Politics

“பயந்து, ஒன்றிய அரசிடம் மண்டியிடுவது கோழையா... அல்லது...” - அன்புமணிக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!

சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக வில்லிவாக்கம் மேற்கு பகுதி அயனாவரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், பச்சைக்கல் வீரசாமி தெரு மற்றும் அயனாவரம் சோலை தெருவில் அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் உணவுகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அ.வெற்றியழகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மக்களுக்கு அன்னதான உணவுகளை வழங்கினார்கள்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது,

=> சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என முதலமைச்சர் கூறுவது கோழைத்தனம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியது குறித்தான கேள்விக்கு,

“வழக்கிற்கு பயந்து, ஒன்றிய அரசுக்கு மண்டியிடுவது கோழையா, அல்லது மாநில உரிமைக்காக நெஞ்சை நிமிர்த்து சவால் விடுவது கோழையா? மாநில உரிமைக்காக ’உறவுக்கு கைகொடுப்போம் உரிமைக்கு குரல்’ கொடுப்போம் என்ற தாரக மந்திரத்தோடும், ஒன்றிய அரசு முறையாக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய அனைத்து வகையான சிறப்புகளையும் இடைமறித்து, தமிழகத்தின் வளர்ச்சியே குறைக்கின்றபோதும் நெஞ்சை நிமிர்த்தி ஒன்றிய அரசுக்கு ஒன்றியத்திலேயே சவால் விடுகிற முதலமைச்சரை கோழை எனக் கூறுபவர்கள், கோழை என்ற கூற்றுக்கு அர்த்தம் தெரியாத நபர்களாக தான் இருக்க முடியும்?

எந்த நிலையிலும் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் போற்றப்பட்டது உண்டு. ஒன்றிய அரசை மாநில உரிமைக்காக குரல் கொடுக்கக்கூடிய இரும்பு மனிதராக மத்தியிலே இருக்கக்கூடிய ஒரு முதன்மையான முதல்வர் தான் எங்கள் முதல்வர் என்பதை என அன்புமணி ராமதாஸ்க்கு தெரியப்படுத்தி கொள்கிறேன்” என்றார்.

=> மஹா சிவராத்திரிக்கான முன்னேறாபாடுகள் பணிகள் குறித்தான கேள்விக்கு,

“சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரவு முழுவதும் பக்தர்கள் கண்விழித்து சிவனைப் போற்றி வழிபடக்கூடிய நல்ல சூழலை உருவாக்கி இருக்கிறோம். இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், சிவபெருமானின் பெருமையை எடுத்துக் கூறுவது போன்ற பட்டிமன்ற பேச்சாளர்கள், சிறந்த பேச்சாளர்கள், கலைஞர்களை வைத்து இந்த முறை மஹா சிவராத்திரி கொண்டாடப்பட இருக்கிறது.

அனைத்து இடங்களிலும் சிறப்பாக வடிவமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. மயிலாப்பூரில் நானும், எம்.பி ஜெகத்ரட்சகன், மேயர் பிரியா மற்றும் அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் மயிலே தா.வேலு உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளோம். கூடுகின்ற பக்தர்களுக்கு தேவையான சொற்பொழிவுகள் நடத்துவதும், சேர்கின்ற பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து மருத்துவம் குடிநீர் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.” என்றார்.

Also Read: “நமது திட்டங்களால் வளமான நலமான தமிழ்நாடு நிச்சயம் உருவாகும்!” : முதலமைச்சர் உரை!