Politics
“இந்திய வரலாற்றில் மிகப்பெரிய துரோகம்!” : பீகாரில் வாக்குரிமை பறிக்கப்பட்டதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!
ஒன்றியத்தில் ஆட்சி வகிக்கும் பா.ஜ.க.வினர், இனி வரும் காலங்களிலும் தாம்தான் ஆட்சி அமைப்போம் என சற்றும் தயங்காமல் பிரச்சாரம் செய்வதற்கு, அவர்களிடம் இருக்கும் மக்கள் செல்வாக்கு காரணம் அல்ல! வாக்கு திருட்டுதான் காரணம் என உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு நாளும் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
இதுவரை மறைமுகமாக நடந்துவந்த இந்த பா.ஜ.க.வின் வாக்கு திருட்டு நடவடிக்கையை, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அண்மையில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் வெளிப்படையாக உரிய உதாரணங்களுடன் எடுத்துரைத்தார்.
எனினும், அதனை பொருட்படுத்தாது, வாக்காளர் சிறப்பு திருத்தம் என்கிற பெயரில் பீகாரில் இலட்சக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமையை நீக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
இதனைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.
“பீகாரில் தேர்தல் ஆணையம் 'சிறப்பு தீவிர திருத்தம்' (SIR) என்ற பெயரில் பல லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியிருப்பது, வெறும் நிர்வாகப் பிழை அல்ல; அது திட்டமிட்ட அரசியல் சதி, அரசியலமைப்பு மீறல், மேலும் சொல்லப்போனால் நேரடியான ஜனநாயக படுகொலை ஆகும். மக்கள் வாக்குரிமையை பறிப்பது என்பது, மக்களின் குடியுரிமையை பறித்து, சுதந்திர இந்தியாவின் ஜனநாயக மாண்புகளை சிதைக்கும் செயலாகும்.
இந்த அநியாயம் குறித்து உச்சநீதிமன்றமே தேர்தல் ஆணையத்திடம் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. 'எந்த சட்ட அடிப்படையில் இத்தனை லட்சக்கணக்கான மக்களின் பெயர்கள் நீக்கப்பட்டன? அரசியலமைப்பு அளித்த வாக்குரிமையை பறிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு யார் கொடுத்தது?
மக்களின் உரிமையை பறிக்கும் இந்த நடவடிக்கைக்கு தெளிவான விளக்கம் தர முடியுமா?' என்று நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்தக் கேள்விகள், ஆணையத்தின் நடவடிக்கை வெளிப்படையாக சட்டவிரோதமானதும் ஜனநாயக விரோதமானதும் என்பதற்கு சான்றாகும்.
ஜனநாயகத்தில் வாக்குரிமை என்பது வெறும் அரசியல் சலுகை அல்ல; அது ஒவ்வொரு குடிமகனின் அடையாளம், உரிமை, கண்ணியம். அந்த உரிமையை பறிப்பது, சுதந்திர இந்தியாவின் ஆன்மாவையே பறிப்பதற்கு சமம். தேர்தல் ஆணையம் தனது கடமை ஜனநாயகத்தைப் பாதுகாப்பது என்பதை மறந்து, அதிகாரத்தின் அச்சுறுத்தலுக்கோ அல்லது அரசியல் வலிமைகளின் உத்தரவுக்கோ பணிந்திருந்தால், அது இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய துரோகமாகப் பதிவாகும்.
மக்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், இந்த சதியின் பின்னணி குறித்து ஏற்கனவே நாடு முழுவதும் எச்சரிக்கை எழுப்பியுள்ளார். அவர் 'வாக்கு அதிகார யாத்திரை' மூலம் பீகார் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு, மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார்.
அந்த யாத்திரையின் போது எத்தனை ஏழைகள், பின்தங்கியோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் வாக்குரிமையை இழந்திருக்கிறார்கள் என்பதையும் வெளிக்கொணர்ந்தார். உச்ச நீதிமன்றமே அதையே உறுதிப்படுத்தியிருப்பது, ராகுல் காந்தி அவர்களின் குரல் உண்மையின் குரல் என்பதை வெளிப்படுத்துகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாங்கள் வலியுறுத்துவது — பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட மக்களின் பெயர்கள் உடனடியாக மீண்டும் சேர்க்கப்பட வேண்டும். இந்த செயலில் ஈடுபட்ட அதிகாரிகளும், பின்னணியில் இருந்த அரசியல் சக்திகளும் வெளிப்படுத்தப்பட்டு, அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மக்களின் வாக்குரிமை களவாடப்படும் போது, அது பீகார் மக்களின் பிரச்சினை அல்ல. இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் பிரச்சினை. இன்று பீகாரில் நடந்தது நாளை வேறு எந்த மாநிலத்திலும் நிகழக்கூடும் என்பதால், அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டியது அவசியமாகிறது.
மக்களின் உரிமை, ஜனநாயகம், அரசியலமைப்பின் உரிமை — இந்த மூன்றையும் காப்பது எங்கள் கடமையும், பொறுப்பும், உறுதியும் ஆகும். இந்தப் போராட்டத்தில் எவராலும் எங்களைத் தடுக்க முடியாது. மக்களின் வாக்குரிமையை மீட்கும் வரை, ஜனநாயகத்திற்காகவும் நீதிக்காகவும் நாங்கள் உறுதியுடன் குரல் கொடுத்து நிற்போம்.”
Also Read
-
கல்வி உரிமைச் சட்டம் (RTE)) மாணவர் சேர்க்கை தொடக்கம் : யார் யாருக்கு முன்னுரிமை - முழு தகவல் இங்கே!
-
காந்தியின் சிலையை தொடுவதற்கே அருகதை அற்றக் கூட்டம் : காவி ஆடை - வைகோ ஆவேசம்!
-
“மழைக்காலங்களில் கூடுதல் கவனத்துடன் நெல் கொள்முதல் செய்திட வேண்டும்!” : முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
“RSS-உடன் தொடர்பு? விஜயை சுற்றி அனைவரும் பாஜக பயிற்சி பட்டறையில் பயின்றவர்கள்” -திருமாவளவன் MP விமர்சனம்!
-
”திராவிட மாடல் அரசு மீது காழ்ப்புணர்வுடன் குற்றச்சாட்டு வைக்கும் ஆர்.என்.ரவி” : வைகோ கண்டனம்!