Politics

தலைமைத் தேர்தல் ஆணையரை பண்பற்ற முறையில் நியமனம் செய்துள்ளது ஒன்றிய பாஜக அரசு - முரசொலி விமர்சனம் !

முரசொலி தலையங்கம் (21-02-2025)

'பண்பற்ற நியமனம்'

இந்திய நாட்டின் 26 ஆவது தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். இவரது நியமனத்தை ‘பண்பற்ற நியமனம்’ என்று கண்டித்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

“புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நியமன நடைமுறை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் 48 மணி நேரத்துக்குள் விசாரணைக்கு வர உள்ள நிலையில், அந்தப் பதவிக்கு புதியவரைத் தேர்ந்தெடுத்து பிரதமர் மோடியும், அமைச்சர் அமித்ஷாவும் மேற்கொண்ட முடிவு பண்பற்ற நடவடிக்கை” என்று குற்றம் சாட்டி இருக்கிறார் ராகுல் காந்தி.

“புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்வுக் குழுவில் இருந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கி தேர்தல் நடைமுறையின் நேர்மை குறித்த கோடிக்கணக்கான வாக்காளர்களின் கவலையை மோடி அரசு அதிகப்படுத்தி உள்ளது” என்றும் ராகுல் சொல்லி இருக்கிறார். பா.ஜ.க. தலைமை இப்படி எல்லாம் நடந்து கொள்ளாமல் இருந்தால் தான் அதிர்ச்சி அடைய வேண்டும்.

எல்லா நிறுவனங்களையும் சிதைப்பதைப் போல, எல்லா நிறுவனங்களையும் தங்கள் கைத்தடியாக மாற்றுவதைப் போல, தேர்தல் ஆணையத்தையும் மாற்றுகிறார்கள். மாற்றி விட்டார்கள் என்பதன் அடையாளம்தான் ஞானேஷ்குமார் நியமனம் ஆகும்.

chief election commissioner Gyanesh Kumar

புதிய தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்க டெல்லியில் அதற்கான கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி இருந்தார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் ராகுல்காந்தி பங்கெடுத்தார். அமைச்சர் என்ற வகையில் அமித்ஷா இருந்தார். பிரதமர் – எதிர்க்கட்சித் தலைவர் – உச்சநீதிமன்ற நீதிபதி ஆகியோரால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை கடந்த முறையே மாற்றிவிட்டது பா.ஜ.க. அரசு. உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்கிவிட்டு, ஒன்றிய அமைச்சர் ஒருவர் என ஆக்கிக் கொண்டு விட்டார்கள். அந்த வகையில் பிரதமரும் – அமைச்சரும் நினைப்பவரை நியமிக்கலாம் என்று ஆக்கிக் கொண்டார்கள். செருப்புக்கு ஏற்ற மாதிரி காலை வெட்டிக் கொள்ளும் பாணி இது.

“பிரதமர் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால் தேர்தல் ஆணையக் குழு உறுப்பினர்களை நியமிக்கும் தற்போதைய அமைப்பு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை” என்று 2012 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியவர் அப்போதைய பா.ஜ.க. தலைவர் அத்வானி. அதற்கு மாறாக மோடி செயல்பட்டு வருகிறார். அத்வானியை வீட்டுக்குள் முடக்கியவர், அவர் சொன்னதை ஏற்பாரா என்ன?

இந்த வகையில் மோடி – ராகுல் – அமித்ஷா ஆகியோர் பங்கெடுத்த கூட்டம் கடந்த 17 ஆம் தேதி அன்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, “புதிய தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் 19ஆம் தேதி வர இருக்கிறது. எனவே புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனத்தை ஒத்தி வைக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

இதனை ஏற்றுக் கொள்ளவில்லை பா.ஜ.க. அரசு. உச்சநீதிமன்ற நீதிபதி இக்குழுவில் இடம் பெற்றால் தாங்கள் நினைப்பவரை நியமித்துக் கொள்ள முடியாது என்று நினைத்தார்கள். எனவே, 17ஆம் தேதி நள்ளிரவே ஞானேஷ்குமாரை, தலைமைத் தேர்தல் ஆணையராக நியமித்துவிட்டார்கள். ஏற்கனவே தேர்தல் ஆணையராக இருப்பவர் அவர். அவரே தலைமை ஆணையராக ஆகிவிட்டார்.

இந்த ஞானேஷ்குமார், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியவர். அமித்ஷாவுக்கு நெருக்கமானவர். அதனால்தான் தேர்தல் ஆணையர் ஆனார். இப்போது தலைமை தேர்தல் ஆணையராகவே ஆக்கப்பட்டு விட்டார்.

தேர்தல் ஆணையத்தை தனது கண்ட்ரோல் ஆணையமாக மோடி அரசு ஆக்கிவிட்டது. அதற்கு அவர்கள் எடுத்த முதல் நடவடிக்கை உச்சநீதிமன்ற நீதிபதியின் அதிகாரத்தையே பறித்தது ஆகும். தேர்தல் ஆணையத்தின் ரிமோட் ஆனது இப்போது பிரதமர் கையில்தான் இருக்கிறது. அப்படி இருந்தால் தேர்தல் நேர்மையாக நடக்குமா? நடத்த விடுவார்களா?

அமைச்சரவைச் செயலர் மற்றும் அரசுச் செயலர் பதவிக்குக் குறையாத இரண்டு அதிகாரிகள் கொண்ட தேடல் குழுவானது 5 பேரை தேர்வுக்குழுவுக்குப் பரிந்துரைக்க வேண்டும். அந்த ஐந்து பேரில் உள்ளவர்களையோ அல்லது அவர்களைத் தாண்டிய வேறு யாரையுமோ பிரதமர் தலைமையிலான தேர்வுக் குழுவானது தேர்வு செய்யலாம். இதுதான் இப்போதைய விதிமுறையாகும். இந்த வகையில் 2022 ஆம் ஆண்டு முதல் நடப்பவை அனைத்தும் மர்மமாகவே உள்ளன.

மிக சந்தேகத்துக்கு உரிய வகையில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் என்பவரது நியமனம் அப்போது நடந்தது. இவர் பஞ்சாப் மாநில அதிகாரி. இவர் 2022 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் நாள் திடீரென அவராக பதவி விலகினார். மறுநாளே இவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அருண் கோயல் நியமனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தாக்கல் செய்தார்கள். இது போன்ற முக்கியமான பணியிடத்துக்கான தேர்வை ‘கொலிஜியம்’ போன்ற அமைப்புதான் நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தார்கள்.

தேர்தல் ஆணையர் நியமனம் செய்வது தொடர்பான வழக்கு 2023 மார்ச் மாதம் உச்சநீதிமன்றத்தில் வந்தது. நீதியரசர் கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அதனை விசாரித்தது. அருண் கோயலின் நியமனத்தில் சந்தேகங்கள் இருப்பதாக நீதிபதிகள் சொன்னார்கள். தலைமைத் தேர்தல் ஆணையர், பிற தேர்தல் ஆணையர்களின் நியமனமானது சுதந்திரமாக நடைபெற வேண்டும் என்பதே உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கின் கோரிக்கை ஆகும். 2023 மார்ச் மாதம், அரசியல் சாசன அமர்வு தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.

“பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் ஆணையர்கள், தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்ய வேண்டும். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இல்லை என்றால், தனிப் பெரும்பான்மையுள்ள எதிர்க்கட்சியின் தலைவர், இந்தக் குழுவில் இடம்பெற வேண்டும். தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் வரை இந்த நடைமுறை தொடரும்.

ஜனநாயகத்தில் தேர்தல் எந்தவிதச் சந்தேகமும் இன்றி நியாயமாக நடைபெற வேண்டும். புனிதத்தன்மை காக்கப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் மோசமான விளைவுகள் ஏற்படும். அரசியல் சாசன அமைப்புக்கு உட்பட்டு தேர்தல் ஆணையம் சட்டப்படி செயல்பட வேண்டும். நியாயமற்ற முறையில் செயல்பட முடியாது. நியாயமான தேர்தலை தேர்தல் ஆணையத்தால் உறுதி செய்ய முடியவில்லை என்றால், ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் சட்ட விதிகளின் கீழ் அளிக்கப்பட்ட உத்தரவாதங்கள் சிதைந்து போகும்.

அரசியல் சாசனத்தின் 324–வது பிரிவில், தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் நியமனத்துக்கு சட்டம் இயற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்தச் சட்டத்தையும் நாடாளுமன்றம் நிறைவேற்றவில்லை” என்று அரசியல் சாசன அமர்வு கூறியது.

அதை மீறி – சட்டமீறல் கொண்ட சட்டத்தை – நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி விட்டார்கள். நீதியற்ற சட்டத்தைப் பின்பற்றி, ‘சட்டப்படி நடப்பதாக’ காட்டிக் கொள்கிறார்கள். ஆனாலும் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இப்போதும் இருக்கிறது. அதைப் பற்றி எல்லாம் மோடிக்கு கவலை இல்லை. சட்டமாவது, உச்சநீதிமன்றமாவது?!

Also Read: “தமிழ்நாட்டில் 4 ஆண்டுகளில் 40 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!