Politics
“எல்லா மாநிலத்திலும் அரசியல் களம் பா.ஜ.க.வுக்கு எதிராக மாறுகிறது!”: துணை முதலமைச்சர் உதயநிதி எழுச்சியுரை!
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தி.மு.க 75 அறிவுத் திருவிழாவையொட்டி, முற்போக்கு புத்தகக் காட்சி -2 நாள் கருத்தரங்கம் - காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு நூல் வெளியீடு, ஓவிய புகைப்படக் கண்காட்சி, எனக் கோலாகலமாக தி.மு.கழக இளைஞர் அணி சார்பில் சிறப்பான ஏற்பாடுகளுடன் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் நூலை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, இரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் முற்போக்குச் சிந்தனையாளர்கள் பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர். கருத்தரங்கின் நிறைவாக கழக இளைஞர் அணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எழுச்சிமிக்க உரையாற்றினார்.
அப்போது அவர் தி.மு.க. என்கிற விதையை கழக உடன்பிறப்புகள் தண்ணீர் ஊற்றி வளர்க்கவில்லை. வியர்வை, ரத்தம் சிந்தி, தங்கள் உயிரையே உரமாக்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்த்தார்கள். உடன்பிறப்புகளின் தியாகத்தால்தான் நம் இயக்கம், இன்றைக்கு ஒரு ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. அதனால்தான், பெரிய பெரிய புயலால் கூட நம் இயக்கத்தை வீழ்த்த முடியவில்லை. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்று எழுச்சிமிக்க உரையாடினார்.
கழக இளைஞர் அணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய எழுச்சிமிக்க உரையின் விவரம் வருமாறு:
திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டு, 75 ஆண்டுகள் முடிந்து 76 -வது ஆண்டில் நாம் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம். அதைக் கொண்டாடிடும் வகையில் ஒரு நிகழ்ச்சி. தி.மு.க – 75’ என்ற இந்த சிறப்புக்குரிய விழாவை, இளைஞர் அணியின் சார்பில் நடத்துவதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.
இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு அனுமதி வழங்கியதோடு மட்டுமல்லாமல், அதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கி, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு சிறப்பித்து இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக வெற்றி பெறச்செய்த, நம் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், கழகத்தின் பொதுச் செயலாளர் – நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாமா அவர்களுக்கும், தலைமைக் கழகத்துக்கும் இளைஞர் அணியின் சார்பாக முதலில் எங்களுடைய நன்றியை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
இரண்டு நாள் நிகழ்ச்சியில் பேசியவர்கள் எல்லாம் பாராட்டி, வாழ்த்திப் பேசியிருக்கிறார்கள். பலர் மேடையில் வாழ்த்தியிருக்கின்றார்கள். பலர் என்னை நேரில் சந்தித்த போது, சிறப்பான முயற்சி என்று வாழ்த்தியிருக்கின்றார்கள். பலர் வாழ்த்தியிருந்தாலும் மனதிற்குள் சின்ன வருத்தமிருக்கலாம். மனசுக்குள் திட்டியிருப்பார்கள். இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தி, இரண்டு நாட்கள் நம்மை உட்கார வைத்து விட்டானே என்று. காலத்தின் கட்டாயம் கருதித்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது.
வள்ளுவர் கோட்டம்
தி.மு.க. 75 விழாவை, எங்கு வேண்டுமானாலும் நடத்தியிருக்கலாம். அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடத்தியிருக்கலாம். ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடத்தியிருக்கலாம். அன்பகத்தில் நடத்தியிருக்கலாம். ஆனால், வள்ளுவர் கோட்டத்தைத் தேர்வு செய்ததற்கு மிக, மிக முக்கியமான காரணம் உண்டு. நிறையபேர் இந்த வள்ளுவர் கோட்டம் பக்கம் வரமாட்டார்கள். அதற்கு காரணங்கள் உண்டு. எனக்கு அதில் நம்பிக்கை கிடையாது. அதுவும் இந்த இடத்தைத் தேர்வு செய்ததற்கு ஒரு முக்கிய காரணம். பலர் வரத் தயங்கிய, யோசித்த இடம் இந்த வள்ளுவர் கோட்டம்.
கலைஞருக்கும் இந்த வள்ளுவர் கோட்டத்துக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், இந்த வள்ளுவர் கோட்டத்துக்கும், எந்த அளவுக்கு நெருக்கமும், தொடர்பும் இருக்கிறது என்பதற்கு, இங்கே நான் உங்களுக்கு விளக்கி சொல்ல விரும்புகிறேன். எப்போதும் ஒரு நிகழ்ச்சியில் நான்கைந்து பேர் பேசிய பிறகு, கடைசியாகப் பேசுபவர்கள் பேசும்போது மிகவும் கஷ்டப்படுவார்கள். நாம் பேச வைத்திருந்த குறிப்புகள் அத்தனையையும் அந்த நான்கைந்து பேர், பகிர்ந்து பேசியிருப்பார்கள். இளம் பேச்சாளர்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். எவ்வளவு குறிப்புகள் தயார் செய்திருந்தாலும், எவ்வளவு கூட்டங்கள் பேசினாலும், நாம் நினைத்ததை வேறு ஒருவர் பேசிவிட்டு போய்விடுவார். ஐயோ, நாம் வைத்திருந்த பாயிண்ட் போய்விட்டதே என்று யோசிப்போம்.
ஒரு நிகழ்ச்சிக்கே அப்படி என்றால், கிட்டத்தட்ட 10 அமர்வுகள், 44 சிறந்த பேச்சாளர்கள். சாதாரண பேச்சாளர்கள் கிடையாது. அவர்கள் பேசி கடைசியாக நாம் பேசும்போது சில பிரச்சினைகள் இருக்கும்.
தமிழ்நாட்டின் முக்கியமான பண்பாட்டு அடையாளமாக இருக்கிற இந்த வள்ளுவர் கோட்டத்துக்கு, 1973-ஆம் ஆண்டிலேயே, கலைஞர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள். இந்த வள்ளுவர் கோட்டத்தைப் பார்த்து பார்த்து வடிவமைத்து, கட்டினார்கள்.
1976-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இதனைத் திறக்க, அப்போது முதலமைச்சராக இருந்த நம் கலைஞர் அவர்கள், நாள் கூட குறித்துவிட்டார்கள். ஆனால், அதற்கு முன்பாக எமர்ஜென்சியை கொண்டு வந்து அன்றைக்கு நம்முடைய ஆட்சியைக் கலைத்துவிட்டார்கள். பிறகு, அன்றைய ஆளுநர் தலைமையில், அப்போதைய குடியரசுத் தலைவர் வந்து இந்த வள்ளுவர் கோட்டத்தைத் திறந்து வைத்தார். கலைஞர் அவர்களுக்கு, அழைப்பு கூட கொடுக்கவில்லை. கலைஞர் அவர்கள், அடிக்கல் நாட்டிய கல்லைக் கூட அப்புறப்படுத்தினார்கள்.
வெற்றிக் கோட்டம்
அப்போது கலைஞர் அவர்கள் முரசொலியில் எழுதினார்கள், ``தான் வளர்த்து ஆளாக்கிய பிள்ளைக்கு திருமணம் நடக்கும்போது, தாலி கட்டும் காட்சியைக் காணாமல், பந்தலுக்கு வெளியே, ஒரு தாய் நிறுத்தப்பட்டால் எப்படி இருக்குமோ, அப்படி தவிக்கிறது என் மனசு’’ என்று எழுதினார்கள்.
அந்த சம்பவம் நடந்து 13 ஆண்டுகள் ஆன பிறகு, 1989-இல் டாக்டர் கலைஞர் அவர்கள் மீண்டும் முதலமைச்சரானார். மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை அமைத்தது. அப்போது, கலைஞர் அவர்கள், இதே வள்ளுவர் கோட்டத்தில்தான் பதவியேற்பு விழாவை நடத்தி, முதலமைச்சராக பொறுப்பேற்றார்கள். இதிலிருந்து ஒரேயொரு விஷயத்தை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
நம் இயக்கத்தை யார் வீழ்த்த நினைத்தாலும், ``உங்கள் திட்டம் இங்கே பலிக்காது" என்பதை எதிரிகளுக்கு உணர்த்துகிற இடம்தான் இந்த வள்ளுவர் கோட்டம். இது வள்ளுவர் கோட்டம் மட்டுமல்ல. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக் கோட்டம் என்று சொல்லலாம்.
80 கோடி ரூபாய் செலவு
இதை கலைஞர் கட்டினார் என்ற ஒரே காரணத்துக்காக, சென்ற அ.தி.மு.க ஆட்சியில், 10 ஆண்டுகளுக்கு மேலாக, பொதுமக்கள் அனுமதி இல்லாமல், பராமரிக்காமல் வைத்திருந்தார்கள்.
2021-இல் கழக ஆட்சி அமைந்தபிறகு, நம்முடைய தலைவர் அவர்கள் 80 கோடி ரூபாய் செலவில், இந்த வள்ளுவர் கோட்டத்தைப் புதுப்பித்திருக்கிறார்கள். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான். 50 ஆண்டுகளுக்கு முன்பு, கலைஞர் அவர்கள் கட்டிய வள்ளுவர் கோட்டத்தை, நம் முதலமைச்சர் அவர்கள், நவீனப்படுத்தி திறந்து வைத்தார்கள்.
அதேபோல் 75 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட நம்முடைய திராவி முன்னேற்றக் கழகத்தையும் நம் தலைவர் அவர்கள், நவீனப்படுத்தி, இன்று இருக்கும் இளைஞர்களுக்கும், கழகத்துக்கும் தொடர்புபடுத்தி வைத்துள்ளார்கள். அடுத்த தலைமுறைக்கு கழகத்தை எடுத்துச் சென்றுள்ளார்கள்.
நேற்றைய தினம் இந்த அறிவுத்திருவிழாவைத் தொடங்கி வைத்து பேசிய, நம் கழகத் தலைவர் அவர்கள், ஒவ்வொரு ஆண்டும், இந்த விழாவை நடத்த வேண்டும் என்று இளைஞர் அணிக்குக் கட்டளையிட்டுள்ளார்கள். நிச்சயம், இனி வரும் ஒவ்வொரு ஆண்டும், இளைஞர் அணி சார்பில், `அறிவுத்திருவிழா’ நடத்தப்படும் என்பதை, இங்கே பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
என் வாழ்நாள் பெருமை
இளைஞர் அணியின் பணிகளைக் குறிப்பிட்டு, தலைவர் அவர்கள் நம்மை வாழ்த்தி, பாராட்டிப் பேசினார்கள். ஒரு மகனாக, ஒரு தந்தையுடன் வாழ்த்தை, பாராட்டைப் பெற முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். சட்டமன்ற உறுப்பினராக, விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் அமைச்சராக, துணை முதலமைச்சராகவும், எனது பணிகளுக்காக தலைவர் அவர்களின் பாராட்டைப் பெற்று இருக்கிறேன். அப்போதெல்லாம், நான் உள்ளபடியே மகிழ்ந்து இருக்கிறேன்.
ஆனால், இளைஞர் அணிச் செயலாளராக என்னுடைய பணிகளை, நம் முதலமைச்சர் அவர்கள் பாராட்டும் போது, அதை, என் வாழ்நாள் பெருமையாகவே கருதுகிறேன். ஏனென்றால், இளைஞர் அணி என்பது அவரின் குழந்தை. ஏனென்றால், நான் அடிக்கடி சொல்வது உண்டு, சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை முதலமைச்சர் என, எனக்கு எத்தனை பொறுப்புகள் வந்தாலும், என் மனதுக்கு எப்போதும் நெருக்கமான பொறுப்பு என்றால், அது கழக இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்புதான்.
கொள்கைக் கூட்டம்
நம் தலைவர் அவர்கள் ஒவ்வொரு முறையும் பாராட்டும் போது, நாம் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படுகிறது. தலைவர் என்னை மட்டும் பாராட்டவில்லை, இளைஞர் அணியின் பணிகளை ஒட்டுமொத்தமாக சேர்த்துத்தான் பாராட்டுகிறார்கள். அந்த உத்வேகத்துடன்தான், இந்த அறிவுத்திருவிழாவை நடத்துகிறோம். இந்த விழாவை மிகவும் முக்கியமான காலகட்டத்தில் நடத்துகிறோம். இன்றைக்கு கொள்கையற்ற ஒரு கூட்டமும், தமிழர் விரோத பாசிச கும்பலும், தமிழ்நாட்டைக் குறி வைத்திருக்கிறார்கள். எனவே, இந்த அறிவுத்திருவிழாவை, ஒரு தலையாய கடமையாகக் கருதியே நாம் செய்து இருக்கிறோம்.
இந்த 2 நாள் விழாவில், `இருவண்ணக் கொடிக்கு வயது – 75” கருத்தரங்கம், சென்னை முற்போக்கு புத்தகக் காட்சி, தி.மு.க வரலாற்று கண்காட்சி போன்ற நிகழ்வுகளை நடத்துகிறோம். அதிலும் குறிப்பாக, தி.மு.கழகத்தின் 75 ஆண்டு கால வரலாற்றை கூறும் `காலத்தின் நிறம் - கருப்பு சிவப்பு’ என்கிற நூலை, முத்தமிழறிஞர் பதிப்பகம் சார்பாக வரலாற்று ஆவணமாக வெளியிட்டு இருக்கிறோம். இந்தப் புத்தகத்தை முதற்பதிப்பாக 5,000 புத்தகங்களை அச்சிட்டோம். இந்த இரண்டு நாட்களில் மட்டும் கிட்டதட்ட 4,000 புத்தகங்கள் விற்றுவிட்டன. சென்னை வடகிழக்கு மாவட்ட அமைப்பாளர் சகோதரர் மதன் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1,000 புத்தகங்களுக்கு முன்பணமாக இந்த அரங்கத்தில் 6 லட்சம் ரூபாயை என்னிடம் வழங்கியுள்ளார்.
கழகத்தின் தீர்மானக்குழுச் செயலாளர் அண்ணன் அக்ரி கணேசன் அவர்கள் ஒரு வேண்டுகோள் கடிதத்தை என்னிடம் கொடுத்துள்ளார். வேண்டுகோள் மட்டுமல்ல, 10 லட்சம் ரூபாய்க்கு ஒரு காசோலையையும் கொடுத்துள்ளார். அவர் கொடுக்கும்போதே நான் முடிவு செய்துவிட்டேன். அடுத்தடுத்த வருடம் `அறிவுத்திருவிழா’ நடக்க வேண்டும். அவர் கொடுத்துள்ள கோரிக்கை. சென்னையில் மட்டும் நடத்தாதீர்கள், வெவ்வேறு மாவட்டங்களில் நடத்துங்கள் என்று சொல்லியிருக்கிறார். அப்படி நடத்துனீர்கள் என்றால், இந்த காசோலையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று மிகவும் தெளிவாக கடிதத்தில் எழுதி எனக்குக் கொடுத்துள்ளார். நிச்சயம் அடுத்த வருடம் வேறு மாவட்டத்தில் நடத்திவிட்டு, அந்த காசோலையைப் பயன்படுத்திக் கொள்கிறோம்.
அறிஞர்கள் - எழுத்தாளர்கள்
இந்த 2 நாள் கருத்தரங்கில், திராவிட இயக்க அறிஞர் பெருமக்கள், எழுத்தாளர்கள் தொடங்கி, இளைஞர் அணி கண்டெடுத்த இளம் பேச்சாளர்கள் வரை பலர் பல்வேறு கருத்துகளை எடுத்து வைத்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சி மட்டுமல்ல, இளைஞர் அணியின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும், கொள்கை வழியில்தான் இருக்கவேண்டும் என்றுதான் நானும், துணைச் செயலாளர்களும் இதைத் திட்டமிட்டு செய்கிறோம்.
இளைஞர் அணியின் சார்பில் சட்டமன்றத் தொகுதிதோறும் கலைஞர் நூற்றாண்டு நூலகம், முத்தமிழறிஞர் பதிப்பகம், முரசொலியில் பாசறைப் பக்கம், திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டம், 200-க்கும் மேற்பட்ட இளம் பேச்சாளர்களைத் தேர்வு செய்தது, கலைஞர் மாணவர் பத்திரிகையாளர் திட்டம் என பல்வேறு பணிகளை இளைஞர் அணி செய்து வருகிறது. இதுதான் கலைஞர் அவர்கள் நமக்கு சொல்லி கொடுத்தது.
இந்தக் கருத்தரங்கத்திலும், புத்தகக் கண்காட்சியிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கிகொண்டு இருக்கிறார்கள். எங்களுடைய முயற்சியை உற்சாகப்படுத்துகிற உங்கள் அனைவருக்கும் இளைஞர் அணியின் சார்பில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த புத்தகக் காட்சியை பற்றி திட்டமிடும்போது, திராவிட இயக்க நூல்களை மட்டும் கொண்டுவரலாம் என்று சிலர் கருத்து சொன்னார்கள். தலைவரிடம் சென்று கேட்டோம். தலைவர் அவர்கள் இல்லை, இல்லை அது தவறு. அனைத்துவிதமான அரசியல் கருத்துகளையும் நம்முடைய இளைஞர்களிடம் நீங்கள் கொண்டு சேர்க்க வேண்டும். அதனால், எல்லா முற்போக்கு பதிப்பகங்களையும் கொண்டு வரவேண்டும் என்று தலைவர் அவர்கள் உறுதியாகச் சொன்னார்கள். அதேபோல்தான் இந்தப் புத்தகக்காட்சியை ஏற்பாடு செய்துள்ளோம். இளைஞர்கள் திராவிட தத்துவத்தை மட்டும் தெரிந்துகொண்டால் மட்டும் போதாது, மற்ற முற்போக்குத் தத்துவங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
இன்னும் சொல்லப் போனால், நம்மை விமர்சனம் செய்யக் கூடிய கருத்துகளையும் - நூல்களையும் கூட நம்முடைய இளைஞர்கள் படித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இளைஞர் அணிச் செயலாளர் வருகிறார் என்பதால், கைத்தட்டி, கூடி கலைகிற கூட்டம், நம் கூட்டம் கிடையாது. இந்த இரண்டு நாள் நீங்கள் இங்கு அமர்ந்து இருக்கிறீர்கள் என்றால், யாரையோ பார்க்க வந்த கூட்டம் கிடையாது. நாம் ஒவ்வொருவரும் 44 பேர்களும் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கேட்க வந்த கொள்கைக் கூட்டம்.
நம்முடைய தலைவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் எல்லோருமே மாற்றுக் கருத்து கொண்ட நூல்களை ஆழமாக படித்தார்கள். அதனால்தான் நம் இன எதிரிகள் எந்தவிதமான விமர்சனங்களையும், கேள்விகளையும் கேட்டால் அவற்றுக்கு உடனே பதில் சொல்லக்கூடியவராக இருந்தார் நம் முததமிழறிஞர் கலைஞர். அந்தத் திறமையை அவர் வளர்த்துக் கொண்டார். திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டு, கலைஞர் அரசியலுக்கு வந்தது வெறும் ஆட்சியைப் பிடிப்பதற்கோ, பதவியில் இருப்பதற்கோ கிடையாது. தான் கொண்ட கொள்கையை அடைவதற்கு, இந்த இயக்கத்துக்குத் தலைவரானவர்தான் நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். இதைத்தான் நம் தலைவர்கள் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். புதிதாக சில பேர் கிளம்பி வரிசையாக வருகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு சாதாரண அரசியல் கட்சியாக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாதிரி, பத்தோடு பதினொன்றாக இருந்திருந்தால், அதை யாரும் அழிக்க வேண்டும் என்று முயற்சி செய்யமாட்டார்கள். நாம் கொள்கைக் கூட்டம் என்று தெரிந்ததால்தான் அவர்கள் நம்மை அழிக்க வருகிறார்கள். குறிப்பாக, பாசிச சக்திகள் நம் கொள்கைக் கூட்டத்தின் மீது கை வைத்துப் பார்க்க முயற்சிக்கிறார்கள்.
வியர்வை, ரத்தம் சிந்தி…
திராவிட முன்னேற்றக் கழகத்தை, சென்னை ராபின்சன் பூங்காவில் தொடங்கியபோது பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்ன ஒரு விஷயத்தை இங்க நினைவுகூற விரும்புகிறேன். ``டெல்லியின் ஆதிக்கம் ஒழிய வேண்டும், மக்களைப் பாழ்படுத்தும் பாசிசம் ஒழிய வேண்டும், பதுங்கிப் பாய நினைக்கும் பழைமை ஒழிய வேண்டும்" என்று அறிவித்துவிட்டுத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் துவக்கி வைத்தார்கள். அந்த முழக்கத்தை மனதில் ஏந்திதான், இன்றைக்கும் நாம் களத்தில் இறங்கிப் போராடிக்கொண்டு இருக்கிறோம். தி.மு.க. என்கிற விதையை கழக உடன்பிறப்புகள் தண்ணீர் ஊற்றி வளர்க்கவில்லை. வியர்வை, ரத்தம் சிந்தி, தங்கள் உயிரையே உரமாக்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்த்தார்கள். உடன்பிறப்புகளின் தியாகத்தால்தான் நம் இயக்கம், இன்றைக்கு ஒரு ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. அதனால்தான், பெரிய பெரிய புயலால் கூட நம் இயக்கத்தை வீழ்த்த முடியவில்லை.
நான் இங்கே இருக்கின்ற அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் எல்லோரும் நம் கழகத்தின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதற்காகத்தான் இந்த முற்ப்போக்கு புத்தகத் திருவிழாவை வருகின்ற 16-ஆம் தேதி வரை நடத்திட ஏற்பாடு செய்திருக்கிறோம். உங்கள் குடும்பத்தினர்கள், நண்பர்களிடம் இதைப்பற்றிப் பேசுங்கள். இந்த புத்தகத் திருவிழாவில் புத்தகத்தை வந்து வாங்க வேண்டும் என்றுகூட அவசியமில்லை, வந்து பார்த்தால் போதும். தமிழ்மொழி காப்பாற்றப்பட வேண்டும், தமிழ் இனம் காப்பாற்றப்பட வேண்டும்,
தமிழ்நாடு காப்பாற்றப்பட வேண்டும். இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை. இந்த கொள்கைக்கு யாரெல்லாம் எதிரியோ, அவர்கள் அத்தனை பேரும் தி.மு.க-வுக்கு எதிரி என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொள்கைதான் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அடித்தளம். அந்த அடித்தளம் பலமாக இருந்தால் தான், அதன் மேல் கட்டுகிற கோட்டை, வலுவாக இருக்கும். இப்போது அரசியலில் சில பேர் அடித்தளமே இல்லாமல் உள்ளே வர முயற்சிக்கிறார்கள். கண்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். அங்கே தாஜ்மஹால் மாதிரி செட் போடுவார்கள், ஈஃபிள் டவர் மாதிரி செட் போட்டிருப்பார்கள். கண்காட்சிக்குச் செல்கிறவர்கள் அந்த செட்டுக்கு முன் நின்று புகைப்படம் எடுப்பார்கள். அவையெல்லாம் வெறும் அட்டைதான், அதற்கு எந்த விதமான அஸ்திவாரமோ, கொள்கையோ கிடையாது. சும்மா தட்டுனா கீழே விழுந்துவிடும். அவர்களுக்கு எல்லாம் நான் சொல்லிக் கொள்வது, திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தியாகத்தாலும், போராட்டத்தாலும் உருவான இயக்கம். எமர்ஜென்சியைப் பார்த்த கழகம், நம் திராவிட முன்னேற்றக் கழகம். எமர்ஜென்சியைப் பார்த்த தலைவர் எங்கள் கழகத் தலைவர், முதலமைச்சர் அவர்கள்.
கட்சியின் பெயரை மாற்றினார்கள்
எமர்ஜென்சி காலத்தில் மாநிலக் கட்சிகளை எல்லாம் ஒன்றிய அரசு தடை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். உடனே, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ன செய்தார்கள் தெரியுமா? கட்சியின் பெயரை மாற்றிக்கொண்டார்கள். ஏதோ உத்தர பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் கிளைகள் இருக்கிறமாதிரி, கட்சியின் பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று கட்சியின் பெயரை மாற்றிவிட்டார்கள். இதுதான் தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் இருக்கிற வித்தியாசம்.
ஆனால், நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தெளிவாக சொன்னார்கள். வாழ்ந்தாலும் கழகத்தோடு வாழ்வோம், வீழ்ந்தாலும் கழகத்தோடு வீழ்வோம்’ என்று சொல்லி, எங்கள் இயக்கத்தின் பெயர் என்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்று என்ன வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்’’ என்று நின்றவர் நம் கலைஞர் அவர்கள்.
அதை மாற்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொன்னார். கலைஞர் காட்டிய அந்த உறுதியோடுதான் இன்றைக்கு நம் தலைவர் நம் இயக்கத்தை வழிநடத்திக்கொண்டு இருக்கிறார். நம்மை எல்லாம் கொள்கைதான் வழி நடத்துகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமியை பயம்தான் வழி நடத்துகிறது.
இப்போது நாம் தி.மு.க-வின் 75-வது ஆண்டைக் கொண்டாடுகிறோம். இந்த நிகழ்ச்சிக்கு அறிவுத் திருவிழா' என்று பெயர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தால் அறிவுத் திருவிழா’வெல்லாம் நடத்த முடியாது. வேண்டுமென்றால் அடிமைத் திருவிழா’ என்று ஒரு நிகழ்ச்சி நடத்தலாம். அந்த அளவுக்குக் கடைந்தெடுத்த அடிமையாக இருக்கிறார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான்.
அ.தி.மு.க-வின் ஓனர் பாசிச பா.ஜ.க-வால் நேரடியாக தமிழ்நாட்டுக்குள் கால் எடுத்து வைக்க முடியவில்லை. அதனால்தான் வேறு வேஷத்தைப் போட்டுக்கொண்டு வருகிறார்கள். அ.தி.மு.க என்கிற போர்வையை போர்த்திக்கொண்டு வருகிறார்கள். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைப் பார்க்கும்போது இரண்டு விஷயம்தான் எனக்கு ஞாபகம் வரும். ஒன்று கால், இன்னொன்று கார். ஒரு கட்சியின் தலைவர் இன்னொரு கட்சி தலைவரை பார்ப்பதற்கு யாராவது 4 கார் மாறி செல்வார்களா?
அதேபோல் கால், ஜெயலலிதா அம்மா இருந்தவரை அவரின் கால், அந்த அம்மா இறந்த பிறகு அந்த அம்மாவின் உடன்பிறவா சகோதரி சசிகலா அம்மாவின் கால், அந்த அம்மையார் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைக்கு சென்றவுடன், டி.டி.வி.தினகரன் கால், அதற்கு பிறகு டெல்லிக்குச் சென்று மோடி, அமித்ஷாவின் கால்கள். இப்போது ஜெ.தீபா அவர்களின் கால். இப்போது அந்த கால்கள் பற்றவில்லை என்று, புதிய கால்களைத் தேடிக்கொண்டு இருக்கிறார். அ.தி.மு.க தொண்டர்களைப் பார்க்கும்போது நமக்கெல்லாம் பாவமாகத்தான் இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி அவர்கள் அ.தி.மு.க தொண்டர்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு ஒரு பிரமாண்டமான கட்சி, நம் கூட்டணிக்கு வரப்போகிறது என்று சொன்னார்.
அ.தி.மு.க. பிரச்சார கூட்டத்தில், இன்னொரு கட்சியின் கொடியை அவர்களே பிடித்து ஆட்டிக்கொண்டு, பார்த்தீர்களா கொடி பறக்குது. பிள்ளையார் சுழி போட்டாச்சு’’ என்று குரளி வித்தை காட்டினார். தேர்வுக்கு படிக்காமல் வந்த மாணவன், விடைத்தாளில் பிள்ளையார் சுழி மட்டும் போட்டு உட்காந்து இருக்கிறமாதிரி ஆச்சு. இப்போது எடப்பாடி பழனிசாமியின் நிலைமை. படிக்காதவர்கள் ஒரேயொரு பிள்ளையார் சுழிதான் போடுவார்கள். ஒன்றும் எழுதாமல் எல்லாவற்றையும் மேலே இருப்பவன் பார்த்துக் கொள்வான் என்று விட்டுவிடுவார்கள். அந்த நிலைமையில்தான் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இருக்கிறார்கள்.
பாசிச பா.ஜ.க. திட்டம்
உங்களின் எழுச்சியையும், உணர்வையும் பார்க்கும்போது இதே எழுச்சியும், உணர்வும் அடுத்த நான்கு மாதம் நம்மிடம் இருக்க வேண்டும். நிச்சயம் அதை செய்வீர்கள் என்ற நம்பிக்கை தலைவருக்கும், எனக்கும் இருக்கிறது. நான் உங்களுடன் களத்தில் நிற்கிறேன். வருகின்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்ற நிலைமை நீங்கள் உருவாக்க வேண்டும்.
இதை எப்படியாவது குறுக்கு வழியில் தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான், பாசிச பா.ஜ.க. திட்டம் போட்டு கொண்டு வந்ததுதான் எஸ்.ஐ.ஆர் (SIR) என்று சொல்கிற ஸ்பெஷல் இன்டென்ஷிவ் ரிவிஷன் (Special Intensive Revision). பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை எஸ்.ஐ.ஆர் (SIR) மூலம் நீக்கினார்கள்.
அதே மாதிரி, இங்கேயும் சிறுபான்மை மக்களுடைய வாக்குகளை, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுடைய வாக்குகளை குறி வைத்து எப்படியாவது நீக்கிவிட வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். SIR முடிகிறவரைக்கும் அந்த வேலையில நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்போதுதான் பா.ஜ.க-வின் சதித் திட்டத்தை நம்மால் முறியடிக்க முடியும்.
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாநிலமாகச் சென்று தி.மு.க மேல் வன்மத்தை பரப்பிக்கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு மாநிலத்துக்கு இடையேயும் பகையை மூட்டிக்கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் பீகார் மக்களை, நாம் துன்புறுத்துகிறோம் என்று பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள ஒரேயொரு பீகார் காரர் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்றால், அது இங்குள்ள ஆளுநர் ரவி அவர்கள் மட்டும்தான். அவரையும் நாம் துன்புறுத்தவில்லை. அவர் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களை துன்புறுத்துவதால், அவரை தமிழ்நாட்டு மக்கள் துன்புறுத்துகிறார்கள். நம் தலைவர் அவர்கள் தயவுசெய்து இங்கு இருக்கின்ற ஆளுநரை மாற்றாதீர்கள் என்ற வேண்டுகோளை வைக்கும் அளவு பெரிய மனதுக்காரர்தான் நம் தலைவர் அவர்கள்.
எடுத்துக்காட்டான முதலமைச்சர்
பா.ஜ.க.வின் பிரித்தாளும் சூழ்ச்சியை நாம் முறியடிக்க வேண்டும். விரைவில், பாசிச பா.ஜ.க.வுக்கு எதிராக ஒட்டுமொத்த நாட்டு இந்திய மக்களும் திரளப் போகிறார்கள். அதற்கான விழிப்பு உணர்வை ஒட்டுமொத்த நாட்டுக்கும் கொடுக்கும் தத்துவம் நம்முடைய திராவிட மாடல் தத்துவம். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் நம் அரசு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. அதனால்தான், `திராவிடம்’ என்கிற பெயரைக் கேட்டாலே பாசிச சக்திகள் இன்று பதறுகிறார்கள்.
எல்லா மாநிலத்திலும் அரசியல் களம் பா.ஜ.க.வுக்கு எதிராக மாறுகிறது. நாட்டில் உள்ள எல்லா முதலமைச்சருக்கும் ஒரு எடுத்துக்காட்டான முதலமைச்சராக நம் தலைவர் அவர்கள் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்.
சமீபத்தில் நீங்கள் தொலைகாட்சியில் பார்த்திருப்பீர்கள். பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜேஸ்வி யாதவ் அவர்களிடம் அகில இந்திய தொலைகாட்சி நிறுவனம் பேட்டி எடுக்கிறார்கள். அவர்கள் இந்தியாவின் சிறந்த முதலமைச்சராக நீங்கள் யாரை நினைக்கிறீர்கள் என்று கேட்கும்போது, அவர் ஒரு நிமிடம் கூட யோசிக்கமால் பதில் சொல்கிறார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்று நம் தலைவரின் பெயரை சொல்கிறார்.
11.19 சதவிகித பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதலிடத்தில் நம் மாநிலம் சிறந்து விளங்குகிறது என்றால், அதற்கு காரணம் நம் முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்துள்ள திட்டங்கள்தான். இந்த நான்கரை வருட திட்டங்களை மக்களிடம் தொடர்ந்து பேசுங்கள். திண்ணைப் பிரச்சாரங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்துங்கள்.
இன்று ஒன்றிய அரசு ஒரு திட்டத்தை அறிவிக்கிறது என்றால், தமிழ்நாடு முதலமைச்சர் என்ன முடிவெடுகிறார், தமிழ்நாட்டு மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்று மற்ற மாநில முதலமைச்சர்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். தொடர்ந்து மற்ற மாநில முதலமைச்சர்கள் இங்கு வந்து நம் திட்டங்களை பாராட்டிவிட்டு செல்கிறார்கள்.
முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை நம் முதலமைச்சர் அவர்கள் விரிவுப்படுத்தும்போது, பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் சிங் அவர்கள் பாராட்டிவிட்டுச் சென்றார். கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சிக்கு வந்த தெலங்கானா முதலமைச்சர் பாராட்டிவிட்டுச் சென்றார். இப்படி இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்களும் திரும்பிப் பார்க்கக்கூடிய தலைவராக நம் தலைவர் அவர்கள் உருவாகி இருக்கிறார்.
அதற்கான தொடக்கமாக, இந்த அறிவுத்திருவிழா நிச்சயம் இருக்கும். இன்னும் ஒரு வார காலம் இங்கே முற்போக்கு புத்தக காட்சி நடக்க இருக்கிறது., எல்லோரும் அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தி திணிப்புக்கு எதிராக நாம் பேசினால், வட மாநிலங்களில் இருந்து நமக்கு ஆதரவு வருகிறது. புதியக் கல்விக்கொள்கை வேண்டாம் என்று நாம் முதலில் சொன்னோம். இப்போது மற்ற மாநில முதலமைச்சர்களும் எங்களுக்கும் வேண்டாம் என்று குரல் கொடுக்கிறார்கள். மாநில உரிமைக்காக நாம் பேசினால், பிற மாநில முதலமைச்சர்களும் நம்முடன் சேர்ந்து குரல் கொடுக்கிறார்கள். நிதி உரிமை வேண்டும் என்று நாம்தான் முதன்முதலில் குரல் கொடுத்தோம். இன்றைக்கு மற்ற மாநில முதலமைச்சர்கள் நம் முதலமைச்சரைப் பின்பற்ற ஆரம்பித்துள்ளார்கள்.
ஆகவே, இந்த சூழலில், தமிழ்நாட்டில் அடிமைகளை கையில் வைத்துக் கொண்டு பாசிச பா.ஜ.க. போடும் திட்டங்களை எல்லாம் கழக உடன்பிறப்புகள், இளைஞர் அணி தம்பிமார்கள் நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து முறியடித்து களத்தில் வேலை பார்த்து, நம் கழகத்தை வெற்றிபெற வைக்க வேண்டும்.
அதற்கான தொடக்கமாக, இந்த அறிவுத்திருவிழா நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இன்னும் ஒரு வார காலம் இங்கே முற்போக்கு புத்தக காட்சி நடக்க இருக்கிறது, எல்லோரும் அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்தியாவின் ஜனநாயகத்தையும் – தமிழ்நாட்டையும் காக்க, 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றியை அடைந்தே ஆக வேண்டும்.
வருகிற 2026 தேர்தலில் கழகத்தை ஏழாவது முறையாக ஆட்சியில் அமர்த்த வேண்டும். நம் கழகத் தலைவர் அவர்களை, தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராக்க வேண்டும். அதற்கு நிச்சயமாக இளைஞர் அணியின் பங்கை நாம் கொடுத்தாக வேண்டும். அடுத்த 5 மாதங்களுக்கு நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிப்பட்ட நிகழ்ச்சியை நடத்துவது சாதாரண விஷயம் கிடையாது. மிகுந்த சிரமம். சென்ற 10 நாட்களுக்கு முன்பு நடைபெற வேண்டிய நிகழ்ச்சி. சென்னையில் பெய்த கனமழையால் தள்ளி வைத்தோம்.
நான் நான்கு முறை இங்கு வந்து என்னென்ன வேலைகள் நடந்துகொண்டு இருக்கின்றன என்று வந்து பார்வையிட்டேன். என்னைவிட அதிகமாக இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று உழைத்த நம் மாநில துணைச் செயலாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக சகோதரர் ஜோயல் அவர்களுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள், நன்றிகள்.
இந்த அறிவு திருவிழாவை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்த, இளைஞர் அணி துணைச் செயலாளர்கள், நூல் உருவாக்கக் குழுவினர் - கழக நிர்வாகிகள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நேற்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நம் கூட்டணிக் கட்சி தலைவர்கள், பதிப்பகத்தார் – எழுத்தாளர்கள் – கலைக்குழுவினர், இளம் பேச்சாளர்கள் – பத்திரிகையாளர்கள், இளைஞர் அணி உள்ளிட்ட நம் கழகத்தை சேர்ந்த அனைத்து அணிகளைச் சேர்ந்த அருமை சகோதரர்கள், சகோதரிகள் அத்னைப்பேருக்கும், ஆய்வாளர்களுக்கும், அன்பகம் செந்தில் அவர்களுக்கும், அன்பகத்தில் இருந்து இந்தப்பணிகளை எல்லாம் ஒருங்கிணைக்கும் பணியாளர்கள் அனைவருக்கும், மீண்டும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றியும் தெரிவித்து இந்த அறிவுத் திருவிழா நிச்சயம் வெல்லும், அதை 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றி நிச்சயம் நமக்கு சொல்லும் என்று சொல்லி இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம். இவ்வாறு கழக இளைஞர் அணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் எழுச்சிமிக்க உரையாற்றினார்.
Also Read
-
“டெல்லி பிக்-பாஸூக்கு பழனிசாமி ஆமாம் சாமி போட்டு வருகிறார்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“அடிமை ஆட்சி நடத்திய பழனிசாமி - பாஜகவின் சித்து விளையாட்டு வெற்றி பெறாது!” : ஆர்.எஸ்.பாரதி பதிலடி!
-
“அனைத்து மீனவர்களையும், படகுகளையும் மீட்க வேண்டும்!” : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு ‘இரு தேசிய விருதுகள்!’ : அமைச்சர் சிவசங்கர் பெற்றுக்கொண்டார்!
-
“கொள்கை உறவே வெற்றிக்கு அடிப்படை!” : கருப்பு - சிவப்பு - நீலத்தை அடிக்கோடிட்ட முரசொலி தலையங்கம்!