Politics

மத கலவரத்தை தூண்டும் விதமாக பேச்சு... முன் ஜாமின் வழக்கில் மதுரை ஆதீனத்துக்கு விதித்த நிபந்தனைகள் என்ன ?

சென்னை காட்டாங்குளத்தூரில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, மதுரை ஆதீனம், ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் மதுரையில் இருந்து தனது காரில் சென்னை நோக்கி வந்து இருந்தார்.

வரும் வழியில், உளுந்தூர்பேட்டை அருகே ஆதீனத்தின் கார் விபத்துக்குள்ளானது. இதில், எந்த காயமுமின்றி அவர் தப்பிய நிலையில்,சைவ சித்தாந்த மாநாட்டில் கார் விபத்து மூலம் தன்னை கொல்ல சதி நடந்ததாக பேசிய மதுரை ஆதீனம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு தன்னை கொலை செய்ய முயன்றதாகவும் கூறியிருந்தார். எனினும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை, விபத்து தொடர்பான சிசிடிவி ஆதாரத்தையும் வெளியிட்டதில் ஆதினம் பொய் சொன்னது அம்பலமானது.

பின்னர் மத மோதலை தூண்டும் விதமாக பேசிய வழக்கில் மதுரை ஆதீனத்தின் மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே முன் ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் அவருக்கு முன்ஜாமின் வழக்கி பல்வேறு நிபந்தனைகளை நீதிபதிகள் விதித்துள்ளனர்.

நிபந்தனை விவரம் :

*மதுரை ஆதினம் 60 வயதுக்கு மேற்பட்டவர் என்பதால் அவர் வசிக்கும் இடத்திற்கு சென்று காவல்துறை விசாரணை நடத்தலாம்.

*காவல்துறையின் விசாரணைக்கு ஆதினம் ஒத்துழைக்க வேண்டும்..

* வழக்கு விசாரணை முடியும் வரை சாட்சிகளை கலைக்கக் கூடாது; தலைமறைவாகக் கூடாது..

* தலைமறைவானால் அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யலாம்.

* 10 ஆயிரம் ரூபாய்க்கான இரு நபர் ஜாமினை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

Also Read: கர்நாடகா: பாலியல் வன்கொடுமை செய்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கொலை... கோவில் நிர்வாகத்தின் மீது புகார் !