இவ்வளவு சின்ன கயிற்றில் கட்டிப் போட்டிருக்கீங்களே. யானை அந்த கயிற்றை அறுத்துவிட்டு ஓடிவிடாதா என்று அந்த பயணி கேட்டுள்ளார். அதற்கு அந்த யானை பாகன் சொன்னான். இந்த யானை, குட்டி யானையாக இருக்கும்போது இந்த கயிற்றை வைத்து நான் கட்டிப் போட்டிருந்தேன். அதில் இருந்து, இப்போது வளர்ந்து கொஞ்சம், கொஞ்சமாக பெரிதாகிவிட்டது. இருந்து அதே கயிற்றில் தான் நான் கட்டிப்போடுகிறேன்.
குட்டியாக இருந்த போது அறுக்க முடியாத கயிற்றை, இப்பவும் அறுக்க முடியாது என்று அந்த யானை இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறது. என்று பதிலில், அந்த யானை பாகன் சொன்னானாம்.
நம்முடைய மனித மூளையும் அதே மாதிரிதான், நமக்கு இதெல்லாம் வராது, நம்மால் இதை எல்லாம் செய்ய முடியாது என்று நாம் யாரும் நினைக்க கூடாது. அப்படி நினைத்தால், நமக்கும் அந்த யானையுடைய நிலைமை தான்.
ஆகவே, நாம் அத்தனை பேரும், குறிப்பாக வந்திருக்கக்கூடிய மாணவச் செல்வங்கள் நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். அதற்கு உங்களுடைய சிந்தனை ஆற்றலை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இன்றைக்கு நாம் அனைவரும் மகிழ்ச்சியோடு குழந்தைகள் தினத்தை கொண்டாடுகிறோம். இன்றைக்கு உங்களுக்கான தினம்.உண்மையிலேயே, பெரியவர்களை விட அதிகமாக சிந்திக்கிறவர்கள் இங்கு வந்திருக்கக்கூடிய மாணவச் செல்வங்கள், குழந்தைகள் நீங்கள் தான்.
எப்படி எல்லாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதை உங்களிடம் நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப்போனால் சில நேரங்களில் நீங்கள் தான் எங்களுக்கே டீச்சர்ஸ்.
எங்கள் வீட்டில் எங்கள் அப்பா, அம்மா கேட்கின்ற கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடிந்துவிடும். ஆனால், என்னுடைய பெண் கேட்கின்ற கேள்விக்கு உடனே என்னால் பதில் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு தெளிவாக கேள்வி கேட்பார்கள்.
உங்கள் மனதில் ஒவ்வொரு நொடியும் பல கேள்விகள் தோன்றிக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட அந்த கேள்விகைள நாம் கேட்டுவிடவேண்ம். சிந்தித்து கேள்வி கேட்க வேண்டும்.
அதனால் தான், நம்முடைய தலைவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், எல்லோரும் தொடர்ந்து பகுத்தறிவு பற்றி என்னவென்று வலியுறுத்தி கொண்டே இருந்தார்கள்.
பகுத்தறிவுன்னா என்னா? எந்த விசயமாக இருந்தாலும், ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்க வேண்டும். பதில் கிடைக்கும் வரை கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அதற்கு சரியான பதில் நமக்கு கிடைக்கும். ஒரு நமக்கு ஒரு தெளிவும் பிறக்கும்.
அப்படி தொடர்ந்து தமிழர்கள் கேள்வி கேட்டதனால்தான், இன்றைக்கு இந்தியாவிலேயே மிகச் சிறந்த ஒரு மாநிலமாக, கல்வியில் சிறந்த மாநிலமாக நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்கள், தமிழ்நாடு சிறப்பாக விளங்கி கொண்டிருக்கிறது.
இன்னும், தமிழ்நாடு, உலக நாடுகளோடு போட்டிப்போடுகின்ற அந்த நிலைமைக்கு நாம் உயர்த்த வேண்டும். அப்படி வளர வேண்டும், உயர்த்த வேண்டும் என்றால், இங்க வந்திருக்கக்கூடிய மாணவர்கள், மாணவிகள் நீங்கள் அத்தனைபேரும் நன்றாகப் படிக்க வேண்டும். அதை விட முக்கியமாக சிந்திக்கும் திறனை நாம் வளத்துக் கொள்ள வேண்டும்.
உங்களுடைய கல்வி வளர்ச்சிக்காக நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றார்கள். 1 ஆம் வகுப்பிலிருந்து 5 ஆம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவச் செல்வங்களுக்கு ஒவ்வொரு நாளும் 22 லட்சம் குழந்தைகளுக்கு முதலமைச்சர் காலை உணவுத்திட்டத்தை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி இருக்கின்றார்.
பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல கல்லூரி மாணவர்களுக்கும் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றார். அரசுப் பள்ளிகளில் படித்து, காலேஜ் சென்று படித்தால், அது எந்த காலேஜ் ஆக இருந்தாலும் சரி, எந்த படிப்பாக இருந்தாலும் சரி, மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன், மாணவிகளுக்கு புதுமைப்பெண் என்ற திட்டத்தின் மூலம் மாதம் 1,000 ரூபாய் கல்வி ஊக்கத் தொகை. இதன் மூலமாக 8 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்றுள்ளார்கள்.
இன்றைக்கு உங்களுக்கு நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மிதிவண்டிகளை கொடுத்திருக்கின்றார். இன்னும் சில மாதங்களில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப் திட்டமும் வழங்கப்பட இருக்கின்றது.
நீங்களும் இன்னும் சில ஆண்டுகளில் படித்து முடித்து காலேஜ்க்கு செல்லும்போது, உங்களுக்கும் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் லேப்டாப் கொடுப்பார்கள்.
பள்ளி கல்லூரியில் மட்டுமல்ல, உயர்கல்வியை முடித்த பிறகும், உங்களுக்கு துணை நிற்க, உங்களுக்கு உதவுவதற்காகத்தான் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்த திட்டம். நான் முதல்வன் திட்டம்.
இரண்டு நாளைக்கு முன்பு செய்திகளில், தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து 155 மாணவர்கள் UPSC mains clear பண்ணியிருக்கிறார்கள். UPSC preliminary exam, mains, interview என்று ஒவ்வொரு stageலயும் நான் முதல்வன் திட்டம் மூலமாக நம்முடைய அரசு ஊக்கத் தொகையை கொடுத்து கொண்டிருக்கிறது.
இந்த திட்டங்களை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நல்ல முறையில் அதையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாம் அத்தனைபேரும் Instagram, YouTube-ல எல்லாம் ரீல்ஸ் பார்க்கின்றோம், பார்ப்பீர்கள். ஒன்றை மட்டும் செல்ல விரும்புகின்றேன். ரீல்ஸ் மட்டுமே வாழ்க்கை கிடையாது. அதில் முக்கால்வாசி பொய் என்பதால்தான், அதற்கு பேரே Reels.
Real-ஆ நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்றால், கல்வி தான் உங்களுக்கு என்றைக்குமே கை கொடுக்கும் என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். கல்வியோடு சேர்த்து விளையாட்டிலும் ஆர்வம் செலுத்துங்கள்.
நீங்கள் கல்வியில் முன்னேறினால், உங்களுடைய குடும்பம் பொருளாதாரத்தில் நிச்சயம் முன்னேறும். உங்களுக்கே அந்த நம்பிக்கை வரும். உங்கள் குடும்பம் எல்லாம் முன்னேறும்போது, ஒட்டுமொத்த தமிழ்நாடும் முன்னேறும். அந்த முன்னேற்றத்தை உங்களுடைய கல்வியில் இருந்து தான் தொடங்க முடியும்.
உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய மிதிவண்டிகள், அது உங்களுடைய சைக்கிள், உங்களுடைய சொத்து, நீங்கள்தான் அதற்கு ஓனர்ஸ் இனிமேல், அதை பாதுகாப்பாக வைத்து பத்திரமாக பராமரிக்க வேண்டும்.
இங்கே பல மாணவச் செல்வங்கள் வந்திருக்கின்றீர்கள். பல ஆசிரியர்கள் வந்திருக்கின்றீர்கள். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களும் வந்திருக்கின்றார். அவரை வைத்துக் கொண்டு ஆசிரியர் பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து பள்ளிக்கூடங்களில் PET periodஐ கடன் வாங்கி மற்ற periodஐ நடத்தாதீர்கள். முடிந்தால், உங்கள் periodஐ கடன் கொடுத்து, மாணவர்களை அதிகமாக விளையாட்டுத்துறையில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கு ஊக்கமளியுங்கள். படிப்பு எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு மாணவச் செல்வங்களுடைய உடல் ஆரோக்கியமும் மிக, மிக முக்கியம்.
எனவே, இங்கு வந்திருக்கக்கூடிய சைக்கிள் பெற்ற மாணவர்களுக்கும், சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளைப் பெற்ற ஆசிரியர் பெருமக்களுக்கும், மீண்டும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து, வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்.
Also Read
-
தமிழ்நாட்டுக்கு கல்வி நிதியை வழங்காத பாஜக அரசு : ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
"SIR விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கும் அண்டக் கொடுக்கிறார் அடிமை பழனிசாமி" - திமுக IT விங் விமர்சனம் !
-
“அ.தி.மு.க உதிரிக் கட்சியாக கூட இருக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.5.24 கோடி செலவில் முதல்வர் படைப்பகம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட நூலகம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
”குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க துணை நிற்போம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!