Politics

நிதிக்கு தொடர்பே இல்லாத நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தமிழ்நாட்டுக்கு என்ன பயன் ? -முரசொலி விமர்சனம் !

முரசொலி தலையங்கம் (07-04-2025)

இந்தியாவில் முதலிடமான தமிழ்நாடு

இந்தியாவிலேயே தமிழ்நாட்டை உச்சத்துக்கு கொண்டு போய் நிறுத்தி விட்டார் திராவிட நாயகன் - மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். இது மகத் தான சாதனையாகும். யாராலும் செய்ய முடியாத சாதனை ஆகும். இந்தச் சாதனை சாதாரணமானது அல்ல.

இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு புதிய உச்சத்தை அடைந்துவிட்டதாகச் சொல்வது ஒன்றிய அரசின் திட்ட அமலாக்கத்துறை ஆகும். 9.69 விழுக்காடு வளர்ச்சியுடன் இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது தமிழ்நாடு.

இந்தியாவின் பிறமாநிலங்களை விட இது அதிகம் என்பது ஒன்று. தமிழ்நாட்டின் வளர்ச்சி எவ்வளவு இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டதை விட இது மிக அதிகம் என்பது இரண்டாவது.

பத்தாண்டு காலத்தில் இத்தகைய உச்சத்தை தமிழ்நாடு என்றும் எட்டியதே இல்லை. 8.57 விழுக்காடாக இருந்த தமிழ்நாட்டை தொடர்ச்சியாக 7 என்ற எண்ணிக்கைக்குப் பின் தங்க வைத்தவர் பழனிசாமி. கோவிட் தொற்றை அவர் காரணமாகச் சொன்னாலும், அவரது கையாலாகாத்தனம் தான் இதற்கு முழுமுதற் காரணம்.

அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சியை அமைத்த மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 8.13 விழுக்காடு - 8.23 விழுக்காடு என படிப்படியாக உயர்த்தி - இன்றைய தினம் 9.69 விழுக்காடாக உயர்த்தி தமிழ்நாட்டை இந்தியாவில் அனைத்து மாநிலங்களையும் விஞ்சிய வளர்ச்சியாக உயர்த்திக் காட்டி விட்டார்கள்.

தமிழ்நாடு அரசு முதன்முதலாக மார்ச் 2025 இரண்டாம் வாரத்தில் வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் முன்கணிப்பு செய்யப்பட்ட வளர்ச்சி வீதத்துடன், ஒன்றிய அமைச்சகம் வெளியிட்ட உண்மை வளர்ச்சி வீதம் ஒத்துப்போவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்தப் பொருளாதார ஆய்வு 8 விழுக்காட்டுக்கும் மேல் வளர்ச்சி இருக்கும் எனக் கணித்திருந்தது. சென்னைப் பொருளியியல் நிறுவனத்தின் (Madras School of Economics) மூத்த பொருளாதார வல்லுநர்கள் முனைவர் சி.ரங்கராஜன் மற்றும் முனைவர் கே.ஆர்.சண்முகம் ஆகியோர் ஜூலை 2024 இல் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி வீதம் 9.3 விழுக்காடு ஆக இருக்கும் எனக் கணித்திருந்தனர். இறுதியில், மேற்குறிப்பிட்ட இரண்டு மதிப்பீடுகளையும் தாண்டி அதிக வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளது.

ஒன்றியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் இணையதளத்தில் குஜராத், பீஹார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 2024-25 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி வீதம் குறித்த தரவுகளைப் பதிவேற்றம் செய்யவே இல்லை. கொரோனாவில் எத்தனை பேருக்கு ஊசி போட்டோம், எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள் என்ற தகவல்களையே பதிவேற்றம் செய்யாத மாநிலம் உத்தரப்பிரதேசம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

ஒன்றியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் இணையத் தளத்தில் வெளியாகி உள்ள தரவுகள் என்ன சொல்கிறது என்றால்?

«2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாடு 9.69 விழுக்காடு உண்மை வளர்ச்சி வீதத்துடன் (Real Economic Growth Rate) இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

« நிலையான விலை மதிப்பின்படி 2023-24ஆம் ஆண்டில் ரூ.15,71,368 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP), 2024- 25 ஆம் ஆண்டில் ரூ.17,23,698 கோடியாக உயர்ந்துள்ளது.

« பணவீக்கத்தை கருத்தில் கொள்ளாமல் இதனைக் கணித்தால் 14.02 விழுக்காடு ஆகும். இதற்கு பெயரளவு வளர்ச்சி வீதம் (Nominal Growth Rate) என்று பெயர்.

இந்திய நாட்டின் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) தமிழ்நாடு 9.21 விழுக்காடு அளவுக்கு பங்களித்துள்ளது. அதாவது இந்திய நாட்டின் வளர்ச்சியில் நூறில் பத்து விழுக்காடு பங்கை தமிழ்நாடு செலுத்தி வருகிறது. இதுதான் தமிழ்நாட்டு வளர்ச்சியின் அடையாளங்கள் ஆகும். எத்தகைய ‘கஷ்ட காலத்தில் இந்த சாதனைகள் எட்டப்பட்டுள்ளது என்பது தான் மிக முக்கியம் ஆகும். தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாத வயிற்றெரிச்சல் பேர்வழிகளை ஒதுக்கித் தள்ளுவோம். ஆனால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒவ்வொரு இடத்திலும் தடுக்கக் கூடியதாக தடைச்சுவர் எழுப்பக் கூடியதாக இன்றைய ஒன்றிய பா.ஜ.க. அரசு இருக்கிறது.

செயற்கையான நிதி நெருக்கடியை பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டிற்கு கொடுத்து வருகிறது. அதிகமான வரி தரும் தமிழ்நாட்டுக்கு 'பொரி' அளவுக்கு கூட நிதி தருவது இல்லை."நாட்டின் சமச்சீரான வளர்ச்சியைஎதிர்நோக்கும் வகையில் வளர்ச்சி குன்றி- யபகுதிகளுக்கு தேவையான நிதியை வழங்குவதுஅவசியம் என்றாலும் அதே வேளையில், பல்வேறுவகையிலும் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களை அளிப்பதன் மூலமாகவே அவற்றின் வளர்ச்சியைத் தக்கவைப்பதுடன் அந்த மாநிலங்களின் வளர்ச்சிப்பாதைக்கும் வழிவகுக்க முடியும், என்பதையும் நிதிக்குழு கவனத்தில்கொள்ள வேண்டும்.

சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கான நிதியைக் குறைத்து வளர்ச்சியை எதிர்நோக்கும் பகுதிகளுக்கு நிதி ஆதாரங்களை மடைமாற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவது மட்டுமின்றி, வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்கு இறுதியாக கிடைக்கும் வரிப்பகிர்வும் குறைந்துவிடும் என்பதே உண்மை" என்று நிதிக்குழுவிடம் மாண்புமிகு முதலமைச்சர் சொன்னார்கள். அந்த அளவுக்கு நம்மை நிதி நெருக்கடியில் தள்ளிவிட்டுள்ளது ஒன்றிய அரசு. இதெல்லாம் பா.ஜ.க.வுக்கு புரியாதவை ஆகும். நிர்மலா சீதாராமன் என்று ஒருவர் நிதி அமைச்சராக இருக்கிறார். அவருக்கும் நிதிக்கும் தொடர்பு இல்லை. 'தமிழ்நாடு' என்ற பெயரே இல்லாமல் ஒன்றிய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். 'அ.தி.மு.க.வை கைப்பற்றும் முயற்சிகளில்' அவர் இறங்கி இருக்கிறார். அவரிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு என்ன நன்மை கிடைக்கும்? இவரைப்போன்ற ஜென்மங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தான் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

9.69 விழுக்காடு வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, இதன் மூலமாக அமைதியான மாநிலம் தமிழ்நாடு என்பது உறுதியாகி இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீராக இருக்கும் இடத்தில் தான் வளர்ச்சியானது இருக்கும். அந்தவகையில் பார்த்தால் அமைதியான மாநிலம் தமிழ்நாடு என்பதும் உறுதியாகி இருக்கிறது.அமைதியாய் தமிழ்நாட்டை உச்சத்துக்கு கொண்டு போயிருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

Also Read: “தமிழ்நாட்டை தவிர்ப்பவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!