Politics
தூத்துக்குடியில் ரூ.2 கோடி மதிப்பிலான நில மோசடி! : பா.ஜ.க முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா மீது புகார்!
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் கிங்ஸ்டன் சென்னை மற்றும் ஜப்பான் டோக்கியோவில் சாப்ட்வேர் நிறுவனம் சொந்தமாக நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான 30 சென்ட் இடம் தூத்துக்குடி அருகே உள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்பிக் நகர் பகுதியில் உள்ளது. சுமார் ரூ. 1.5 கோடி முதல் ரூ. 2.5 கோடி வரை இந்த சொத்து விலை போகுமென கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து தனது தொழிலுக்கு பணம் தேவைப்பட்டதால் தனக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். ஆகவே, தனக்கு பழக்கமான தூத்துக்குடி மாவட்டம் உமரி காடு பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க மாவட்ட பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன் மற்றும் அவரது நண்பர் மாதவன் ஆகியோரை அணுகி உள்ளார்.
உமரி சத்தியசீலன் மற்றும் மாதவன் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் பெற்றுக் கொண்டு, தாமஸ் கிங்ஸ்டன் தனது இடத்தை விற்பனை செய்து தருவதற்காக சத்தியசீலன் மற்றும் மாதவன் ஆகியோருக்கு பவர் எழுதிக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், பவர் எழுதிக் கொடுத்து 14 மாதங்களாக இடத்தை விற்பனை செய்யாமல் உமரி சத்தியசீலன் மற்றும் மாதவன் ஆகியோர் இழுத்தடித்து வந்துள்ளனர். இதையடுத்து தாமஸ் கிங்ஸ்டன் தனது இடத்திற்கான ஆவணங்களை திருப்பித் தருமாறு உமரி சத்திய சீலனிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால், உமரி சத்தியசீலன் மற்றும் மாதவன் ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்தும், வாழ்நாள் உறுதிச் சான்றை போலியாக தயார் செய்தும் தாமஸ் கிங்ஸ்டன் வங்கி கணக்கில் ரூ. 80 லட்சம் வரவு வைத்ததாக வங்கி ஆவணங்களை போலியாக தயார் செய்து பா.ஜ.க முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா பெயருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
இந்த மோசடி தாமஸ் கிங்ஸ்டனுக்கு தெரியவந்ததை தொடர்ந்து உமரி சத்தியசீலன், மாதவன் மற்றும் சசிகலா புஷ்பா ஆகியோரை அணுகி தனது இடத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்து விட்டீர்கள். எனவே, அதற்கு உரிய பணத்தை தர கோரியுள்ளார். ஆனால் அதற்கு மோசடியில் ஈடுபட்ட சத்தியசீலன், சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் நாங்கள் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. பத்திரப்பதிவை ரத்து செய்ய உன்னால் முடியாது என கூறியதுடன், உனக்கு பணத்தை தர முடியாது என்றும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட தாமஸ் கிங்ஸ்டன் பத்திரப்பதிவு சார்பதிவாளர், தூத்துக்குடி மாவட்ட நில அபகரிப்பு பிரிவு காவல்துறை உள்ளிட்ட அமைப்புகளுக்கு மோசடி பத்திரப்பதிவை ரத்து செய்து, பா.ஜ.க பிரமுகர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?