Politics
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!
நாடாளுமன்ற மக்களவையில் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை எழுப்பிடும் விதி எண் 377 இன் கீழ், திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி, ஒரு முக்கியமான செய்தியை ஆகஸ்டு 18 ஆம் நாள் எழுப்பினார்.
“ஒன்றிய அரசின் நிதியுதவியுடனான திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாட்டின் மீது சுமத்தப்படும் அதிக நிதிச்சுமை குறித்து ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்க இந்த விவகாரத்தை எழுப்புகிறேன்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY), பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) உள்ளிட்ட ஒன்றிய அரசின் குறைந்தபட்சம் 6 திட்டங்களுக்கு ஒன்றிய அரசை விட தமிழ்நாடு மாநில அரசு கணிசமான அதிக நிதிப் பங்களிப்பை வழங்குகிறது. இதை அதிகாரப்பூர்வ தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
PMAY இன் கீழ், ஒரு வீட்டிற்கு ரூ.2,83,900 ஒதுக்கப்படுகிறது. இந்த செலவில் 61% நிதியை தமிழ்நாடு அரசே ஏற்கிறது. பிரதமர் பெயரிலான இத்திட்டத்துக்கு ஒன்றிய அரசு 39% செலவை மட்டுமே பங்களிக்கிறது.
இன்னும் கவலையளிக்கும் வகையில், PMMSY இன் கீழ், ஒன்றிய அரசின் பங்கு 27% தான். ஆனால் இத்திட்டத்தின் 73% செலவுகளை தமிழ்நாடு மாநில அரசு ஏற்கிறது. இதுபோன்ற திட்டங்களில் ஒன்றிய-மாநில அரசுகளின் பங்களிப்பு என்பது 60;40 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என்ற அடிப்படை கொள்கையையே இது முற்றிலுமாக மாற்றிவிட்டது.
மேலும் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு ஆயிரம் ரூபாயும், ஒன்றிய அரசு 200 ரூபாயும் கொடுக்கின்றன. இத்திட்டத்தில் தமிழ்நாடு மாநில அரசின் பங்கு 83% ஆக உள்ளது.
ஜல் ஜீவன் திட்டத்துக்கு ஒன்றிய - மாநில அரசுகளின் நிதிப் பங்கு 50:50 என்ற விகிதத்தில்தான் இருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு மாநில அரசு ஜல் ஜீவன் திட்டத்துக்கு 55% பங்களிக்கிறது. பிரதமரின் பெயரைக் கொண்ட இந்தத் திட்டங்கள் ஒன்றிய அரசின் திட்டங்களாக விளம்பரப்படுத்தப்பட்டாலும், அவற்றின் பாதிக்கும் மேற்பட்ட நிதியை தமிழ்நாடு அரசே அளிக்கிறது.
இது நிதிக் கூட்டாட்சிக்கு எதிரானது. கொள்கை ரீதியாக ஒப்புக் கொண்ட நிதி ஒதுக்கீட்டு நெறிகளை ஒன்றிய அரசு மீறுகிற வகையில் இருக்கிறது. எனவே ஒன்றிய அரசு நிதியளிக்கும் திட்டங்களுக்கான நிதி ஏற்பாடுகளை உடனடியாக மறுபரிசீலனை செய்யுமாறும், பரிந்துரைக்கப்பட்ட செலவுப் பகிர்வு அறிவுரைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்து, ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பை அதிகரிக்குமாறும் ஒன்றிய அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன்” என்று தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... Fastag இல்லையென்றால் இருமடங்கு கட்டணம்.. வருகிறது புதிய நடைமுறை!
-
”திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
”தேசத்தை காக்க தி.க, தி.மு.க தான் மருந்து” : சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாட்டில் ஆ.ராசா.எம்.பி பேச்சு!
-
இனி பழைய பொருட்களை அகற்ற கவலை வேண்டாம் : சென்னை மாநகராட்சியின் அசத்தலான திட்டம்!
-
துன்பம் வரும்போது நம்மைக் காப்பவர் யார்? கைவிடுவோர் யார்? : மக்களுக்கு உணர்த்திய கரூர் துயரம்!